Tuesday, January 30, 2018

நாளை பூரண சந்திர கிரகணம்..! என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?


எஸ்.கதிரேசன்


நாளை பூரண சந்திர கிரகணம்...! எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்!

சந்திர கிரகணம்

இந்த வருடம் ஜனவரி மாதம் 31-ம் தேதி (நாளை) சந்திரகிரகணம் நிகழ இருக்கிறது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் 'பூர்ண சந்திரகிரகணம்' இது.

இந்தியாவில் மாலை 5.17 மணிக்கு ஆரம்பித்து, இரவு 8.41 மணிக்கு முடிகிறது. இந்தக் காலக்கட்டத்தில் என்னசெய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி ஜோதிட வல்லுநர்களிடமும், சிவாசார்யரிடமும் கேட்டோம்.



'ஆஸ்ட்ரோ' கிருஷ்ணன் ஜோதிடப் பேராசிரியர்:

சூரிய கிரகணம் அமாவாசையின் முடிவிலும் சந்திர கிரகணம் பௌர்ணமி முடிவிலும் தோன்றுவது இயல்பு. பொதுவாக, தினந்தோறும் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்யக் கூடாது. ஆனால் கிரகண காலத்தில் 'சமுத்திர ஸ்நானம்' செய்வது மிகவும் விசேஷம்.

நிலா உதிக்கும் நேரத்திலேயே, முழு சந்திர கிரகணம் தோன்றுவதுதான் இதன் சிறப்பு. அதாவது, கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே, கிரகணம் தொடங்கி, மாலை 6.25 முழுமையாக மறைந்துவிடும். இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, 8.41 மணிக்கு நிலா இயல்பு நிலையை அடையும்.



இந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆனால், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின்மீது படும். குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும்.

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்:

அந்த நேரத்தில், கடலிலும், ஆறுகளிலும் அலைகள் சற்று அதிக உயரத்துக்கு எழும்பும். இருப்பினும், பயப்படும் அளவுக்கு ஒன்றும் இருக்காது . சந்திர கிரகணம், பூசம் நான்காம் பாதத்தில் தொடங்கி ஆயில்யம் ஒன்றாம் பாதத்தில் முடிகிறது. புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அனுஷம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகண சாந்தி செய்து கொள்வது நல்லது.

பொதுவாகவே சந்திரன் உடலோடும் மனதோடும் சம்பந்தப்படுகிற கிரகம். சந்திரன் ஜாதகத்தில் பலவீனமானால் மனதையும் வருத்தி உடலையும் வருத்துவார். செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி ஆகியோரின் காரகத்துவங்களுக்கு ஏற்ப உண்டாகும் உடல் உபாதைகளின்போது, சந்திரனும் பலவீனமாக இருந்தால், நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடுவதுடன், நோயின் கடுமையைத் தாங்கும் சக்தியையும் மனரீதியாகக் குறைத்துவிடுகிறார்.



நீர்ச்சத்துக் குறைவு மற்றும் மறதி, மனச்சஞ்சலம் இருந்தால், சிறிதளவு தர்ப்பைப் புல், இந்துப்பு ஆகியவற்றை குளிக்கும் நீரில் இட்டு, குளித்தால் நல்லது.

பரிகாரங்கள்:

கிரகண நேரத்தில் சந்திர காயத்ரி, அம்பாள் ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து விட்டு, கிரகணம் விட்டவுடன் கீழே காணும் பரிகாரங்களைச் செய்யலாம்.

வெள்ளிப் பாத்திரத்தில் புனித நீர் நிரப்பி, அதில் மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்வது சிறப்பு. அம்பாளுக்கு சந்தன காப்பு சாத்தி வழிபாடு செய்வதும் நல்லது. அபிராமி அந்தாதி , மகாலட்சுமி அஷ்டோத்ரம் சொல்வது கூடுதல் சிறப்பு.

புண்ணிய நதிகளில் நீராடுவது, நோயின் தாக்கத்திலிருந்து நம்மைக் காப்பாற்றும்; மன உறுதியையும் தரும்.

ஜாதக ரீதியாக சந்திரன் பலவீனமானவர்கள், சந்திர கிரகண நேரத்தில் உணவு எதுவும் உட்கொள்ளாமல் இருந்து மேற்கண்ட பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.



'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி:

வரும் தைப்பூச பவுர்ணமி கிரகண நிலையாக அமைகிறது. இந்தக் கிரகணம் கடக ராசியில், பூச நட்சத்திரம் நான்காம் பாதத்தில் தொடங்கி ஆயில்யம் ஒன்றாம் பாதத்தில் முடிவடையும். பூமிக்கு நன்மைகளைத் தரும் முழு நிலவின் ஒளி, ராகு எனும் இருளாகிய நிழலால் மறைக்கப்படும்போது, சனி மற்றும் புதனின் நட்சத்திரங்களான பூசம், ஆயில்ய நட்சத்திரங்களின் பின்னாலும், குருவின் நட்சத்திரமான புனர்பூசத்தின் அருகிலும் சந்திரன் இருப்பார். எனவே கிரகண நேரத்தில் மேற்படி நட்சத்திரங்களினால் பூமிக்குக் கிடைக்கும் ஒளி மறைக்கப்பட்டு பாதிப்பு ஏற்படும்.

கிரகணம் நிறைவடைந்த ஒருமணி நேரத்துக்குப் பின்னர் இரவு மணி 9.40 க்கு வீட்டை சுத்தம் செய்து குளித்து பூஜை செய்த பின் உணவருந்துவது நல்லது.

மிக முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த கிரகண நேரத்தில் வெளியே வருவதைத் தவிர்க்கலாம். பிறந்த ஜாதகப்படி சந்திர தசை, சந்திர புக்தி நடந்து கொண்டிருப்பவர்களும் மேற்கண்ட கிரகண நேரத்தில் முக்கியமான பணிகள் செய்வதைத் தவிர்க்கவும்.

குமார சிவாசார்யார் (கோயில் குருக்கள்)

சந்திர கிரகணம் ஏற்படுவதை ஆன்மிக ரீதியாகப் பார்த்தால், அப்போது சந்திரனுடைய ஈர்ப்புத் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் நாம் முக்கியமான வேலைகள் எதையும் செய்யக்கூடாது.

ஜாதகக் கட்டத்தில் ராசியைக் குறிப்பது சந்திரனே. ராசியை வைத்துத்தான் பலன் சொல்லுவார்கள். சந்திர கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இதனால் சந்திரனின் ஒளி, மனித உடலிலும் மனதிலும் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடியது. கர்ப்பிணிப் பெண்கள், நிச்சயம் வெளியே வரக்கூடாது.

கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் தானம், ஜபம் செய்வது நல்லது. நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள், நீர், தயிர், ஊறுகாய் போன்றவற்றில் தர்ப்பைப்புல்லை போட்டு வைப்பது நல்லது. கிரகணத்துக்கு முன்பாக சமைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது.

 இரவு கிரகணம் விட்ட பிறகு, குளித்துவிட்டு இறைவழிபாட்டில் ஈடுபடுவது நல்லது. ஆலயங்களில் கிரகண பரிகாரம் செய்வார்கள். பூசம் நட்சத்திரம் முதல் ஆயில்யம் முதல் பாதம் வரை உள்ள நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரப் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...