Wednesday, January 31, 2018

ஓட்டுநர் உரிமம் பெற ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் குவியும் பெண்கள்!
 
விகடன் 

 

ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அரசு மானியத்தில் இருசக்கர வாகனம் பெறுவதற்காக, ஓட்டுநர் உரிமம் பெற ஏராளமான பெண்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்தனர்.

தமிழக அரசு 50 சதவிகித மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் இரு சக்கர வாகனம் பெறுவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அரசின் இச்சிறப்புத் திட்டத்தின் கீழ் மானியத்தில் இருசக்கர வாகனம் பெறுவதற்காகப் பெண்கள் பலரும் ஆர்வத்துடன், அதற்கான உரிமம் பெற ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். தினசரி 300-க்கும் மேற்பட்டோர் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மகளிர் கூட்டம், கூட்டமாகக் காணப்படுகின்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் எம்.விஸ்வநாதன் கூறுகையில், ''அரசு வழங்கும் இரு சக்கர வாகனத்தை மானியத்தில் பெறுவதற்கு மிகவும் முக்கியமான தகுதிகளில் ஒன்று, அதை ஓட்டுவதற்கான உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பதாகும். கடந்த 4 நாள்களாக தினசரி 350-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலை இணைக்க வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் வாகனத்தை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் வழங்கப்படும். அதன் பின்னரே வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024