Friday, January 26, 2018

சைதாப்பேட்டையில் ருசிகரம்: திருடிய நகையை காதலி நினைவாக பிரேம் போட்டு மாட்டி வைத்திருந்த வினோத நபர் கைது

Published : 25 Jan 2018 22:18 IST

சென்னை




நகைப்பறித்து சிக்கிய ஜான்சன், நகை - படம்: சிறப்பு ஏற்பாடு

சைதாப்பேட்டையில் தனது முன்னாள் காதலி என நினைத்து ஒரு பெண்ணை தாக்கி நகையை பறித்துச்சென்ற வாலிபர் அதை காதலி நினைவாக பிரேம் போட்டு மாட்டி வைத்திருந்ததை பார்த்து போலீஸார் திகைத்து போயுள்ளனர்.

கடந்த 21-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பார் உரிமையாளர் செல்வகணேஷ் என்பவரது மனைவி குணசுந்தரி என்பவர் வீட்டில் தனியாக இருக்கும் போது மர்ம நபரால் தலையில் தாக்கப்பட்டார். அவரிடமிருந்த 11 சவரன் செயின் பறிக்கப்பட்டது.

வீட்டின் கதவை தட்டியது தனது கணவர் தான் என நினைத்து குணசுந்தரி கதவை திறந்தபோது தாக்கப்பட்டார். வீட்டிற்கு இரவு திரும்பிய கணவர் செல்வகணேஷ் வீட்டிற்கு வந்ததும் மனைவி ரத்த காயத்துடன் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  

சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீஸில் செல்வகணேஷ் அளித்த புகாரின் பேரில் சைதாப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். 

அதில் நகையை பறித்துச்சென்ற நபரின் உருவம் பதிவாகி இருந்தது. போலீஸார் தேடுதல் வேட்டையில் நகையை பறித்துச் சென்ற திருடன் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட ஜான்சனிடம் போலீஸார் திருடிய நகை எங்கே என்று கேட்டபோது வீட்டில் மாட்டப்பட்டிருந்த போட்டோ பிரேமை காட்டியுள்ளார், ஜான்சன். நகையை பிரேம் செய்து போட்டோ போல் மாட்டி இருந்தார். நகையை திருடினால் விற்றுவிடுவார்கள் நீ போட்டோ பிரேம் செய்து மாட்டியிருக்கிறாயே என்று போலீஸார் இரண்டு தட்டு தட்டியுள்ளனர். 

அதற்கு ஜான்சன் வடிவேலு பாணியில் "சார் அடிக்கிற வேலை வச்சுக்காதீங்க, இது என் காதலி ஞாபகார்த்தமா பறித்த நகை அதான் பிரேம் போட்டு மாட்டியிருக்கிறேன்" என்று கூலாக கூறியுள்ளார். 

அதற்கு போலீஸார் அதற்கு காதலி நகையை வாங்கி பிரேம் போட்டு வை ஊரார் மனைவி நகையை பறித்து பிரேம் போட்டு வைப்பாயா என்று கேட்டுள்ளனர். அதற்கு ஜான்சன் என் காதலியிடம் தான் நகையை பறித்து வந்தேன் என்று கூறியுள்ளார். 

இதென்னடா புது பூதம் கிளம்புகிறது என்று போலீஸார் மேலும் விசாரிக்க காதலி பெயரை கேட்டபோது மாற்றி சொல்லி இருக்கிறார் ஜான்சன். நீ செயின் பறித்த பெண்ணின் பெயர் குணசுந்தரி என்று போலீஸார் கூறவும் எங்க போட்டோவை காட்டுங்கள் என்று குணசுந்தரி போட்டோவை பார்த்துவிட்டு சார் இந்தம்மா யாரு என்று கேட்டுள்ளார் ஜான்சன். 

நீ தலையில் கல்லால் தாக்கிவிட்டு 11 சவரன் நகையை பறித்து வந்தாயே அந்தம்மா என்று போலீஸார் கூறியுள்ளனர். சார் ஆள் மாறிபோச்சு என் காதலின்னு நினைத்து தாக்கிவிட்டேன் என்று ஜான்சன் தனது கதையை கூறி உள்ளார். 

ஜான்சன் சைதாப்பேட்டையில் இதற்கு முன்பு வசித்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.  

இந்நிலையில் மனமுடைந்த ஜான்சன் வீட்டை காலி செய்து விட்டு ஊரப்பாக்கத்த்திற்கு சென்று விட்டார். பிறகு நண்பர்களை பார்க்க வந்தபோது குணசுந்தரியை பார்த்து விட்டு தன்னுடைய காதலி என்று இருட்டில் தவறுதலாக தாக்கி நகையை பறித்து கொண்டு ஜான்சன் சென்று விட்டார். பிறகு பறித்த நகையை காதலி ஞாபகமாக பிரேம் போட்டு வைத்து கொண்டதாக கைதான ஜான்சன் தெரிவித்துள்ளார். நல்ல கதை சொன்னாய், போதையில் ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் உன் முன்னாள் காதலிபோல் தெரிந்தால் எதாவது செய்வாயா என்று கூறிய போலீஸார் ஜான்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.   

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024