Monday, January 29, 2018

வரும் 31ம்தேதி சந்திர கிரகணம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10.30 மணி நேரம் நடை அடைப்பு

தமிழ் முரசு




திருமலை: சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 31ம்தேதி 10. 30 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 31ம்தேதி மாலை 5. 40 மணி முதல் இரவு 8. 30 மணிவரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்று காலை 11 மணி முதல் இரவு 9. 30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படுகிறது. 9. 30 மணிக்குபிறகு நடை திறக்கப்பட்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்து பரிகார பூஜைகள் நடத்தப்படும்.

தொடர்ந்து இரவு 10. 30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

கோயில் நடை அடைக்கப்படுவதையொட்டி அன்றைய தினம் ரூ. 300 டிக்கெட் வழங்குவது நிறுத்தப்படும். அதேபோல் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் 1 வயது குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை தரிசனமும் ரத்து செய்யப்படும்.

மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு 31ம்தேதி அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை திவ்ய தரிசன டிக்கெட் வழங்குவதும் நிறுத்தப்படும். சந்திர கிரகணம் நடைபெறுவதால் அன்றைய நாளில் அன்னப்பிரசாதம் தயார் செய்யப்படாது.

வைகுண்டம் காத்திருப்பு அறைகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே இதனை கருத்தில்கொண்டு திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தை மாற்றியமைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

12 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் நேற்று முன்தினம் குடியரசு தினம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3நாட்கள் விடுமுறை என்பதால் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

நேற்று அதிகாலை முதல் இரவு வரை 82 ஆயிரத்து 660 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை முதல் இலவச தரிசனத்தில் 27 அறைகள் நிரம்பியுள்ளது.

இவர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரூ. 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள், நடைபாதையாக வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஏழுமலையான் கோயிலில் நேற்று எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ₹2. 26 கோடியை பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024