ஒற்றைக் குழந்தை முறை
By எஸ்ஏ. முத்துபாரதி | Published on : 23rd November 2017 01:43 AM |
இனிவரும் தலைமுறையினருக்கு அரிதிலும் அரிதாகத் தென்படும் வார்த்தைகளாக இருக்கப்போவது பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, தாத்தா, பாட்டி, கொழுந்தனார், நாத்தனார் முதலிய வார்த்தைகள்.
மாமா, அத்தை என்பது பொதுவாக அனைவரையும் அழைப்பதால் யார் உறவுமுறை மாமா, நட்புக்கான மாமா எனத் தெரியாமல் போய்விடும்.
தாத்தா, பாட்டி, சம்பந்தி போன்ற உறவுகளை கண்களில் காண்பது அரிதாகி, ஆண்டுக்கு ஒருமுறை தங்களின் பிறந்த நாள், திருமண நாளில் அவர்கள் இருக்கும் முதியோர் இல்லம் சென்று சந்தித்து ஆசிபெறும் தினமாக மாறும்.
கிட்டத்தட்ட மேலைநாட்டுக் கலாசாரம் முழுவதும் நம்மை ஆட்கொள்ளும் நிலைதான் தற்பொழுது. தனிமனித சட்ட பாதுகாப்பு ஒன்றைத் தவிர 18வயது வரை வேறு வழியின்றி குழந்தைகள் நம்மோடு இருப்பார்கள். அதுவும் விரும்பியா விரும்பாமலா என்பது நமது நடவடிக்கையைப் பொருத்தது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்திலிருந்து பத்துவரை இருக்கும்; இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டில் குழந்தைகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஆறு வரை இருக்கும்.
ஆனால், கடந்த ஐந்து அல்லது பத்தாண்டுகளில் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைதான் அல்லது அதிகபட்சமாக இரண்டு குழந்தைகள்தான் இருக்கும். இது தற்போது ஒற்றைக் குழந்தை கலாசாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதை ஒரே குழந்தை என பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் பொதுவாக, தாங்கள் பெற்ற குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்து கல்வி, வேலை, திருமணம், வீடு, வாகன வசதி என அமைத்துக் கொடுப்பதை நினைத்து அனைத்து பெற்றோரும் பெரிய சுமையாக நினைத்துத் தங்களின் குழந்தை பெறும் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டனர். உண்மையில் குழந்தைகளை முறையாக வளர்த்துவிட்டாலே போதும், அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
அதற்காக குடும்ப சூழல் தெரியாமல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை. குழந்தைகள் அவர்களுக்குள் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்கிற உறவுகளோடு இருக்கும்பொழுது அவர்களுக்குள் நல்ல மனப்பாங்கு இருப்பதை நம்மால் உணர முடியும்.
இதை எந்தப் பள்ளிக்கூடத்திலும் கற்றுக் கொள்ள முடியாது. குடும்பத்தில் நல்லது - கெட்டது என்றால் அக்கா வீட்டிற்கோ தங்கை வீட்டிற்கோ சென்று உதவுவது அல்லது அண்ணன் வீடு, தம்பி வீடு என சென்று வருவது, அவர்களின் உதவி கிடைப்பது, அவர்களோடு இன்ப - துன்பங்களைப் பகிர்ந்து வாழ்வது என்பதெல்லாம், நம் வாழ்வில் கிடைக்கக்கூடிய அரிய அனுபவங்கள்.
ஒரு குழந்தை இருக்கும் வீட்டில் அவர்கள் இந்த அனுபவங்களை தங்கள் வாழ்நாளில் காணவே முடியாது. எனவேதான், இன்றைய குடும்ப அமைப்புகளில் உறவு எனச் சொல்லிக்கொள்ள குறைந்தது இரண்டு முதல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப குழந்தைகளின் எண்ணிக்கை அமையலாம்.
அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி, வேலை, திருமணம், வீடு, வாகனம் முதலிய அளவீடுகளை நாமே நிர்ணயித்துக் கொண்டதால்தான், நமக்குள்ளாக ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை காரணமாகக் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டோம்.
