Sunday, January 14, 2018

'மருத்துவ கட்டணம் செலுத்தாத நோயாளியை சிறை பிடிப்பது குற்றம்'

Added : ஜன 14, 2018 01:27 |

  மும்பை:'மருத்துவ சிகிச்சை பெற்றதற்கான கட்டணத்தை செலுத்தாததற்காக, குணமான நோயாளியை பிடித்து வைப்பது சட்ட விரோதம்; மக்கள் அனைவரும், இதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்' என, மும்பை உயர் நீதிமன்றம் கூறிஉள்ளது.


மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில், இரு தனியார் மருத்துவமனைகளில், மருத்துவ கட்டணம் செலுத்தாத நோயாளிகளை, மருத்துவமனை நிர்வாகம் வெளியே விட மறுத்து, பிடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது


இது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தர்மாதிகாரி, பாரதிய தாங்ரே அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'உடல் நலன் குணமான நோயாளியை, கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தால் பிடித்து வைத்திருப்பது, சட்ட விரோதம்.'இதை, மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட வேண்டும். குணமான நபரை பிடித்து வைப்பது, தனிநபர் சுதந்திரத்தை மீறும் செயல்' என, கூறப்பட்டுள்ளது.


Saturday, January 13, 2018

3 ஏக்கரில் 21 வகை காய்கறி சாகுபடி... அசத்தும் ‘காய்’ சேகர்

Published : 11 Jan 2018 10:02 IST


வி.சுந்தர்ராஜ்


திருவலஞ்சுழியில் இயற்கை முறையில் விளைவித்த சிவப்பு முள்ளங்கி அறுவடை.

மலைப்பிரதேசத்தில் விளையும் காலிபிளவர் சமவெளிப் பகுதியில் விளைந்திருக்கும் அதிசயம்.



பல வகை காய்கறிகளை பயிரிட்டுள்ள தனது வயலில் சேகர்.

திருவலஞ்சுழியில் இயற்கை முறையில் விளைவித்த சிவப்பு முள்ளங்கி அறுவடை.

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பதெல்லாம் திருவலஞ்சுழி ‘காய்’ சேகர் கிட்ட செல்லாது. ஏன்னா, அவர் வழி, தனி வழி என்கிறார்கள் திருவலஞ்சுழி சுற்றுவட்டாரத்தினர்.

“ரெண்டு ஏக்கர்ல சம்பா சாகுபடி செஞ்சேங்க, முட்டுவுலி செலவு அம்பதாயிரம் ரூவா ஆச்சு, பருவத்துக்கு மழயும் பெய்யல, ஆத்துல தண்ணியும் இல்லை. காலேல எழுந்திருச்சு வயலைப் போய்ப் பாத்தா பச்சப் பசேல்னு இருக்க வேண்டிய பயிரெல்லாம் அறுவட காலத்துல இருக்கிறமாதிரி மஞ்ச கலருக்கு மாறிப்போயிக் கெடந்தா மனசு வலிக்குதுய்யா” என மனம் வெம்பித் தவிக்கும் விவசாயிகளுக்கு மத்தியில், மாற்றுப் பயிர் சாகுபடி- மகத்தான ஒன்றுதான் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் திருவலஞ்சுழி சேகர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே 3 ஏக்கர் நிலத்தில் 21 வகையான காய்கறிகளை, இயற்கை முறையில் சாகுபடி செய்து, அறுவடை செய்த இடத்திலேயே அவற்றை விற்பனையும் செய்து அசத்தி வருகிறார்.

கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழியைச் சேர்ந்த விவசாயி சேகர்(50). இவர் தன்னுடைய வயலில் கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் புதுமையான காய்கறிகளை பயிரிட்டு அதில் மகசூலும் பெற்று வருகிறார்.

3 ஏக்கர் நிலமும் வண்டல் மண். மலைப் பிரதேசங்களில் விளையும் காய்கறிகளான காலி ஃப்ளவர், முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், நூல்கோல், தரணிபூ, பீன்ஸ், புரோகோலி, பச்சைப் பட்டாணி, சிகப்பு முள்ளங்கி மற்றும் நாட்டு காய்களான தக்காளி, கத்தரிக்காய், பச்சை மிளகாய், அவரை, கொத்தவரை, வெண்டை, புடலை, பீர்க்கங்காய், சுண்டைக்காய், பாகற்காய் மற்றும் கீரைகள் ஆகியவற்றைப் பயிரிட்டு வருகிறார். போர்வெல் மூலம்தான் நீர்ப்பாசனம்.

