Friday, January 26, 2018

 வெள்ளி, தை கிருத்திகை... ராஜயோகம் தரும் வழிபாடு!

Published : 25 Jan 2018 10:54 IST

வி.ராம்ஜி

-



தை மாதத்தின் வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு விசேஷம். கிருத்திகை முருகப்பெருமானுக்கு உரிய அற்புதநாள். நாளைய தை வெள்ளிக்கிழமையும் கிருத்திகையும் ஒருசேர அமைந்திருப்பதால், இன்னும் இன்னும் பல யோகங்களைத் தந்தருளும் அற்புதமான நாள். ஆகவே அம்பாள் தரிசனமும் முருகக் கடவுளின் தரிசனமும் தவறாமல் செய்யுங்கள். ராஜயோகம் பெறுவீர்கள் என்கிறார் சென்னை அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

தை மாத வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உரிய நன்னாள். இந்த நாளில், அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், அம்மன் கோலோச்சுகிற கோயில்களில், சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடைபெறும்.

நாளைய தினம் (26.1.18) தை மாத இரண்டாவது வெள்ளிக்கிழமை. வழக்கம் போல், அம்மன் கோயிலுக்குச் சென்று உங்கள் வேண்டுதலை அவளிடம் தெரிவியுங்கள். உங்களின் கோரிக்கைகளை அவள் முன்னே சமர்ப்பியுங்கள். முடிந்தால், ராகு கால வேளையான காலை 10.30 முதல் 12 மணிக்குள், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுங்கள். பிரபஞ்ச சக்தியான அம்பிகை, உங்கள் வாழ்க்கைக்குப் பக்கபலமாக இருப்பாள். பக்கத்துணையாக இருப்பாள். வழிகாட்டுவாள். வழிகாட்டியாகவே இருந்து, வழிக்குத் துணையாக வாழ்நாளெல்லாம் வந்தருள்வாள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

அதேபோல், மாதந்தோறும் வருகிற கிருத்திகை நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திர நாள். கார்த்திகேயப் பெருமானை இந்த நாளில் விரதமிருந்து ஏராளமான பக்தர்கள், வணங்கி வழிபடுவார்கள்.

அன்னைக்கு உகந்த தை வெள்ளியில், மைந்தனுக்கு உரிய கிருத்திகையும் வருகிறது. எனவே இந்த கிருத்திகை நட்சத்திர நாளில், முடிந்தவர்கள் விரதமிருந்து முருக வழிபாடு செய்யுங்கள். மற்றபடி, இந்த நன்னாளில், முருகக்கடவுளை தரிசிப்பதே பெரும் பலன்களைத் தரவல்லது என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

அம்பாளுக்கும் கந்தக்கடவுளுக்கும் உகந்த செந்நிற மலர்களை சார்த்தி வழிபடுங்கள். வீட்டில் விளக்கேற்றி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து முருகக் கடவுளை வழிபடுங்கள். அம்பாளை லலிதா சகஸ்ர நாமம் பாராயணம் செய்தும், முருகப்பெருமானை சஷ்டி கவசம் பாடியும் ஆராதியுங்கள்.

உங்களுக்கு ராஜயோகம் தந்தருள்வார்கள், அம்மாவும் பிள்ளையும்!

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024