Sunday, January 28, 2018



இராமன் ஆண்டாலும்... இராவணன் ஆண்டாலும்...

By தி. இராசகோபாலன் | Published on : 27th January 2018 02:39 AM |


கறையான் கட்டுகின்ற அழகான புற்றினைப் பார்த்து, தானும் அதுபோல் கட்ட வேண்டும் என்று தூக்கணாங்குருவி ஆசைப்படுவதில்லை. தூக்கணாங்குருவி கட்டுகின்ற அடுக்குமாடிக்கூடுகளைப் பார்த்து, நாமும் அதுபோல் கட்ட வேண்டுமென்று கறையான்கள் ஆசைப்படுவதில்லை. தேனீக்கள் கட்டுகின்ற தேன்கூட்டைப் பார்த்து, புறாக்கள் ஆசைப்படுவதில்லை. ஆனால், மனிதன் மட்டும் பார்க்கின்ற அனைத்தையும் அடைய வேண்டுமென்று ஆசைப்படுகிறான்.

தெருக்கூத்தில் ராஜாவாக வேடம் தரித்து நடித்தவன், பொழுது விடிந்ததும் மேக்கப்பைக் கலைத்துவிட்டு, டவுன் பஸ்ஸில் ஏறி தன் வீட்டுக்குப் போகின்றான். ஆனால், சினிமாவில் ராஜாவாக வேடம் தரித்து தர்பார் நடத்தியவன், மறுநாள் காலையில் நேரே கோட்டைக்குச் சென்று கொடியேற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

யார் யாருக்கு எந்தத் தொழிலில் பயிற்சியும் முயற்சியும் இருக்கின்றதோ, அந்தத் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று கீதை சொல்லுகின்றது. அதற்கு "சுதர்மம் என்று பெயர். பகவத்கீதை 18-ஆவது அத்தியாயத்தில் 45-ஆவது சுலோகமும் 47-ஆவது சுலோகமும் இதனை அற்புதமாகச் சொல்லுகின்றன. 

"தனக்குத் தானே உரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான். தனக்குரிய தொழிலில் இன்புறுவோன் எங்ஙனம் சித்தியடைகிறான் என்பதைச் சொல்லுகிறேன் கேள். பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும், தனக்குரிய தர்மத்தைக் குறையின்றிச் செய்தலும் நன்று. இயற்கையில் ஏற்பட்ட தொழிலைச் செய்வதானால், ஒருவன் பாவமடைய மாட்டான்' என்பதுதான் அவ்வேத வாக்கியம்.
ஒரு தொழிலில் பயிற்சியும் முயற்சியும் இல்லாதவன், அத்தொழிலில் ஈடுபடுவதால் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்வதோடு சமூகத்திற்கும் கேடு விளைவிப்பான். 

அவரவர் தொழிலை அவரவர் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு சுவையான நிகழ்ச்சி - இங்கிலாந்தில் ஜனநாயக சோசலிசத்தைப் பற்றி முதன்முதலில் சிந்தித்தவர்கள் "ஃபேபியன் சொசைட்டி' என்னும் சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்த ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, பியாட்ரிஸ் மற்றும் சிட்னி வெப் போன்ற அறிவுஜீவிகள் ஆவர்.

பெர்னார்ட் ஷாவுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் - வயலின் வித்வான் ஒருவர், பெர்னார்ட் ஷாவுக்கு நண்பராகவும் இருந்தார். அவர் ஒருநாள் ஃபேபியன் சொசைட்டிக்கு வந்து, மாமேதைகள் கூடியிருக்கும் சபையில் சனநாயக சோசலிசத்தைப் பற்றிக் கருத்துச் சொல்லலானார். அவரை எப்படித் தடுத்து நிறுத்துவதென்று தெரியாமல் அறிஞர்கள் சங்கடத்தில் நெளிந்து வளைந்தனர். பெர்னார்ட் ஷா அந்த வயலின் வித்வானைச் சாதுர்யமாக வெளியே அழைத்து வந்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

மறுநாள் காலையில் அந்த வயலின் வித்வானுக்குப் பாடம் புகட்ட நினைத்த பெர்னார்ட் ஷா ஒரு வயலினை எடுத்துக் கொண்டு அவர் வீட்டுக்குப் போய் வயலினை மீட்டி, "டர்புர்' என்று வயலின் வாசிக்கலானார். தன் வீட்டில் ஒருவர் இசையைக் கொலை செய்வதைக் கேட்டு ஓடிவந்த வயலின் வித்வான், "என்னப்பா! பெர்னார்ட் ஷா, காலங்காத்தாலே என் வீட்டிலேயே அமர்ந்து இசையைக் கொலை செய்கிறாயே, இது நியாயமா?' எனக் கேட்டார்.