திருவலஞ்சுழியைச் சேர்ந்த சிலர் கூறியபோது, “சேகர் வயல்ல விளையிற காய்கறி எல்லாமும் அவரோட வயலை ஒட்டிய சாலையோர பகுதியிலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டு, அன்றாடம் விற்று முதலாகிவிடுகிறது. பச்சைப் பசேல்னு காய்கறிகள வாங்குவதற்காக தினமும் அக்கம் பக்கத்து ஊர்கள்ல இருந்தும் சேகர் வயலுக்கு மோட்டார் சைக்கிள்ல வாராங்கன்னா பாத்துக்குங்களேன்” என்கின்றனர் ஆச்சரியத் துடன்.

ஊரெல்லாம் ஒரே பேச்சுங்கிற மாதிரி, யாரைக் கேட்டாலும் உங்களைப் பற்றி பெருமையா சொல்கிறார்களே என சேகரிடம் நாம் கேட்டோம். அப்போது அவர் கூறியது:

நான் கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிட்டு வருகிறேன். குறைந்த நாட்களில் அதாவது 70 முதல் 110 நாட்களுக்குள் விளையக்கூடிய காய்கறிகளை மட்டும் பயிரிட்டு வருகிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக மலைப் பிரதேச காய்கறிகளையும் பயிரிட்டேன். கடந்தாண்டு காலி ஃப்ளவர் பயிரிட்டேன், இந்தாண்டு புரோக்கோலியை பயிரிட்டுள்ளேன். மலைப் பிரதேச காய்கறிகள், காவிரி டெல்டாவில் உள்ள மண்ணிலும் நல்லபடியாகவே விளைகின்றன. 3 ஏக்கரில் 21 வகையான காய்கறிகளையும் 5 வகையான கீரைகளையும் பயிரிட்டுள்ளேன்.

எந்த உரமும் போடாமல், பூச்சிக் கொல்லி மருந்தும் தெளிக்காமல் இயற்கை முறையில் அதிக அளவில் மகசூலும் பெற்று வருகிறேன். பசுமையான காய்கறிகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியமானவை என பலரும் ஆங்காங்கே சொல்வதைக் கேட்டு தினமும் ஏராளமானோர் என்னுடைய வயலுக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். உரம், பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்தாததால் இடுபொருள் செலவு குறைவு. பாதிப்பு அதிகம் இல்லாததால் அதிக மகசூல், அதிக வருவாய் கிடைக்கிறது என்றார்.

இன்றைக்கு நெல்லைத் தவிர்த்து இதர மாற்றுப் பயிர் சாகுபடியைச் செய்ய டெல்டா விவசாயிகளுக்கு தயக்கம் உள்ளது. இந்த தயக்கத்தை விட்டுவிட்டால், விவசாயத்தில் அனைவரும் நல்ல வெற்றியைப் பெறலாம் என்ற சேகர், “ஆரம்பத்தில் நானும் நெல்லும், வாழையும்தான் பயிரிட்டேன். காய்கறி சாகுபடியில் கிடைக்கும் அதிக வருவாய், மன நிறைவை அடுத்து தற்போது முழுவதும் காய்கறிகளை மட்டுமே பயிரிட்டு வருகிறேன்” என கூறுகிறார் இந்த இயற்கை காய்கனி சாகுபடி விவசாயியான காய் சேகர்..
'ஆதார் இன்றி ஓர் அணுவும் அசையாது'

Published : 12 Jan 2018 10:52 IST
Updated : 12 Jan 2018 10:52 IST


புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு பிப். 15ல் விமான சேவை தொடக்கம்

Published : 12 Jan 2018 14:29 IST

ஐதராபாத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலிருந்து வரும் பிப்ரவரி 15 முதல் பெங்களூருக்கு கூடுதல் விமான சேவை தொடங்குகிறது. அதிக வரவேற்பு இருப்பதால் இச்சேவை தொடங்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரியில் லாஸ்பேட்டை யில் விமானநிலையம் அமைந்துள்ளது. கடந்த 2013 ஜனவரியில் புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டது.

புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்ட உடன் 2013 ஜனவரி 17-ம் தேதி ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கப்பட்டன. புதுவையில் இருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயங்கின. பயணிகள் எண்ணிக்கை குறைவால் விமான சேவை கடந்த 2014 பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி முதல் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கியது. இந்த விமான சேவையும் முன்னறிவிப்பு ஏது மின்றி 2015 அக்டோபரில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சிறு விமான நிலையங்களுக்கு உயிரூட்ட, உதான் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், புதுச்சேரி-ஐதராபாத் இடையே ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் மூலம் விமானப் போக்குவரத்து சேவை, புதுச்சேரி அரசு முயற்சியால் மத்திய அரசு அனுமதியுடன் தொடங்கப்பட்டது. அதன்படி புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்துக்கு விமானம் கடந்த ஆகஸ்ட் 15 முதல் இயக்கப்படுகிறது.

விமான சேவைக்கு வரவேற்பு இருப்பதால் வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் தொடங்குவதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தரப்பில் கூறியதாவது:

அதிக வரவேற்பு இருப்பதால் தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வரும் பிப்ரவரி 15ம் தேதியிலிருந்து கூடுதல் விமான சேவையை தொடக்குகிறது. பெங்களூரிலிருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு காலை 10.30க்குவந்தடையும். அதைத்தொடர்ந்து காலை 10.50 மணிக்கு புறப்படும் விமானம் காலை 12.10க்கு பெங்களூரூ சென்றடையும். கட்டணம் ரூ. 1600 என நிர்ணயிக்கத் திட்டமிட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டனர்.
பொங்கல் நாளில்... மங்கலம் பொங்கட்டும்!

Published : 12 Jan 2018 16:24 IST


வி.ராம்ஜி



உழவுத் தொழிலின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் உன்னதத் திருநாள்... பொங்கல் நன்னாள்! தை மாதம் தொடங்குவதற்குள் அறுவடை எல்லாம் முடிந்துவிடும். அறுவடை ஆனதை வைத்து, அனைத்து உயிர்களும் வாழ அருள் புரியும் தெய்வம் சூரிய பகவான்.

அன்றைய தினம், காலையில் எழுந்ததும் நீராடி, அதன் பிறகு பொங்கல் வைக்க வேண்டும். இந்த முறை ஞாயிற்றுக் கிழமை மாலையில்தான் மாதம் பிறக்கிறது. எனவே மாலை 4 மணிக்குத்தான் பொங்கல் வைக்க வேண்டும் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

புதிய பொங்கல் பானையைக் கிழக்குப் பக்கமாக வைத்து, அதில் கிழங்குகளுடன் கூடிய மஞ்சள் இலை, இஞ்சி இலை ஆகியவற்றைக் கட்டி வைக்க வேண்டும். பொங்கல் பானையில் ஈரமான அரிசி மாவினால் சூரிய- சந்திர வடிவங்களை வரைய வேண்டும். சிலர் அடுப்பைக் கூடப் புதிதாக வைப்பார்கள்.

பொங்கல் பொங்கி வழியும் போது, ‘பொங்கலோ பொங்கல்’ என்று குரலெடுத்து கூவி, வழிபடுவார்கள். சில இடங்களில் பொங்கல் பொங்கி வழியும் திசையை வைத்து, ‘நல்லது நடக்குமா? என்று தீர்மானிப்பார்கள். சமையல் முடிந்ததும், நைவேத்தி யப் பொருட்களையும் வைத்து சூரிய பூஜை செய்ய வேண்டும். சூரியனே பிரதான தெய்வம் இன்று. மேலும் ஞாயிற்றுகிழமை அதுவுமாக பொங்கல் வருகிறது. மாதமும் பிறக்கிறது.

