பொறியியல் மாணவி தற்கொலை கண்டித்து வன்முறை: சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு ஜன.1 வரை விடுமுறை அறிவிப்பு
By DIN |
Published on : 23rd November 2017 08:30 AM |
சென்னை: பொறியியல்
மாணவி தற்கோலை கண்டித்து மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதன் எதிரொலியாக
சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு ஜன.1 வரை விடுமுறை அறிவித்துள்ளது
பல்கலைக்கழக நிர்வாகம்.
சென்னை அருகே தனியார் சத்யபாமா பொறியியல்
கல்லூரி மாணவி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ஆத்திரமடைந்த
மாணவ, மாணவியர் கல்லூரி, விடுதிகளில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கி தீ
வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்
ஸ்ரீலிங்கபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ரெட்டி மகள் துருவ ராகமௌனிகா
(19), சென்னை செம்மஞ்சேரி தனியார் பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு
மாணவி. கல்லூரி விடுதியில் புதன்கிழமை மௌனிகா தனியாக இருந்தாராம். நண்பகல்
வகுப்பு முடித்து வந்த மாணவிகள், மௌனிகா அறையில் தூக்கிட்டு இறந்து
கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். செம்மஞ்சேரி போலீஸார் வழக்குப்
பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், மௌனிகா
கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் காப்பியடித்ததாகவும், அதை ஆசிரியர்கள்
கண்டித்ததால் மனமுடைந்து காணப்பட்டது தெரியவந்தது.
தகவல் அறிந்த கல்லூரி மாணவ, மாணவியர்
வகுப்பறைகள் மற்றும் விடுதியில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கி தீ
வைத்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அப்பகுதிக்குச் சென்று தீயை
அணைத்தனர். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அப்பகுதியில்
போடப்பட்டது.
இந்நிலையில், சத்யபாமா பொறியியல்
கல்லூரிக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக டிசம்பர் 6-ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று பிறகு
விடுமுறை அளிக்கப்படும். இப்போது வன்முறை காரணமாக முன்கூட்டியே விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிக்கு வந்த மாணவர்கள் இன்று
பாதியிலேயே அனுப்பி வைக்கப்பட்டனர். ஜனவரி 2-ம் தேதி முதல் மீண்டும்
செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment