Saturday, January 13, 2018


உத்தராயன புண்ய காலமும்... தைத் திருநாள் பொங்கலும்!

Published : 12 Jan 2018 16:50 IST

வி.ராம்ஜி
 


இந்தியா... ஆன்மிக பூமி என்று போற்றப்படும் தேசம். வேதங்களாலும் இதிகாசங்களாலும் புராணங்களாலும் பலம் கொண்டிருக்கும் புண்ணிய பூமி இது.

சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, சக்தி வழிபாடு, குமர வழிபாடு என பலப்பல வழிபாடுகள் இருந்தாலும் எல்லா வழிபாடுகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்... சூரியனார்! அதாவது சூரிய பகவான்! உலகுக்கே இருள் நீக்கி ஒளி கொடுக்கிற சூரிய பகவானை முன்னிறுத்திக் கொண்டாடப்படும் பண்டிகையே பொங்கல் வைபவம்!

சூரியன், தன் பாதையில் மகர ராசியில் பிரவேசிப்பது ‘மகர ரவி’ எனப்படும். ரவி என்றால் சூரியன் என்பது தெரியும்தானே. அதுவே உத்தராயன புண்ய காலம் எனப்படுகிறது. உத்தர அயனம் என்றால், வடக்குப் பக்க வழி, வடக்கு வாசல் என்று அர்த்தம். சூரியன், கிழக்கில் தோன்றி மேற்கே மறைகிறான் என்றாலும், தட்சிண அயனம் எனும் காலத்தில் சற்றுத் தென்புறமாகவும், உத்தர அயன காலத்தில் சற்று வடக்குப் புறமாகவும் சஞ்சரிக்கிறார் சூரிய பகவான் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

அதாவது, தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என ஆறு மாதங்களும் உத்தராயன புண்ய காலம் என்றும் தேவர்களின் பகல் காலம் என்றும் சொல்லப்படுகிறது. மங்கல கரமான காரியங்களைச் செய்ய உத்தராயனமே சிறந்த காலம் என்று போற்றுகிறது புராணம்.

இறப்பது கூட உத்தராயனத்தில் நிகழ்ந்தால் நற்கதி கிடைக்கும் என்பது ஐதீகம்! எனவேதான், தட்சிணாயன காலத்தில், குருக்ஷேத்திர யுத்தத்தில் அடிபட்டு விழுந்த பீஷ்மர், தான் இறப்பதற்காக உத்தராயன புண்ய காலம் வரும் வரை காத்திருந்து இறந்தார் என்கிறது மகாபாரதம்!

உத்தராயன புண்ய காலம் தை மாதம் தொடங்குகிறது. இந்த மாதப் பிறப்பு, பொங்கல் நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது! பொங்கல் திருநாள் நான்கு நாள் விழாவாக, போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என கொண்டாடப் படுகிறது.

ஆகவே உத்தராயன புண்ய காலம் தொடங்குகிற தை மாதத்தை, உரிய முறையில் கொண்டாடுவோம். சடங்குகளின் அடிப்படையில் என்னென்ன சாங்கியங்கள் உண்டோ அவற்றை நிறைவேற்றுவோம். பொங்கலும் மகிழ்ச்சியும் எல்லோர் வீடுகளிலும் பொங்கித் ததும்பட்டும்! ததும்பும் என்பது நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

No comments:

Post a Comment

NEWS TODAY 28.10.2024