முன்னதாக, கணபதி பூஜையை முடித்துக் கொண்டு பிறகே சூரிய பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ய வேண்டிய இடத்தில் (திறந்த வெளியில்) அரிசி மாவால் அழகாகக் கோலமிட்டு, கோலத்துக்கு வடக்குப் பக்கம் சூரியனையும், தெற்குப் பக்கம் சந்திரனையும் வரைந்து அந்த இடத்துக்கு அழகூட்டலாம். சாந்நித்தியம் பெருக்கலாம்!

தலைவாழை இலையில், சமைத்து வைத்ததை எல்லாம் போட்டுப் பிசைந்து, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் போடுகிற வழக்கம் சில ஊர்களில் உண்டு. அப்போதும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூவுவார்கள். பொங்கல் அன்று - பொங்கல் செய்த பானையையோ, சாதம் வடித்த பாத்திரத்தையோ காலி செய்யக் கூடாது என்பது ஐதீகம்!

பொங்கலுக்கு மறுநாள்... கணுப் பண்டிகை! பெண்களுக்கு உரிய பண்டிகை இது. பெண்கள், பொங்கல் பானையில் கட்டி வைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் இழைத்து தங்கள் நெற்றியில் தீற்றிக் கொள்வார்கள். இல்லாதபட்சத்தில் கணவனிடமே மஞ்சளைத் தந்து தங்களின் நெற்றியில் தீற்றச் செய்வார்கள்.

இரண்டு மஞ்சள் இலைகள் (அல்லது) வாழை இலைகளை, நுனி கிழக்கு முகமாக இருக்கும்படி வைத்து, நதிக்கரையிலோ, திறந்த வெளியிலோ கணுப்பிடி வைப்பார்கள்.

முன்னதாக, கணுப்பிடி வைக்கும் இடத்தைக் கோலமிட்டு, செம்மண் பூசி, அழகு செய்வார்கள். முதல் நாள் (மீதமிருக்கும்) சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து, மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம் என்று தனித்தனியே தயார் செய்து கொள்ளவேண்டும். சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும் .

ஒவ்வொரு வகை சாதத்தையும் ஏழு அல்லது ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும்படியாக, இலைகளில் மூன்று வரிசைகளாக வைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு வைத்து முடித்ததும் தீபம் ஏற்றி ஆராதனை செய்யவேண்டும்.

வெற்றிலை,- பாக்கு,பழம்,தேங் காய், கரும்பு, மஞ்சள் அட்சதை (முனை முறியாத அரிசி), பூக்கள் ஆகியவை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் தயாராக வைத்துக் கொள்ளவும். கணுப்பிடி வைக்கும் விடியற் காலை நேரத்தில் ராகு காலம், எம கண்டம் ஆகியவை இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. உதாரணத்துக்கு அன்று திங்கட்கிழமை. அதாவது 15ம் தேதி. ராகுகாலம் காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம் காலை 10.30 முதல் 12 மணி வரை!

அட்சதையையும் பூக்களையும் இட்டு (கணுப்பிடியாக வைத்த சாத வகைகளுக்கு), தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்த இலைகளையும் சூரிய பகவானையும் வணங்கி ஆரத்தி எடுங்கள். பிறகு கணுப்பிடி வைத்த சாதத்தை, நாய்- பூனை முதலான பிராணிகள் எச்சில் பண்ணாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கணுப்பிடி அன்று சமையலில் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியஞ் சாதம், தயிர் சாதம் முதலான சாத வகைகளும் அதாவது சித்ரான்னங்களும் அவியல் அல்லது கூட்டு, பாயசம், தேங்காய்த் துவையல், அப்பளம் முதலானவையும் இடம்பெறலாம் என்கிறார் பாலாஜி வாத்தியார். .

கணுப்பிடி வைத்த பெண்கள் அன்று இரவு சாப்பிட மாட் டார்கள் என்பது மரபு. இந்த நோன்பு உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப்படுகிறது (கணுப்பிடி). ஆதலால், ‘‘உடன்பிறந் தவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் நன்றாக, செளக்கியமாக இருக்க வேண்டும்!’’ என்று வேண் டிக் கொள்ளுங்கள். ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ என்று பழமொழியே உண்டு! கார்த்திகையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், பொங்கல் அன்று சமைத்த சாதத்தை, (பழையதை) மறுநாள் கணுப்பிடியாக வைப்பதும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காக என்பதே இந்தப் பழமொழியின் அர்த்தம்! .

