Tuesday, November 28, 2017

தலையங்கம் 

பிளஸ்–1 மாணவர்களுக்கும் ‘நீட்’ பயிற்சி




தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், 10 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், 10 நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 6 ஆயிரம் மாணவர்கள் நீட்தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்காக சேர்க்கப்பட்டனர்.

நவம்பர் 28 2017, 03:00 AM
தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், 10 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், 10 நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 6 ஆயிரம் மாணவர்கள் நீட்தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்காக சேர்க்கப்பட்டனர். இதில், 3,377 மாணவர்கள் அரசாங்க கோட்டாவில் சேர்க்கப்பட்டனர். நீட்தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குபெற தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. ஆனால், முடியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு, பட்டபடிப்பிலும், பட்டமேற்படிப்பிலும் விலக்கு அளிக்க வகைசெய்யும் வகையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைப்பதற்காக மத்திய அரசாங்கத்தின் துறைகள் அதற்கு பரிந்துரை செய்யாததால், கட்டாயமாக நீட் தேர்வு எழுத வேண்டியநிலை ஏற்பட்டது.

எனவே, இந்த ஆண்டு நீட்தேர்வின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடந்தது. நீட்தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை கொண்டதாகும். மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களால் நிச்சயமாக நீட்தேர்வை எதிர் கொள்ளமுடியாது. இந்த ஆண்டு கூட 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 2,503 எம்.பி.பி.எஸ். இடங்களில், அரசு பள்ளிக்கூடங்களில் படித்த 2 மாணவர்கள் மட்டுமே சேரமுடிந்தது. மேலும், 3 மாணவர்கள் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் அரசாங்க கோட்டாவில் சேர்ந்தனர். ஆக, அரசு பள்ளிக்கூடங்களில் படித்த 5 மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேரமுடிந்தது. வருகிற ஆண்டிலும் நீட்தேர்வு மூலம்தான் மருத்துவக்கல்லூரிகளிலும், பல் மருத்துவக்கல்லூரிகளிலும் சேர முடியும் என்ற நிலைமையை புரிந்து கொண்டு, தமிழக அரசு அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மாணவர்களுக்கு நீட் தேர்வுப்பற்றி பயிற்சி அளிப்பதற்காக பயிற்சி வகுப்புகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து, அதற்கான நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

இந்தத்திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவர்கள் பயிற்சிகளை பெறமுடியும். இந்த பயிற்சிக்காக 73 ஆயிரம் மாணவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். ஒரு பஞ்சாயத்து யூனியனுக்கு ஒரு மையம் என்ற விகிதத்தில், 412 மையங்கள் இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக 100 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத்திட்டத்தின்கீழ் பிளஸ்–2 வகுப்பு மாணவர்கள் மட்டுமே இந்த ஆண்டு மையங்களில் சேர்ந்து இலவச பயிற்சியை பெற முடியும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரையிலும், பொதுத்தேர்வு முடிந்தபிறகு தினந்தோறும் இதேநேரத்தில் நடத்தப்படுகிறது. மாணவர்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் பெறாமல், பிளஸ்–2–க்கு பிறகு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேரவிரும்பும் மாணவர்களுக்கு முற்றிலும் இலவச பயிற்சி அளிக்க அரசு தொடங்கியுள்ள முயற்சி பாராட்டுக்குரியது. இந்த மையங்களில் வீடியோ கான்பரன்சிங் முறைகளில் இந்த பயற்சி அளிக்கப்படுகிறது. இப்போது 100 மையங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது போதாது. இப்போது நவம்பர் முடியப்போகிறது. மார்ச் மாதம் பிளஸ்–2 தேர்வு நடக்கும் நிலையிலும், மே மாதம் நீட்தேர்வுகள் நடக்கும் நிலையிலும், மீதமுள்ள 312 மையங்களை உடனடியாக தொடங்க வேண்டும். வீடியோ கான்பரன்சிங் சிலநேரங்களில் தெளிவாக இல்லை. எல்லோருக்கும் சந்தேகம் கேட்கமுடியவில்லை என்று ஒரு குறைபாடு உள்ளது. இந்த குறைகளையெல்லாம் நீக்குவதற்கு கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மேலும், நீட்தேர்வில் பிளஸ்–1 பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படுவதால், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்தே பிளஸ்–1, பிளஸ்–2 வகுப்பு மாணவர்களுக்கு இந்த பயிற்சி மையத்தை தொடங்கவேண்டும். ஒரு பஞ்சாயத்து யூனியனுக்கு ஒரு மையம் என்றால் தூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு குறிப்பாக, ஏழை மாணவர்கள் பயிற்சியில் கலந்துகொள்வது சற்று சிரமமான காரியமாகும். எனவே, அடுத்த ஆண்டு முதல் மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.
திருவாரூர் அருகே மாணவர் முடியை பிளேடால் அறுத்து அவமதித்த ஆசிரியை கைது

2017-11-28@ 00:35:34


திருவாரூர்: திருவாரூர் அருகே பள்ளி மாணவர் முடியை பிளேடால் அறுத்து அவமதித்த அரசு பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார். மேலும் துறை ரீதியாக தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டார். திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி சுந்தர் மகன் சுரேந்தர்(13). அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 25ம்தேதி பள்ளிக்கு சென்ற மாணவன் சுரேந்தரிடம் தலை முடியை ஏன் வெட்டவில்லை என்று கேட்ட வகுப்பு ஆசிரியை விஜயா (40) வேறொரு மாணவனை விட்டு பிளேடு வாங்கி வரச்செல்லி சுரேந்தர் தலை முடியினை அரைகுறையாக அறுத்து அவமானப்படுத்தினார். இதனையடுத்து பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை பெற்றோரிடம் கூறி அழுதார். ஆத்திரமடைந்த மாணவனின் தந்தை சுந்தர் இதுகுறித்து கொரடாச்சேரி போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் போலீசார் நேற்று ஆசிரியர் விஜயா மீது கொடுங்காயம் ஏற்படுத்துதல் மற்றும் சிறுவர்களை கொடுமைப்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். நன்னிலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேசபெருமாள் முன் ஆஜர்படுத்தி திருவாரூர் பெண்கள் கிளை சிறையில் அவரை அடைத்தனர்.இந்த சம்பவம் மட்டுமின்றி ஆசிரியை விஜயா ஏற்கனவே கடந்த ஒரு வாரத்திற்கு முன் இதே மாணவனை தலையில் எண்ணை தடவி வரவில்லை என்ற காரணத்திற்காக சத்துணவு சமையல் அறையில் இருந்த பாமாயில் எண்ணையினை எடுத்து அவனது தலையில் ஊற்றியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சத்துணவு சாப்பிடுவதற்காக மாணவர்கள் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு வரிசையில் நிற்க முயன்றதை கண்ட ஆசிரியை விஜயா அவர்களது சாப்பாட்டு தட்டினை வாங்கி அதில் எச்சிலை துப்பியுள்ளார், அதற்கு முன்னதாக மாணவி ஒருவர் கிழிந்த சீருடையில் ஊக்கை போட்டு வந்ததற்காக அந்த சீருடையை பிடித்து கிழித்துள்ளார் என பெற்றோர்கள் தரப்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இந்த புகார்களை தொடர்ந்து ஆசிரியை விஜயா மீது உடனே விசாரணை நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதனுக்கு நேற்று கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் ஆசிரியை விஜயா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: விரைவில் ரூ.100ஐ தொடும் அபாயம்

2017-11-27@ 00:50:45

மும்பை: வெங்காயம் விலை கடந்த சில நாட்களில் கடுமையாக அதிகரித்துள்ளது. சில்லறை சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.65 ஆக அதிகரித்துள்ளது. விரைவில் இந்த விலை ரூ.100 ஆக அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் வாஷியில் உள்ள ஏ.பி.எம்.சி. மொத்தச்சந்தைக்கு தினமும் 150 லாரிகளில் பெரிய வெங்காயம் வரும். ஆனால் இப்போது வெறும் 90 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வருகிறது. வெங்காயத்தின் வரத்து குறைவு காரணமாக விலையும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பருவ மழை நீடித்ததால் வெங்காய பயிர்கள் மோசமாக பாதிக்கப்பட்டது. புதிய வெங்காயத்தின் வரத்து தொடங்கி விட்டபோதிலும் அது மும்பையின் தேவைக்கு போதுமானதாக இல்லை. இன்னும் 20 நாட்கள் கழித்துதான் முழு அளவில் காரிப் பருவ வெங்காயத்தின் வரத்து இருக்கும் என்று கருதப்படுகிறது.

