Thursday, November 23, 2017

யார் இந்த அன்புசெழியன்?

Published : 22 Nov 2017 18:48 IST

இணையதள செய்திப் பிரிவு



அன்புசெழியன் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் மதுரையிலிருந்து தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் என்று சொல்லலாம். தயாரிப்பாளர் ஒருவருக்கு பைனான்ஸ் தேவைப்பட்டால், அன்புசெழியனைத் தொடர்பு கொண்டால் போதும். உடனடியாக எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும், ரொக்கப் பணமாக வந்துவிடும் என்று சொல்லப்படுவதுண்டு.

இது குறித்து திரைத்துறையினர் சிலரிடம் விசாரித்தோம். அப்போது அவர்கள் கூறியதாவது:


''அன்புசெழியன் பணம் கொடுக்கக்கூடிய சமயத்தில் 3% வட்டி என்று கூறிவிடுவார். ஆனால் ஒப்பந்தம் எதையுமே போட்டுக் கொள்ளாமல், வெற்றுப் பத்திரத்தில் மட்டும் கையெழுத்திட்டுக் கொள்வார். 'உங்கள் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. ஒன்றும் பிரச்சினையில்லை பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறி வெற்றுக் காசோலை ஒன்றையும் வாங்கிக் கொள்வார். அன்று முதலே உங்களது படம் சம்பந்தப்பட்ட அனைத்தையுமே அன்புசெழியன் தான் முடிவு செய்வார்.

ஒரு மாதம் வட்டி கொடுக்க தாமதமானால் கூட, வட்டிக்கு ஒரு வட்டி போட்டுவிடுவார். ஒரு கட்டத்தில் உங்களால் வட்டி கட்ட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டவுடன் "உங்கள் படத்தை நானே வெளியிடுகிறேன்" என்று கூறி, படத்தின் விநியோக உரிமையை எழுதி வாங்கிக் கொள்வார். அந்த விநியோக முறைக்கு ஒரு கமிஷனும் போட்டுக் கொள்வார். பணம் கேட்டு வரும் மற்றொரு தயாரிப்பாளரிடம் "ஒரு படம் பார்த்தேன். அற்புதமாக இருக்கிறது. நீங்கள் வெளியிட்டால் கண்டிப்பாக வெற்றிதான்" என்று கூறி அவரிடம் படத்தையும் கொடுத்து கமிஷன் வாங்கிக் கொள்வார். அப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பணம் கொடுத்து, அதற்கும் வட்டி போட்டுக் கொள்வார்.

ஒவ்வொரு தயாரிப்பாளராக தன்னுடைய வட்டிக்கு அடிமையாகிக் கொண்டே செல்ல, இறுதியாக விநியோகஸ்தராகவும் உருவானார்.

மதுரையில் ஒரு படம் வெளியாக வேண்டுமானால், அது இவரால் மட்டுமே முடியும் என்று சூழல் வந்தது. அங்குள்ள அனைத்து திரையரங்குகளுமே இவருடைய கைக்குள்தான். இவருடைய பேச்சுக்கு கட்டுப்படாத திரையரங்குகளுக்கு பெரிய நடிகர்களின் படங்கள் கொடுக்கப்படாது. இதனாலே அனைவரும் இவரைத் தெய்வமாக பேசத் தொடங்கினர். ஆனால், அவரால் வரும் ஆபத்துகளை அவர்கள் அறியவில்லை'' என்றார் ஒரு விநியோகஸ்தர்.

வட்டி வாங்கும் விதத்தில் அன்புசெழியனின் ஸ்டைல் அதிர்ச்சியாகவும் அதிரடியாகவும் இருக்கும் என்று ஒரு திரை பிரமுகர் விரிவாகச் சொன்னார்.

