Sunday, January 28, 2018

மீண்டும் வருது, 'அம்பாசடர்' கார் தமிழகத்தில் உற்பத்தியாகிறது


Added : ஜன 28, 2018 04:33

நான்கு ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி நிறுத்தப்பட்ட, 'அம்பாசடர்' ரக கார்கள், மீண்டும் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதற்கான ஆலையின் கட்டுமான பணி, ஓசூரில் துவங்கி உள்ளது.

தனக்கென, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தனி அடையாளத்துடன், இந்திய சாலைகளை, அம்பாசடர் ரக கார்கள், கம்பீரமாக அணிவகுத்தன. மத்திய, மாநில அரசு அதிகாரிகள், சிவப்பு நிற சுழல் விளக்குடன், அதில், வலம் வருவதை பெருமையாக கருதினர்; இன்றோ, கறுப்பு வண்ணத்துடன், வரலாற்றின் எச்சமாக, அங்கொன்றும், இங்கொன்றுமாக தென்படுகின்றன.

மாருதி சுசூகி நிறுவனம், 1980ம் ஆண்டுகளில், கால் பதித்தபோது, அதற்கு, சிறிய சறுக்கல் ஏற்பட்டது. கடந்த, 1990க்கு பின், 'போர்டு, ஹுண்டாய்' போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் வர துவங்கியதும், அதன் விற்பனை வேகம் மேலும் குறைந்தது. கடந்த, 2014ல், மேற்கு வங்க ஆலையில், அம்பாசடர் உற்பத்தியை, 'ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்' நிறுவனம் நிறுத்தியது. தற்போது, அதற்கு புத்துயிர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக தொழில் துறையினர் கூறியதாவது: பிரான்சை சேர்ந்த, பி.எஸ்.ஏ., குழுமம், 'பியுஜோ' உள்ளிட்ட, பல்வேறு பெயர்களில், வாகனங்களை உற்பத்தி செய்கிறது. இந்தியாவில், இரு முறை, கால் பதித்து, அம்முயற்சியை கைவிட்ட, பி.எஸ்.ஏ., மீண்டும் களம் இறங்கியுள்ளது.

ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் நடத்தும், சி.கே.பிர்லா குழுமம், அம்பாசடர் என்ற பெயரின் உரிமையை, 50 சதவீதம் தக்க வைத்து, மீதத்தை, பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு, 2017ல் விற்றது.இந்நிலையில், பி.எஸ்.ஏ., நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், தன் கார்களுக்கான, 'இன்ஜின், கியர் பாக்ஸ்' போன்றவை அடங்கிய, 'பவர் டிரெய்ங்' உற்பத்தி ஆலையை அமைத்து வருகிறது. அதற்கான கட்டுமான பணி டிசம்பரில் துவங்கிஉள்ளது.

தமிழகத்தில், இரு நிறுவனங்களும் சேர்ந்து, 700 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. அதில், ஒரு வாகனம், 'அம்பாசடர் ' பெயரில் உற்பத்தியாக உள்ளது. அதனால், பழைய, அம்பாசடர் தயாரிக்கப்படும் வாய்ப்பும் உருவாகி உள்ளது.

பி.எஸ்.ஏ.,வின், கார்களுக்கு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 'ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்' ஆலையில், இறுதி வடிவம் தரப்படும். அங்கு, 2019ல், வாகன உற்பத்தி துவங்கி, 2020 முதல் சந்தைக்கு வரலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024