Tuesday, January 30, 2018

தாத்தாக்களும், பாட்டிகளும் செய்தது சரிதானாம்.. ஆய்வு முடிவுகளே உறுதி செய்தன

By ENS | Published on : 29th January 2018 03:48 PM

ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி என்பதை வெறும் பழமொழியில் மட்டுமல்லாமல், வழக்கத்திலும் கொண்டிருந்த நமது தாத்தாக்களும், பாட்டிகளும் செய்தது சரியே என்று ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இந்த மருத்துவமனை சார்பில் வௌயிடப்பட்டிருக்கும் நீரிழிவு ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சோதனை முடிவுகள் தொடர்பான அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் 30 வயதை தாண்டியவர்களாக இருந்தால் உங்கள் தாத்தாவும் பாட்டியும், பல் தேய்க்க வேப்ப மரக் குச்சிகளைப் பயன்படுத்தியது நிச்சயம் தெரிய வந்திருக்கும்.

அவரை எல்லாம் கேலி செய்த, அடுத்த தலைமுறையினர், ஸ்டைலாக டூத் பிரெஷ்ஷை கையில் எடுத்தனர். அதன்பிறகு தான் விதவிதமான பற்பசைகளும், விதவிதமான டூத் பிரெஷ்களும் நமது பற்களை அலங்கரித்தன.

ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் ஆய்வறிக்கைக் கூறுவது என்னவென்றால், பற்களை பாக்டீரியாக்கள் இல்லாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேப்பங்குச்சிகளே சிறந்த முறை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, இரண்டாம் பிரிவு நீரிழிவு நோய் பாதித்தவர்களின் ஈறுகளில் ஏற்படும் தொற்று நோய்களுக்கும் வேப்பங்குச்சிகள் பயனளிக்கின்றன என்றும் தெரிய வந்துள்ளது.

டைப் 2 நீரிழிவு பாதித்தவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், வேப்பங்குச்சியின் நுனியை தினமும் காலை 10 நிமிடம் மெல்லுமாறு கூறப்பட்டது. அதற்கு முன்பு அவர்களது எச்சிலில் இருந்த பாக்டீரியாக்களின் அளவு, வேப்பங்குச்சியை மென்ற பிறகு பல மடங்குக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதன் மூலம், நம் மூதாதையர்கள் பின்பற்றிய பல நல்ல பழக்க வழக்கங்களை தொலைத்துவிட்டு வெறும் விளம்பரத்தைப் பார்த்து வெளிநாட்டு பொருட்களுக்கு அடிமையாகியிருக்கும் நமக்கு பல் இருந்தால் என்ன சொத்தையானால்தான் என்ன? என்றே நினைக்கத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024