வாஷி மொத்த சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 48 ரூபாய் அளவுக்கு விற்பனையாகிறது. சில்லரைச் சந்தையில் 65 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஏ.பி.எம்.சி. மொத்தச்சந்தையின் முன்னாள் இயக்குனர் அசோக் இதுகுறித்து கூறுகையில், ‘‘இரண்டு வாரமாக வெங்காயத்தின் விலை ஒரே சீராகத்தான் இருந்தது. ஆனால் திடீரென ஒரே நாளில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. விவசாயிகளின் முதல்கட்ட பெரிய வெங்காய பயிர்கள் நீடித்த பருவமழை காரணமாக சேதம் அடைந்தது. இதனால் அக்டோபர் மத்தியில் வழக்கமாக வரக்கூடிய வெங்காயம் வரவில்லை. இரண்டாம் கட்ட வெங்காயம் சந்தைக்கு டிசம்பர் மத்தியில்தான் வரும். அதுவரை அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து விலை உயர்வு இருந்துகொண்டுதான் இருக்கும். சில்லறை விலையில் ரூ.100 வரை உயரக்கூடும்’’ என்றார்.

புதிய வெங்காயம் ஒரு கிலோ 42 ரூபாய் வரையும், பழைய வெங்காயம் 48 ரூபாய் வரையும் இரண்டு நாட்களுக்கு முன்பு விற்பனையானது. புதிய வெங்காயத்தில் அதிக அளவு சேதம் அடைந்த வெங்காயம் இருக்கிறது. மொத்த சந்தையில் கடந்த வாரம் 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் இப்போது 45 முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக காலம் தவறிய மழை காரணமாக வெங்காய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முட்டை விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் வெங்காயம் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. வெங்காயம் அதிகம் விளையும், மகாராஷ்டிராவிலும், கர்நாடகாவிலும் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், அது நாடு முழுவதும் விலை உயர்வை ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளது.
தமிழகத்தின் சவுமியாவுக்கு மத்திய அரசு ஒப்புதல்

2017-11-28@ 01:26:38

புதுடெல்லி : பிரதமர் மோடி தலைமையில் பணி நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று கூடியது. இதில், சென்னையைச் சேர்ந்தவரான சவுமியா சுவாமிநாதன் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 2019 நவம்பர் 18ம் தேதி வரை உலக சுகாதார அமைப்பின் துணை டைரக்டர் ஜெனரல் பதவியை ஏற்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

சவுமியா சுவாமிநாதன் தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் டைரக்டர் ஜெனரலாக பதவி வகிக்கிறார். இவர் கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பின் துணை டைரக்டர் ஜெனரலாக தேர்வு செய்யப்பட்டார்.
உடைந்து தொங்கிய அரசு பஸ் படிக்கட்டு

Added : நவ 27, 2017 23:09

நெல்லிக்குப்பம்: அரசு போக்குவரத்துக் கழக பஸ்சின், பின் பக்க படிக்கட்டு உடைந்து தொங்கிய நிலையிலும், தொடர்ந்து இயக்கப் பட்டதால், பயணியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விழுப்புரத்தில் இருந்து, கடலுார் வழியாக சிதம்பரத்திற்கு, நேற்று காலை புறப்பட்ட அரசு பஸ்சில் பயணித்தவர்களுக்கு ஒரு திகல் பயணமாக அமைந்தது. 


விழுப்புரத்தில் பஸ் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, பஸ்சின் பின் பக்கத்தில் இருந்த, கடைசி படிக்கட்டு உடைந்து தொங்கியது. அதிர்ஷ்டவசமாக கடைசி படிக்கட்டில் பயணியர் யாரும் நிற்காததால், விபத்து தவிர்க்கப்பட்டது.