அதற்குப் பெர்னார்ட் ஷா, "என்னப்பா! நேற்று எங்கள் சங்கத்துக்கு வந்து நீ மட்டும் சனநாயக சோசலிசத்தைக் கொலை செய்யலாமா? அதற்குப் பழி வாங்கத்தான் நான் உன் வயலின் இசையைக் கொலை செய்கிறேன்' என்றார். இதிலிருந்து தனக்குத் தெரியாத தொழிலில், ஒருவர் தலையிடுவது ஆபத்து என்பது தெளிவாகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து, இருபது ஆண்டுகள் வரை இந்த நாட்டு மக்களுக்கு வெள்ளைக்காரர்கள் செய்த அநியாயங்களும் அட்டகாசங்களும் தெரியாமல் இருந்தன. ஆனால், 1967-க்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் செய்த அத்தனை அட்டூழியங்களும் அநியாயங்களும், எப்படியிருந்திருக்கும் என்று உணருமாறு, ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் செய்து வருகின்றனர். சுதந்திரப் போராட்டக் காலத்தில் சர்வோபரி தியாகம் செய்த தியாகிகள், ஆட்சிக்கு வந்து ஒப்பற்ற அப்பழுக்கற்ற ஆட்சிக் கலையைத் தந்தனர். அதற்கு இரண்டு சான்றுகளைச் சுட்டலாம்.

ஆச்சார்ய கிருபளானியும் சுசேதாவும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தாலும், இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்த பிறகுதான் திருமணம் என்பதில் உறுதியாக நின்றனர். சுதந்திரம் வந்தபிறகு தங்களுடைய திருமணத்தை நடத்தி வைக்குமாறு காந்தியடிகளை வேண்டினர்.

"கிருபளானிக்கு வயது 50; சுசேதாவுக்கு வயது 28. இவ்வளவு வயது வேறுபாடு உடையவர்களின் திருமணத்தை நடத்தி வைப்பதில் எனக்குச் சம்மதமில்லை' என்றார் காந்திஜி. அதையடுத்து அவர்கள் இருவரும் ஒரு விரதத்தை-உறுதியை ஏற்றபின் காந்தியடிகள் சம்மதித்தார். என்ன உறுதி தெரியுமா? அவர்களுக்குத் திருமணம் ஆனதில் இருந்து வாழ்நாள் முடிய ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், தாம்பத்தியத்தில் ஈடுபடுவதில்லை என்ற உறுதியைத் தந்தவுடன்தான் அவர்களுடைய திருமணத்தை நடத்தி வைத்தார் காந்திஜி.
அப்படித் தழும்பேறிய தியாகங்களோடு திருமதி சுசேதா கிருபளானி 1963-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுசேதா கிருபளானிதான். அவர் பதவியேற்றவுடன், 62 நாட்கள் தொடர்ந்து நடந்து வந்த அரசு ஊழியர்கள் போராட்டத்தைச் சாமர்த்தியமாகச் சிக்கெடுத்துச் செம்மைப்படுத்தினார். உத்தரப்பிரதேச வரலாற்றில் ஒரு பொற்காலம் உண்டென்றால், அது சுசேதா கிருபளானி ஆண்ட காலம்தான்! லால் பகதூர் சாஸ்திரியே அவருடைய எளிமையைக் கண்டு அதிசயித்து நின்றார்.

1971-ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற சுசேதா கிருபளானி, தம்முடைய சொத்துகள் அனைத்தையும் ஏழை மக்களுக்குப் போய்ச் சேரும் வகையில் "லோக் கல்யாண் சமிதி' எனும் தொண்டு நிறுவனத்திற்கு ஒப்படைத்தார். இந்த ஆட்சிக்கலையை இன்றைய வேடதாரிகளிடம் எதிர்பார்க்க முடியுமா?

அமெரிக்காவில் குடியரசுத் தலைவராக இருந்த ரொனால்டு ரீகன், நடிகர் என்பதற்காக அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இடதுசாரி பொருளாதாரத்தில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பிடிப்பைக் கண்டுதான் மக்கள் வாக்களித்தனர். ரீகனுக்கு முன்பிருந்த ஜிம்மி கார்டர் காலத்துக் குளறுபடிகளைச் செம்மையாகச் செப்பனிட்டவர் ரீகன். வியத்நாம் போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்கர்களை, முற்றாகத் திரும்பப் பெற்றார். வியத்நாம் போரில் மாண்ட அமெரிக்க வீரர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களைத் தேடித் தந்தார்.
முதிர்ச்சியும் ஆட்சிக்கலையும் வாய்க்கப் பெற்றவர்கள், அடுத்த துறையில் கால் ஊன்றுவதில் தவறில்லை.

