Tuesday, January 30, 2018

ஓர் இரவு ரயில் பயணத்தில்...

By ஆர். வேல்முருகன் | Published on : 30th January 2018 03:58 AM |

சென்னையில் இருந்து கோவைக்குச் செல்ல இரவு நேர வாராந்திர ரயிலில் முன்பதிவு செய்திருந்தேன். வாராந்திர ரயில் என்பதாலும் தொடர்ந்து அலுவலக விடுமுறை நாட்கள் என்பதாலும் கூட்டம் நிரம்பி வழிந்தது சென்னை ரயில் நிலையத்தில். ஒரு வழியாக ரயிலில் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து படுக்கையிலும் படுத்தாகிவிட்டது. மிகவும் சோர்வாக இருந்ததால் உடனடியாகத் தூங்க முயற்சி செய்தேன்.

எனக்கு எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பயணிகள். இரண்டு பெண்கள், அவர்களின் கணவன்மார்கள், பெண்களின் தந்தை உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு. அதில் ஒரு பெண் வீட்டிலிருந்து புறப்படும்போது எதையோ மறந்துவிட்டு வந்துவிட்டாராம். இரு பெண்களும் தங்களுக்குள் மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். இதை அப்பெண்களின் தந்தை கேட்டுக் கொண்டிருந்தார். அவர் குடிபோதையில் இருந்தார் என்பது அவருடைய பேச்சிலிருந்து தெரிந்தது.

"நீ எப்பவுமே இப்படித்தான். எதையாவது மறந்துவிட்டு வந்துவிடுவாய்' என்று பொருளை மறந்து வைத்துவிட்டு வந்த மகளை விடாது அர்ச்சித்துக் கொண்டே இருந்தார் தந்தை. மகளும் பதிலுக்கு வாக்குவாதம் செய்து கொண்டேயிருந்தார். தந்தை ரயில்வே ஊழியர் என்பதால் டிக்கெட் எடுக்கவில்லை என்பது பேச்சில் தெரிய வந்தது. ரயில்வே பரிசோதகர் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று குடிபோதையில் பேசிக்கொண்டே வந்தார்.

ரயில் புறப்படத் தொடங்கியதும் தந்தையின் குரல் ஓங்கியது. பெண்களும் மருமகன்களும் பலமுறை கூறியும் பெரியவர் தனது குரலைத் தாழ்த்தவேயில்லை. ரயில் புறப்பட்டு ஒரு மணி நேரத்துக்குப் பின்தான் அந்தப் பெரியவர் அடங்கித் தூங்கினார். அதுவரை அவருக்குப் போதையில் என்ன நடந்ததென்று தெரியுமா என்பதுகூடத் தெரியவில்லை.

இது ஒரு புறமிருக்க, ரயில் பரிசோதகர் வருவார் என்று எதிர்பார்த்து விளக்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தன. இரவு 12 மணி சுமாருக்கு விளக்குகளை அணைக்கச் சொல்லிப் பலர் ஆட்சேபித்தபின் அவை அணைக்கப்பட்டன. இந்தப் பிரச்னை முடிந்து தூங்கலாம் என்று நினைப்பதற்குள், ரயில் பெட்டிக்குள் ஒரு பெண் மிகவும் உரக்க செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணின் உரத்த உரையாடலால் பலருடைய தூக்கம் பறிபோய்க் கொண்டிருந்தது. ஓரிடத்தில் அமர்ந்து பேசினால் ஒரு சிலரின் தூக்கம் மட்டுமே பறிபோகும். ஆனால் நடந்து கொண்டே பேசியதால் பலருடைய தூக்கம் பறிபோனது. அடுத்து வரும் ரயில் நிலையத்தில் புகார் செய்வோம் என்று மிரட்டியபின் அந்தப் பெண்ணின் செல்லிடப்பேசி தொந்தரவு அடங்கியது.

