Friday, January 26, 2018

பள்ளிப் பேருந்தில் கல்லெறிந்த 'பத்மாவத்' எதிர்ப்பாளர்களே... உங்கள் வீட்டுக் குழந்தைகள் பத்திரம்தானே?! #Padmaavat

ரமணி மோகனகிருஷ்ணன்

”குழந்தைகள் என்ன பண்ணாங்க?”

சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு வீடியோ பெரும் அச்சமூட்டுவதாக இருக்கிறது. காரணம், அதிலிருக்கும் குழந்தைகள். ஒரு பேருந்தின் இருக்கைகளில் அமராமல், நடக்கும் பாதையில் பதுங்கியவாறு பயத்தில் அலறிக்கொண்டிருக்கிறார்கள் அந்தக் குழந்தைகள். யார் அந்தக் குழந்தைகள்? அந்தப் பிஞ்சுகளுக்குப் பயத்தைக் கொடுத்தது எது?



'பத்மாவத்' திரைப்படத்தைச் சுற்றியிருக்கும் சர்ச்சைகள் நாம் அனைவரும் அறிந்ததே. அந்தப் படத்தை திரையிடக்கூடாது என்று பல பிரச்னைகளைச் செய்தனர் இந்துத்துவ வலதுசாரி இயக்கத்தினர். தீபிகா படுகோனுக்கும், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். ஆனால், பிரச்னை தாண்டி படம் திரைக்கு வந்துள்ளது. படம் வெளியானால் கலவரம் செய்வோம் என்று முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தனர் எதிர்ப்பாளர்கள். எனவே, பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. அதில் ஒன்றாக, டெல்லியில் ஒரு பள்ளி பேருந்தைத் தாக்கி தங்களது 'வீரமான எதிர்ப்பை’ காட்டியிருக்கிறது ஒரு கும்பல். 'கர்னி சேனா' என்கிற ராஜ்புட் வலதுசாரி அமைப்பினர் இதைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. நல்லவேளையாக எந்தக் குழந்தைக்கும் அடிபடவில்லை.

இந்த நிகழ்வு சில கேள்விகளை எழுப்புகிறது. இது என்ன மாதிரியான மனநிலை? பள்ளிப் பேருந்து எனத் தெரிந்தும் அதன்மீது கற்களை எறிந்து கண்ணாடியை உடைத்திருக்கிறார்கள். குழந்தைகள் பயந்துபோய் கீழே அமர்ந்து அழும் காட்சியும், அவர்களைக் கட்டிப்பிடித்து ஆசிரியர்கள் தேற்றும் காட்சியும் மனதை உறையவைக்கிறது. குழந்தைகளுக்கு மரணப் பயத்தை காட்டும் அளவுக்கு வெறி எப்படி வந்தது? ஒரு படம் தங்களைப் புண்படுத்துகிறது என்றால், எதிர்ப்பது உரிமையாக இருக்கலாம். அதற்காக, கலவரம் செய்து, பள்ளிக் குழந்தைகளை உளவியல் ரீதியாகத் தாக்குவது எத்தனை கொடூர மனநிலை?

''கர்னி சேனா ஒரு பள்ளிப் பேருந்தை தாக்கியதால், என் நாட்டின் குழந்தைகள் பயத்தில் நடுங்கி அழுகிறார்கள். ஆட்சி செய்யும் அரசு இந்தப் பிரச்னையை வேறாக அணுகுகிறது. எதிர்க்கட்சியோ தந்திரமாக எதிர்ப்பு பதில் அளிக்கிறது. வாக்கு வங்கிக்காக எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை வியாபாரம் செய்ய வெட்கமாக இல்லையா?” என்று ட்விட்டரில் சீறியிருக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

குழந்தைகளுக்கு எப்போதுமே புறஉலகத்தின் மீது ஆர்வமும் நல்ல அபிமானமும் இருக்கும். அவர்கள் வெளியுலகுடன் இணக்கமாகவும் அன்பாகவும் இருக்க நினைப்பார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களும் அன்பானவர்களே என நம்புவார்கள். இதுபோன்ற ஒரு நிகழ்வைக் கண்ட அந்தப் பிஞ்சுகளின் மனநிலை என்னவாக இருக்கும்? அந்த அன்பு எல்லாம் போய், உலகத்தின் மீது அச்சம் வரும். இந்த உலகத்திடமிருந்து அவர்கள் விடுபடத் தொடங்குவார்கள். இனி, வெளியே எந்தப் பிரச்னை ஆரம்பித்தாலும் பயம் அவர்களைச் சூழும். உலகையும் சக மனிதர்களையும் வெறுப்பார்கள்.

இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து டெல்லியைச் சுற்றியுள்ள பல பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ”இந்தப் பேருந்து தாக்குதலைச் சந்தித்த குழந்தைகளுக்குப் பல நாள்களுக்குத் தாக்கம் இருக்கும். அவர்களின் பெற்றோர், பாசமாக நடந்துகொள்வதன் மூலம் அந்தத் தாக்கத்திலிருந்து வெளியே வர உதவலாம். அதற்குப் பதிலாக இதுபற்றி குழந்தைகளைப் பேசவே விடாமல் தடுப்பதோ, பள்ளிக்குச் சென்று சண்டையிடுவதோ தவிர்க்க வேண்டும்” என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன். 


  இந்த உலகம் அன்பினால் மட்டுமே ஆனதில்லை என்பதை மிகவும் மோசமான முறையில் காட்டியிருக்கிறது இந்தச் சம்பவம். இது இப்படியே தொடருமானால், அடுத்துவரும் காலங்களில் நாம் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொள்ள நேரும். 'குழந்தைகளே ஒரு நாட்டின் சொத்துக்கள்' என்றார் நெல்சன் மண்டேலா. நாளையை உலகு குழந்தைகளால் தீர்மானிக்கப்படுகிறது. அவர்களை நல்ல மனிதர்களாக்க உருவாக்கப் பாதுகாப்பான உலகை அவர்களுக்குக் காட்டவேண்டியது நம் கடமை.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...