Wednesday, January 31, 2018

மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேட்டில் குற்றம் நிரூபணம்: நீதிபதி சுக்லா பதவி விலக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

By DIN | Published on : 31st January 2018 04:43 AM |

தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றின் மாணவர் சேர்க்கைக்கு விதிகளுக்குப் புறம்பாக அனுமதியளித்த விவகாரத்தில் அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா மீதான குற்றச்சாட்டுகளை விசாரணைக் குழு உறுதி செய்துள்ளது.
நீதித் துறை மாண்புக்கே அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சுக்லா செயல்பட்டிருப்பதாக அக்குழு, தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து பதவியை ராஜிநாமா செய்யுமாறு அவருக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
ஆனால், அதனை ஒப்புக் கொள்ள நீதிபதி சுக்லா மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக அவரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் தீபக் மிஸ்ரா கடிதம் எழுத வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

சர்ச்சைக்குரிய தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றின் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலும், உச்ச நீதிமன்றமும் தடை விதித்திருந்த நிலையில், அதனை மீறி அக்கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் எஸ்.என்.சுக்லா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதுதொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்திய அக்குழு, அதுதொடர்பாக தனது அறிக்கையை தீபக் மிஸ்ரா முன்பு சமர்ப்பித்தது. தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு முறைகேடாக சுக்லா அனுமதியளித்ததாகவும் இத்தகைய நடவடிக்கைகளால் நீதித் துறைக்கே சுக்லா களங்கம் விளைவித்து விட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி சுக்லா தாமாக முன்வந்து பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் அல்லது விருப்ப ஓய்வில் செல்ல வேண்டும் என்று தீபக் மிஸ்ரா அறிவுறுத்தினார்.
விடுமுறையில் செல்கிறார்: இதனிடையே, நீதிபதி எஸ்.என்.சுக்லா விடுமுறை கோரி விண்ணப்பித்ததாகத் தெரிகிறது. அதற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அனுமதி அளித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதவி பறிக்கப்படுமா?

பொதுவாக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமானால் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டும். அதற்காக இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதில் சம்பந்தப்பட்ட நீதிபதியை நீக்க மூன்றில் இரு பங்கு ஆதரவு இருப்பதும் அவசியம். அதன் பின்னர், அதுதொடர்பான பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு அதன்பேரில் அவர் உத்தரவிட வேண்டும். அப்போதுதான் அந்த நீதிபதியின் பதவியை பறிக்க இயலும். அதன் அடிப்படையில் பார்க்கும்போது சுக்லா விவகாரத்திலும் அத்தகைய நடைமுறை பின்பற்றப்படலாம் எனத் தெரிகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அறிவுறுத்தலை அவர் ஏற்க மறுத்ததாகத் தகவல்கள் வெளியானதால், அடுத்தகட்டமாக குடியரசுத் தலைவரிடமும், பிரதமரிடமும் முறையிட அதிக வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...