''தமிழ் திரையுலகில் ஏ.வி.எம்.சரவணன், ஆர்.பி.செளத்ரி, ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே எவ்வித பைனான்ஸும் வாங்குவதில்லை. மற்ற அனைவருமே யாரிடமாவது பைனான்ஸ் வாங்கித்தான் படமே தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர்களாக மாறிய நடிகர்களுக்கு கடன் கொடுத்து வட்டி கட்ட முடியாமல் போனபோது, என் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்துக் கொடுங்கள் என்று கூறிவிடுவார். அப்படத்திற்கு சம்பளம் கிடையாது, கொடுக்க வேண்டிய பணத்தில் குறைத்துக் கொள்வார். ஆனால், தன்னுடைய நிறுவனத்தில் படம் நடிக்கும் போது கூட, அந்த மாதத்திற்கு வட்டி போட்டுவிடுவார். இது தான் அன்பு ஸ்டைல்.

இவருடைய தயாரிப்பில் வெளியான படமொன்றை கார்ப்பரேட் நிறுவனமென்று தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றியது. ஆனால், பணம் கொடுக்கவில்லை. நீண்ட நாட்கள் பார்த்துவிட்டு, காலையில் மும்பைக்கு சென்று மாலையில் மொத்த பணத்தோடு திரும்பியவர் அன்புசெழியன். கார்ப்பரெட் நிறுவனங்கள் என்றாலே ஒருத்தருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றால் அனைவரது ஒப்புதலுடன் கொடுக்க முடியும். அது ஒரே நாளில் நடக்காது. ஆனால் போனவர் பெயர் அன்புசெழியன். அவர் டீல் செய்யும் விதமே வேற மாதிரி இருக்கும்'' என்றார்.

அன்புசெழியன் மட்டுமல்ல, அவர் தம்பி அழகரும் இதில் முக்கியப் புள்ளி என்றார் ஒரு தயாரிப்பாளர்.

''வட்டி கட்ட முடியாமல் தயாரிப்பாளர்கள் எதிர்த்து பேசத் தொடங்கிய போது மட்டுமே அன்புசெழியனின் தம்பி அழகர் தலை காட்டுவார். அழகரின் ஸ்டைல் என்பது ஆவேசம் காட்டுவது, தயாரிப்பாளர்களின் வீட்டுக்குச் சென்று பெண்களை மிரட்டுவது, தயாரிப்பாளர்களின் அப்பா - அம்மாவை பயமுறுத்தியவது என நீளும். இதற்குப் பயந்து மீண்டும் தயாரிப்பாளர்கள் அன்புசெழியனை சந்திக்கச் செல்வார்கள். அப்போது "ஒன்றும் பிரச்சினையில்லை. வட்டி அதிகமாகிவிட்டது. மற்றொரு படக்குழுவை இறுதி செய்யுங்கள். இப்படத்திலுள்ள வட்டியை எல்லாம் அப்படத்தில் இணைத்துக் கொள்கிறேன். அப்படத்திற்கும் பைனான்ஸ் தருகிறேன்" என்று இனிப்பாகப் பேசுவார்.

இதற்கு மயங்கிய சில தயாரிப்பாளர்களும் செய்வார்கள். மீண்டும் வட்டி, அதற்கொரு வட்டி என மீளமுடியாத கடனுக்கு தள்ளப்படுவார்கள். அப்போது தம்பி அழகரை விட்டு மிரட்டி, அவர்களிடம் உள்ள மொத்த சொத்துகளையும் எழுதி வாங்கிவிடுவார். அப்போது கூட இந்த சொத்துகள் எல்லாம் அசலுக்கு ஒகே. வட்டிக்கு? என்ற கேள்வியை போட்டுவிட்டு செல்வார். வாழ்க்கை முழுவதும் நீங்கள் அன்புசெழியனுக்கு வட்டிகட்ட வேண்டும்.

