Monday, January 29, 2018

பேருந்துக் கட்டணம் குறைப்பு: இன்று முதல் அமலாகிறது

By DIN  |   Published on : 29th January 2018 04:11 AM  
தமிழகம் முழுவதும் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தில் சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது. புறநகர்ப் பேருந்துகளில் கிலோமீட்டருக்கு 2 பைசா முதல் 10 பைசா வரை (சாதாரண பேருந்துகள் முதல் குளிர்சாதனப் பேருந்துகள் வரை) குறைத்து தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோன்று, மாநகரப் பேருந்துகளில் ஒவ்வொரு நிலைக்கும் (ஸ்டேஜ்) ஒரு ரூபாய் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான பொது மக்களின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டும் மக்களுக்கு சிறப்பான சேவையைத் தொடர வேண்டிய போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலையை மனதில் கொண்டும் பேருந்துக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பரிசீலனையும்-அறிவிப்பும்: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தி மாநில அரசு கடந்த 20-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
பேருந்துக் கட்டணம் 100 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பலர் புகார் தெரிவித்தனர். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
பேருந்துக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு எட்டு நாள்கள் கடந்த நிலையில், பேருந்துக் கட்டணங்களைக் குறைத்து தமிழக அரசு அறிவித்தது.
எவ்வளவு குறைப்பு?: கட்டணக் குறைப்புத் தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பு:
சாதாரணப் பேருந்துகளில் கட்டணம் கிலோமீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகக் குறைக்கப்படும். விரைவுப் பேருந்துகளில் கட்டணம் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும் சொகுசுப் பேருந்துகளில் 90 பைசாவில் இருந்து 85 பைசாவாகவும் அதிநவீன சொகுசுப் பேருந்துகளில் (அல்ட்ரா டீலக்ஸ்) 110 பைசாவில் இருந்து 100 பைசாவாகவும், குளிர்சாதனப் பேருந்துகளில் 140 பைசாவில் இருந்து 130 பைசாவாகவும் குறைக்கப்படுகிறது.
சென்னை மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5-லிருந்து ரூ.4 ஆகக் குறைக்கப்படுகிறது. மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள நகர்ப்புற பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5-லிருந்து ரூ.4-ஆகக் குறைக்கப்படுகிறது. அனைத்து நிறுத்தங்களுக்கும் ரூ.1 வீதம் குறைக்கப்படுகிறது.
இன்று முதல் அமலாகும்: பேருந்துக் கட்டணம் கடந்த 20-ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டதால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு நாளொன்றுக்கு ஏற்படும் இழப்பு ரூ.2 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டிருந்தது. இப்போது கட்டணக் குறைப்பால் சராசரியாக ரூ.4 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பேருந்துக் கட்டண விகிதங்களை ஏற்று, தொடர்ந்து தமிழக அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். புதிய கட்டண விகிதங்கள் திங்கள்கிழமை (ஜன. 29) முதல் நடைமுறைக்கு வருகின்றன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் தொடரும்
ஆயிரம் ரூபாய்க்கான மாதாந்திர பேருந்து பயண அட்டை தொடர்ந்து அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
இதுகுறித்து, மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசுப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தனியார் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் 50 சதவீத கட்டணச் சலுகையுடன் பழைய கட்டணத்தின் அடிப்படையிலேயே பேருந்து பயண அட்டை அளிக்கப்பட்டு வருகிறது.
பேருந்துக் கட்டணம் மாற்றியமைத்த பிறகும் மாணவர்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்யும் பொருட்டு, பயணச் சலுகை அரசால் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று முதியோர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கட்டணமில்லாத பேருந்து அட்டைகளும் தொடர்ந்து வழங்கப்படும். அதேபோன்று, ஆயிரம் ரூபாய்க்கான மாதாந்திர பேருந்து பயண அட்டை தொடர்ந்து அளிக்கப்படும்.
சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு கட்டணம்
சென்னையிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (எஸ்இடிசி) அல்ட்ரா டீலக்ஸ் மற்றும் குளிர்சாதனப் பேருந்துகளில் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகளில் தொலைவுக்கு ஏற்ப குறைந்தபட்சமாக ரூ.18 முதல் அதிகபட்சமாக ரூ.70 வரையிலும் குளிர்சாதனப் பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.19 முதல் அதிகபட்சமாக ரூ.73 வரையிலும் குறைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து 
1. சென்னை - திருச்சி 338 304 (ரூ.34 குறைப்பு)
2. சென்னை-சேலம் 348 313 (ரூ.35 குறைப்பு)
3. சென்னை - கோயம்புத்தூர் 520 469 (ரூ.51 குறைப்பு)
4. சென்னை-மதுரை 467 419 (ரூ.48 குறைப்பு)
5. சென்னை-திருநெல்வேலி 637 574 (ரூ.63 குறைப்பு)
6. சென்னை-நாகர்கோயில் 708 638 (ரூ.70 குறைப்பு)
7. சென்னை-தஞ்சாவூர் 358 322 (ரூ.36 குறைப்பு)
8. சென்னை-வேளாங்கண்ணி 345 311 (ரூ.34 குறைப்பு)
9. சென்னை-கும்பகோணம் 314 283 (ரூ.31 குறைப்பு)
10. சென்னை-புதுச்சேரி 178 160 (ரூ.18 குறைப்பு)
11. சென்னை-பெங்களூரு 459 423 (ரூ.36 குறைப்பு)
குளிர்சாதனப் பேருந்து
1. சென்னை-திருச்சி 461 426 (ரூ.35 குறைப்பு)
2. சென்னை-சேலம் 475 438 (ரூ.37 குறைப்பு)
3. சென்னை-கோயம்புத்தூர் 707 654 (ரூ.53 குறைப்பு)
4. சென்னை-மதுரை 637 588 (ரூ.49 குறைப்பு)
5. சென்னை-திருநெல்வேலி 860 795 (ரூ.65 குறைப்பு)
6. சென்னை-நாகர்கோல் 964 891 (ரூ.73 குறைப்பு)
7. சென்னை-தஞ்சாவூர் 488 449 (ரூ.39 குறைப்பு)
8. சென்னை-வேளாங்கண்ணி 470 435 (ரூ.35 குறைப்பு)
9. சென்னை-பெங்களூரு 573 536 (ரூ.37 குறைப்பு)
10. சென்னை-கும்பகோணம் 428 396 (ரூ.32 குறைப்பு)
11 சென்னை-புதுச்சேரி 243 224 (ரூ.19 குறைப்பு)
புறநகர் பேருந்துகள்... (கிலோமீட்டருக்கு பைசாவில்)
சாதாரண பேருந்துகள் (10 கி.மீ.,) 60 58
விரைவு (30 கி.மீ.,) 80 75
அதிசொகுசு இடைநில்லா பேருந்துகள் (30 கி.மீ.,) 90 85
அதிநவீன சொகுசு (30 கி.மீ.,) 110 100
குளிர்சாதனம் (30 கி.மீ.,) 140 130
நகரப் பேருந்துகள்: மாநகர-நகர பேருந்துகள் (மாவட்டங்கள்): (1முதல் 20 நிலை வரை)
குறைந்தபட்சம் ரூ.5 ரூ.4
அதிகபட்சம் ரூ. 19 ரூ.18
சென்னையில்... (1 முதல் 28 நிலை வரை)
குறைந்தபட்சம் ரூ.5 ரூ.4
அதிகபட்சம் ரூ. 23 ரூ.22

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024