Sunday, January 28, 2018

அசுத்தமான மனதுடன் பூஜை செய்வதில் எந்த பலனும் இல்லை: ஐகோர்ட் கருத்து

Added : ஜன 28, 2018 01:37 |.

.


.
சென்னை,'அசுத்தமான மனதுடன், நிறைய பணம் செலவழித்து, பூஜைகள் செய்வதில் எந்த பலனும் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், மண்டப கட்டளை பூஜைக்கு அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நடராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், 'எங்கள் குடும்பம், 70 ஆண்டுகளாக, மண்டப கட்டளை பூஜை செய்து வருகிறது. பிடரியூர் மூன்று கிராம நாட்டு கவுண்டர்கள் மடம் என்ற பெயரில், எங்கள் பெரிய தாத்தா, மடத்தை துவக்கினார்.

இந்த ஆண்டு, தைப்பூசத்தை முன்னிட்டு, மண்டப கட்டளைக்காக, எங்களிடம் கட்டணம் பெற, அறநிலையத் துறை மறுத்து விட்டது. மண்டப கட்டளை பூஜைக்கு, எங்களை அனுமதிக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த, நீதிபதி, ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவு: மண்டப கட்டளை பூஜையை, மனுதாரர் நடத்த, கடுமையான ஆட்சேபனை இல்லை. பூஜையின் போது, மனுதாரருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் முக்கியத்துவம் அளிக்கவே ஆட்சேபனை தெரிவிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு ஆசி வழங்குவதில், கடவுள் பாரபட்சம் காட்டுவதில்லை.

கடவுளின் ஆசி கிடைக்க வேண்டும் என்றால், சுத்தமான, தெளிவான மனது வேண்டும். மனித சமூகத்திடம், அன்பு, பாசம் காட்ட வேண்டும். அசுத்தமான மனது, தீய எண்ணங்களை உடையவர்கள், நிறைய பணம் செலவு செய்து, பூஜைகள் செய்வதால் மட்டும், எந்த பலனும் வந்து விடாது. அவர்களுக்கு வேண்டுமானால், அது திருப்தி அளிக்கலாம்; கடவுளுக்கு திருப்தி அளிக்காது.மகரிஷி சித்த அகத்தியர், 'நம் மனம் சுத்தமாக, தெளிவாக, நேர்மையாக இருந்தால், எந்த மந்திரமும் சொல்ல வேண்டியதில்லை; மனம் சுத்தமாக இருந்தால் தான், மந்திரம் சொல்வதும் சுத்தமாக இருக்கும். அன்பு, பணிவு, தெளிவு, எளிமையாக வாழும் ஒவ்வொருவருக்கும், கடவுளின் ஆசி உண்டு' என, கூறியுள்ளார்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரரிடம் உரிய கட்டணத்தை பெற்று, மண்டப கட்டளை பூஜை செய்ய, அனுமதிக்க வேண்டும். தங்களுக்கே முழு உரிமை வேண்டும் என கோருபவர்கள், அறநிலையத் துறையை அல்லது சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...