இருப்பினும், படிக்கட்டு உடைந்த நிலையிலேயே, பஸ் தொடர்ந்து இயக்கப்பட்டது. இதனால், பயணியர் கீழே இறங்கவும், ஏறவும் மிகவும் சிரமம் அடைந்தனர்.
ரயில் தண்ணீர் எச்சரிக்கை

Added : நவ 28, 2017 00:27

சபரிமலை: ரயிலில் வரும் சபரிமலை பக்தர்கள் உணவு மற்றும் தண்ணீரை ரயில்களிலும், பிளாட்பார கடைகளிலும் வாங்குகின்றனர். இவ்வாறு பக்தர்களுக்கு வழங்கும் போது,
கூடுதல் கவனம் வேண்டும் என்று திருச்சூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இருந்து
ரயில்வேக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் கவனமாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுஉள்ளது. குடிநீரில் விஷம் கலக்க வாய்ப்பு
உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும், எனவே உணவு, குடிநீர் ஆகிய
வற்றில் கவனம் செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இந்த கடிதம் எப்படி வெளியானது என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், இது வழக்கமான கடிதம் தான் என்று போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


தினகரன் கோஷ்டி எம்.பி.,க்கள் அணி மாறினர் : முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்

Added : நவ 27, 2017 23:43



தினகரன் ஆதரவு, எம்.பி.,க்கள் மூன்று பேர், நேற்று முதல்வர் பழனிசாமியை, அவரது வீட்டில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர். இது, சசிகலா குடும்பத்தினரிடம், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,விலிருந்து விலக்கப்பட்ட தினகரன், தனி அணியாக செயல்பட்டு வந்தார். அவருக்கு, 20 எம்.எல்.ஏ.,க்களும், ஆறு எம்.பி.,க்களும், நான்கு மாவட்ட செயலர்களும், ஆதரவு தெரிவித்தனர். மற்ற, எம்.எல்.ஏ.,க்கள், தன் பக்கம் வராததால், ஆட்சியை கவிழ்க்க, தினகரன் முடிவு செய்தார்.அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களில், 18 பேர், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, கவர்னரை சந்தித்து, புகார் மனு அளித்தனர்.

தகுதி நீக்கம் : அதன் காரணமாக, அவர்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர், தனபால் உத்தரவிட்டார். தினகரனை நம்பி சென்றதால், 18 எம்.எல்.ஏ.,க்கள் பதவியை இழந்தனர்.
அதேபோல், தினகரனுக்கு ஆதரவாக செயல்படும், எம்.பி.,க்கள், நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த், கோகுலகிருஷ்ணன், நாகராஜன், செங்குட்டுவன், உதயகுமார் ஆகியோரை, பதவி நீக்கம் செய்யும்படி, பன்னீர் - பழனி அணி சார்பில், துணை ஜனாதிபதி மற்றும் லோக்சபா சபாநாயகரிடம், மனு அளிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க.,வும், அதன் இரட்டை இலை சின்னமும், பன்னீர் - பழனி அணிக்கு கிடைத்தது. இதனால், கட்சியும் ஆட்சியும், பன்னீர் - பழனி அணியினரின் முழு கட்டுப்பாட்டில் வந்தது. தற்போது, கட்சி எதுவும் இல்லாமல், தினகரன் தனி மரமாக உள்ளார். அவர், தன் அரசியல் வாழ்க்கையை தொடர, ஏதேனும் அரசியல் கட்சியில் இணைய வேண்டும் அல்லது புதிய கட்சி துவங்க வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எதிர்காலம் வீண் : இது, அவரது ஆதரவாளர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தினகரனை நம்பினால், தங்களின் அரசியல் எதிர்காலம் வீணாகி விடும் என்பதால், மீண்டும், அ.தி.மு.க.,விற்கு திரும்ப துவங்கி உள்ளனர். அதன்படி, தினகரன் ஆதரவு, எம்.பி.,க்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த், கோகுலகிருஷ்ணன் ஆகியோர், நேற்று மாலை, சென்னையில், முதல்வர் பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அவர்கள் அணி மாறியதாக, தகவல் வெளியானது.இதை, எம்.ஜி.ஆர்., மன்ற செயலர், தமிழ்மகன் உசேன் உறுதிப்படுத்தினார்.

எம்.பி.,க்கள் விஜிலா சத்தியானந்த், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில், 'இரட்டை இலை சின்னம் இருக்கும் இடத்தில் தான் இருப்போம்' என்றனர். இவர்களை பின்பற்றி, தினகரன் பக்கம் உள்ள மற்றவர்களும், அணி மாற திட்டமிட்டுள்ளனர்.தினகரனால் பதவி இழந்த, எம்.எல்.ஏ.,க்கள், உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதா அல்லது அதற்கு முன், அணி மாறலாமா என்ற, ஊசலாட்டத்தில் உள்ளனர்.

- நமது நிருபர் -

NEWS TODAY 08.07.2026