இருப்பினும் வேறொரு நோக்கத்தில் இந்தச் சமூக சூழலை நாம் அணுக வேண்டியுள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என இருக்கும் குடும்பத்தில் வாழ்ந்து பழகியவர்கள் தங்கள் வாழ்வில் மிகுந்த பொறுப்புணர்வு கொண்டும், வாழ்க்கையில் எவ்வித சூழல் அமைந்தாலும் சமாளித்துச் செல்லும் திறனும் இயற்கையாகவே பெற்று விடுகின்றனர்.
காரணம், அவர்களின் வளர்ந்து வரும் சூழல் அத்தகையது. பல குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் குடும்பத்தில் அடிக்கடி விருந்து, விசேஷம், பண்டிகை, கொண்டாட்டம் எனப் பலவித உறவுப் போக்குவரத்தினை பார்த்துப் பழக்கம் ஏற்படுகிறது. உறவு முறைகளைப் பராமரிக்கும் முறையையும் கற்றுக் கொள்கின்றனர்.
இதனால், உறவினர்களுக்கு மத்தியில் எப்பொழுதும் ஓர் இணக்கமான சூழல் நிலவுகிறது. ஏதாவது ஒரு குடும்பத்தில் யாருக்காவது நல்லது அல்லது கெட்டது நடந்தால் அனைவரும் துணைநின்று உதவுகிறார்கள். இப்படியான கட்டமைப்பு இன்றைய சூழலில் கேள்விக்குறியாகி விட்டது.
குழந்தைகள் விடுமுறை காலங்களில் உறவினர் வீடுகளுக்குச் செல்லும் இப்படியான அணுகுமுறைகளை இன்றைய தலைமுறையினர் மறந்து, தங்கள் விடுமுறை காலங்களை தொலைக்காட்சி முன்பும் கணினி முன்பும் அமர்ந்து செலவிட்டு என்னதான் கற்றுக் கொண்டாலும், நேரடியாகச் சென்று கிடைக்கும் அனுபவத்திற்கு ஈடாகாது.
இன்றைய குடும்ப சூழல் சுயநலத்தின் உச்சமாகவே காணப்படுகிறது. முன்பு உறவுகளின் அன்பில் வளர்ந்த விதம், அதனால் ஏற்பட்ட நிம்மதி, மகிழ்ச்சி தற்போது குறைந்துள்ளது. ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில் தனித்தனித் தீவுகளாக வசிக்கும் நிலை.
உறவுகள் சுருங்கி, உறவு முறைகளும் சுருங்கி, வாழ்க்கை முறையும் சுருக்கி, மனதும் சுருங்கி மனிதப் பண்புகளை இழந்து சற்றேறக்குறைய இயந்திரங்களாக வாழும் நிலை.
உறவுகள் அதிகமில்லாத சூழலில் வளரும் குழந்தைகள் ஒருவித தனிமைச் சூழலை விரும்பும் மனப்பான்மையில் இருப்பார்கள். கூட்டமாக சந்தோஷமாக இருக்கும் சூழலை விரும்பமாட்டார்கள்.
எனவே, கூடுமானவரை குழந்தைகள் தங்கள் உடன்பிறப்புகளுடன் வளரும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும். உறவுகளும் இருக்க வேண்டும், அவர்களுக்குள் மனமகிழ்ச்சியான போக்குவரத்தும் இருக்க வேண்டும். உறவுகள் பராமரிக்கப்படவும் வேண்டும்.
தொழில்நுட்ப வசதியில் உலகம் சுருங்கிவிடலாம், ஆனால் உறவுகள் சுருங்கிவிடக் கூடாது. உடன்பிறப்பு என்பது நமக்காக மட்டுமல்ல, நமது குழந்தைகளுடனான உறவுமுறைகள் தொடரவும் அளிக்கும் நல்வாய்ப்பாகும்.
No comments:
Post a Comment