விநியோகஸ்தர் கூட்டமைப்பிலும் அன்புசெழியனின் ஆட்களே இருப்பதால், பிரச்சினை என்று எங்குமே செல்ல முடியாது. அரசியல் மற்றும் காவல்துறை என எங்குமே அன்புசெழியனின் கை ஒங்கியே இருக்கும். ஒருமுறை காவல்துறையில் இவரைக் குறித்து புகார் அளித்துவிட்டு வெளியே வந்தவருக்கு தொலைபேசி வாயிலாக 'என்ன சார்.. புகார் கொடுத்திருக்கீங்களா?' என்று கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்'' என்றார் அந்தத் தயாரிப்பாளர்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக அன்புசெழியனிடம் தான் பைனான்ஸ் வாங்கி படம் தயாரித்து வந்தார்கள். 'உத்தமவில்லன்' திரைப்படம் கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அப்படம் வெளியீட்டு பஞ்சாயத்து நடைபெறும்போது, அன்புவின் வட்டி கணக்கைப் பார்த்து ஆடிப் போய்விட்டார் லிங்குசாமி. 'ரஜினி முருகன்' படத்தைப் பார்த்துவிட்டு, படம் நன்றாக இருக்கிறது. கண்டிப்பாக வெளியிட்டு உங்களுடைய பணத்தில் குறைத்துக் கொள்ளலாம் என்று கூறி வெளியிட்டார். படமும் மிகப்பெரிய வெற்றி. ஆனால், அதற்குப் பிறகு அன்புசெழியனிடமிருந்து இதுவரை எந்தவொரு கணக்குகளுமே வரவில்லை.

'ரஜினி முருகன்' வெற்றிக்கு கண்டிப்பாக லிங்குசாமி கொடுக்க வேண்டிய பணத்தில் சுமார் 70% கழிந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கடன் அப்படியே இருக்கிறது. 'இடம் பொருள் ஏவல்' உள்ளிட்ட அவருடைய எந்தவொரு தயாரிப்பு படத்தையுமே வெளியிட முடியாமல் தவித்து வருகிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.

இதற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது, ''எனக்கு இவ்வளவு பணம் தர வேண்டும் என்று லேப்பில் அன்புழெசியன் குறிப்பிட்டு வைத்திருக்கிறார். அவரிடமிருந்து தடையில்லா சான்று வாங்கினால் மட்டுமே படம் வெளியாகும். பெரிய நடிகர்களிடம் படம் தயாராகும் போது, தயாரிப்பாளருக்கு பணம் தேவையே இல்லாவிட்டால் என்றாலும் கூட, அன்புசெழியனிடமிருந்து போன் வரும். பணம் வாங்கினால், படம் தயாராகி ஃபர்ஸ்ட் காப்பி எடுக்கும் வரை எந்தவொரு பிரச்சினையுமே செய்ய மாட்டார்.

படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் போதுதான், அன்புசெழியனின் வட்டிக்கணக்கு வரும். அப்போது தான் அவருடைய விஸ்வரூபம் தெரியும். இந்த வட்டிக்கு மதுரை ஏரியா, இந்த வட்டிக்கு தொலைக்காட்சி உரிமை, இந்த வட்டிக்கு வெளிநாட்டு உரிமை என எழுதி வாங்கிக் கொண்டு இறுதியாக தயாரிப்பாளரின் கையில் ஒன்றுமே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்'' என்றார்கள்.

தற்போது தமிழ் திரையுலகில் அன்புசெழியனிடம் மாட்டிக் கொண்டு பல்வேறு தயாரிப்பாளர்கள் தத்தளித்து வருகிறார்கள். தமிழ் திரையுலக சங்கங்களும், பைனான்ஸியரை எதிர்த்து எப்படிக் குரல் கொடுப்பது என்று அமைதியாகி விடுகின்றன. இந்த அமைதி பல ஆண்டுகளாக நீடித்து வந்ததால்தான் 2003-ம் ஆண்டில் மணிரத்னம் சகோதரர் ஜி.வி. தற்கொலை செய்துகொண்டார். ஜி.வி. தற்கொலையின் போதே அன்புசெழியனின் பெயர் அடிபட்டது. அதை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டதாலோ என்னவோ இப்போது இன்னொரு உயிர் பலியாகி இருக்கிறது.

அன்புசெழியனின் பிடியில் 60க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடமுடியாமல் உள்ளதாக சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...