இதெல்லாம் முடிந்து ஒரு வழியாகத் தூங்குவதற்குள் சேலம் ரயில் நிலையம் வந்துவிட்டது. எதிரிலிருந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினர் சேலத்தில் இறங்கினர். அதற்குள் அக்குடும்பத்தினர் போட்ட சத்தத்தில் மீண்டும் தூக்கம் கலைந்துவிட்டது. போதை இறங்காததால் அந்தப் பெரியவர் மீண்டும் பெண்களிடம் தகராறு செய்து கொண்டே இருந்தார். ஒரு வழியாக அவர்கள் இறங்கிச் செல்லும்போது அந்தப் பெண்கள் தங்கள் தந்தையைப் பார்த்து, உன்னையெல்லாம் ரயிலில் தள்ளித்தான் கொல்ல வேண்டும் என்று சொல்லி சபித்தது காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

அப்போது சேலத்தில் ஏறிய பயணிகள் சிலர் காலியாக இருந்த படுக்கைகளில் படுத்துக் கொண்டனர். நல்ல குளிரில் அவர்கள் ஜன்னல்களைத் திறந்து வைத்துக் காற்று வாங்கிக் கொண்டிருந்தனர். மற்றவர்களோ குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக அவர்களின் தொந்தரவு. அனைவரும் ஜன்னலை அடைக்கச் சொன்னபின் வேண்டா வெறுப்பாக ஜன்னல்கள் அடைக்கப்பட்டன. அதன்பின் ஈரோடு, திருப்பூர் வரை எந்தத் தொந்தரவும் இல்லை. திருப்பூரில் இருந்து கோவை வரை செல்வதற்கு சிக்னல் கிடைக்காததால் ஒன்றே முக்கால் மணி நேரம் தாமதம்.
தூக்கத்திலேயே அதிகாலைத் தூக்கம் ஆனந்தமானது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த நேரத்தில் ஒருவர் செல்லிடப்பேசியில் மிகவும் உரக்க பாடல்களையும் சினிமாவையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் சப்தத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தபின், போனால் போகிறது என்பதுபோல செல்லிடப்பேசி ஒலியைச் சிறிது குறைத்துக் கொண்டார்

ரயில்களில் குடிபோதையில் பயணம் செய்பவர்களால் எத்தனை பேருக்குப் பிரச்னை ஏற்படுகிறது என்பது யாருக்கும் தெரியாததல்ல. அவ்வாறு குடிபோதையில் வருவோரை ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்காமல் ரயில்வே போலீஸார் தடுக்க வேண்டும். பயணிகளுக்குத் தொந்தரவு தருவோரை, யாராக இருந்தாலும், உடனடியாக தயவு தாட்சண்யமில்லாமல் வெளியேற்ற வேண்டும். குடிபோதையில் இருப்போருக்கு மெட்ரோ ரயில் கதவு திறக்காமல் இருப்பதுபோல, நீண்ட தூரம் செல்லும் ரயிலிலும் அந்த வசதியை ஏற்படுத்த வேண்டும்.

பாடல்கள் கேட்பதில் தவறில்லை. ஆனால் அந்தப் பாடல்கள் அடுத்தவருக்குத் தொந்தரவாக அமையக் கூடாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்குத்தானே காதில் அணியும் ஹெட்போன்கள் உள்ளன. இரவு நேரப் பயணத்தில் படுக்கை வசதி இருப்பதே இயன்றவரை நிம்மதியாகத் தூங்கத்தான்.

ஆனால், இரவு நேர ரயில் பயணம் என்பது பல சமயங்களில் குடிமகன்களின் கொண்டாட்டப் பயணங்களாவதும் வழக்கமாக உள்ளது. பிற பயணிகளின் நிம்மதியைக் கெடுக்கும் குடிமகன்கள் உள்ளிட்டோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

அடுத்தவருக்குத் துன்பம் இழைக்காமல் நல்லதைச் செய்வோம் என உறுதியேற்போம்.

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...