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த என்.டி. ராமராவ் ஒரு சிவில் சர்வீஸ் அதிகாரி. அவர் திரைத்துறைக்கு வந்ததனால், கலையும் செழித்தது; நாட்டு மக்களும் மகிழ்ந்தனர். அவரை இராமர் வேடத்திலும், கிருஷ்ணர் வேடத்திலும் பார்த்து மகிழ்ந்த மக்கள் நாளடைவில், அவரை இராமராகவும் கிருஷ்ணராகவும் எண்ணித் தொழ ஆரம்பித்தனர். கனவுலகத்தில் மிதந்த மக்கள் அவரை மாநில முதலமைச்சராகவும் ஆக்கினர். ஆனால், என்.டி.ஆரோ தெலுங்கு தேசக் கட்சியைக் குடும்பச் சொத்தாக்கினார். பிறகு அவருடைய மருமகனே ஆட்சிக் கலைப்பிற்கு நாள் குறித்தார்.
பேராசிரியர் லட்சுமி பார்வதி என்ற மாற்றான் தோட்டத்து மல்லிகை, என்.டி.ஆருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத வந்தார். அந்த மல்லிகையின் மணத்திலே மயங்கிய என்.டி.ஆர்., அவரை இரண்டாவது மனைவியாகவும் ஆக்கிக் கொண்டார். தம்முடைய வாழ்க்கை வரலாற்றை எழுத வந்த லட்சுமி பார்வதியின் வரலாற்றை, என்.டி.ஆரே எழுத லேண்டிய துர்பாக்கியத்திற்குத் தள்ளப்பட்டார். கடைசியில் சோதிடர்களின் பேச்சை நம்பி, ஒரு காதில் குண்டலம் தரித்தார்; சேலையை வேட்டியாகவே அணிய ஆரம்பித்தார். என்.டி.ஆரின் அரசியல் பிரவேசத்தால் கலையுலகம் ஒரு சிற்பியை இழந்தது; ஆனால், அரசியல் உலகத்தில் அவர் அப்பிய அழுக்குத் துடைக்கப்படாமலேயே போயிற்று.

கனவுலகத்தில் இருப்பவர்கள் நனவுலகத்திற்கு வருவது, இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டிக்கொண்டு கடலில் குதிப்பது போன்றதாகும். அரிதாரங்கள் அரசியலுக்கு வந்தால், ஆட்சிகள் மாறலாமே தவிர, காட்சிகள்...?

தமிழகத்தில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரும், ஆந்திரத்தில் என்.டி.ஆரும் அரசியலுக்கு வந்ததைப் பார்த்து, கேரளத்து நடிகர் பிரேம் நசீருக்கும் சபலம் ஏற்பட்டது. அதனால் காங்கிரஸ் கட்சியிலும் உறுப்பினர் ஆனார். ஒரு கலை நிகழ்ச்சியில் பேசும்போது அரசியலைப் பற்றிப் பேசத் தொடங்கினார். அதனைக் கேட்டுக் கொண்டிருந்த கேரளத்து மக்கள் கொதித்தெழுந்து, "கலையைப் பற்றி பேசுவதாக இருந்தால் பேசுங்கள்; எங்களுக்கு உங்களைக் காட்டிலும் அரசியல் நன்றாகவே தெரியும்' எனக் கண்டனக் குரல் எழுப்பினர்.
சுனாமியும் பூகம்பமும் ஒரு காலத்தில் இயற்கையால் மட்டுமே எழுந்து கொண்டிருந்தன. ஆனால், இன்று தனி மனிதர்களும் சுனாமி ஏற்படுத்தக் கூடிய அழிவை, ஒரு பூகம்பம் ஏற்படுத்தக் கூடிய கோர விளைவுகளை உருவாக்கத் தயாராகிவிட்டார்கள். நாட்டு மக்கள் இனியும் சொப்பன உலகத்தை நம்பாது, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? என்று வாழைப்பழத்திற்கு ஆசைப்படும் குரங்குகள், கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால், வாக்காளர்கள் அப்படியிருக்க முடியுமா?

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024