பிறந்த வீட்டுச் சீராகப் பெண்களுக்குப் பணமோ, துணியோ வழங்குவார்கள். உள்ளூரிலேயே இருந்தால், , தாய் வீட்டுக்குப் போய் மதிய உணவு சாப்பிடுவார்கள்!

ஆக, பொங்கலை குடும்பத்தாருடனும் அக்கம்பக்கத்தாருடனும் உறவுகளின் மேன்மையின் பொருட்டும் கொண்டாடுங்கள்.

பொங்கும் மங்கலம், உங்கள் வீட்டில் பொங்கி வழியட்டும். பொங்கலோ பொங்கல்!

உத்தராயன புண்ய காலமும்... தைத் திருநாள் பொங்கலும்!

Published : 12 Jan 2018 16:50 IST

வி.ராம்ஜி
 


இந்தியா... ஆன்மிக பூமி என்று போற்றப்படும் தேசம். வேதங்களாலும் இதிகாசங்களாலும் புராணங்களாலும் பலம் கொண்டிருக்கும் புண்ணிய பூமி இது.

சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, சக்தி வழிபாடு, குமர வழிபாடு என பலப்பல வழிபாடுகள் இருந்தாலும் எல்லா வழிபாடுகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்... சூரியனார்! அதாவது சூரிய பகவான்! உலகுக்கே இருள் நீக்கி ஒளி கொடுக்கிற சூரிய பகவானை முன்னிறுத்திக் கொண்டாடப்படும் பண்டிகையே பொங்கல் வைபவம்!

சூரியன், தன் பாதையில் மகர ராசியில் பிரவேசிப்பது ‘மகர ரவி’ எனப்படும். ரவி என்றால் சூரியன் என்பது தெரியும்தானே. அதுவே உத்தராயன புண்ய காலம் எனப்படுகிறது. உத்தர அயனம் என்றால், வடக்குப் பக்க வழி, வடக்கு வாசல் என்று அர்த்தம். சூரியன், கிழக்கில் தோன்றி மேற்கே மறைகிறான் என்றாலும், தட்சிண அயனம் எனும் காலத்தில் சற்றுத் தென்புறமாகவும், உத்தர அயன காலத்தில் சற்று வடக்குப் புறமாகவும் சஞ்சரிக்கிறார் சூரிய பகவான் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

அதாவது, தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என ஆறு மாதங்களும் உத்தராயன புண்ய காலம் என்றும் தேவர்களின் பகல் காலம் என்றும் சொல்லப்படுகிறது. மங்கல கரமான காரியங்களைச் செய்ய உத்தராயனமே சிறந்த காலம் என்று போற்றுகிறது புராணம்.

இறப்பது கூட உத்தராயனத்தில் நிகழ்ந்தால் நற்கதி கிடைக்கும் என்பது ஐதீகம்! எனவேதான், தட்சிணாயன காலத்தில், குருக்ஷேத்திர யுத்தத்தில் அடிபட்டு விழுந்த பீஷ்மர், தான் இறப்பதற்காக உத்தராயன புண்ய காலம் வரும் வரை காத்திருந்து இறந்தார் என்கிறது மகாபாரதம்!

உத்தராயன புண்ய காலம் தை மாதம் தொடங்குகிறது. இந்த மாதப் பிறப்பு, பொங்கல் நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது! பொங்கல் திருநாள் நான்கு நாள் விழாவாக, போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என கொண்டாடப் படுகிறது.

ஆகவே உத்தராயன புண்ய காலம் தொடங்குகிற தை மாதத்தை, உரிய முறையில் கொண்டாடுவோம். சடங்குகளின் அடிப்படையில் என்னென்ன சாங்கியங்கள் உண்டோ அவற்றை நிறைவேற்றுவோம். பொங்கலும் மகிழ்ச்சியும் எல்லோர் வீடுகளிலும் பொங்கித் ததும்பட்டும்! ததும்பும் என்பது நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

NEWS TODAY 10.06.2026