Sunday, January 28, 2018

மரணமான ஊழியரின் மனைவிக்கு குடும்ப பென்ஷன் வழங்க உத்தரவு

Added : ஜன 28, 2018 01:48

சென்னை, 'ராணுவத்தில் பணியாற்றியதற்கான பென்ஷன் பெற்றாலும், போக்குவரத்து கழகத்தில் பணியாற்றியதற்கான பென்ஷனும் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகம், தர்மபுரி மண்டலத்தில், கேப்ரியல் என்பவர், டிரைவராக பணியாற்றி வந்தார். அதற்கு முன், இந்திய ராணுவத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றார். 

பின், போக்குவரத்து கழகத்தில், டிரைவராக சேர்ந்து, ௨௦௦௩ல், ஓய்வு பெற்றார். பாதுகாப்பு துறையின் பென்ஷன், போக்குவரத்து கழகத்தின் பென்ஷன், இரண்டையும் பெற்று வந்தார். ௨௦௧௨ல், கேப்ரியல் மரணம் அடைந்தார்.

இதையடுத்து, குடும்ப பென்ஷன் வழங்க, போக்கு வரத்து கழக நிர்வாகம் மறுத்து விட்டது. கேப்ரியலின் மனைவி, அமலோர்பவமேரி விசாரித்த போது, ஒரே நேரத்தில், இரண்டு பென்ஷன் பெற உரிமை  யில்லை என, பதில்
அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, குடும்ப பென்ஷன் வழங்க உத்தர விடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமலோர்பவ மேரி மனு தாக்கல் செய்தார்.
மனுவை, நீதிபதி, டி.ராஜா விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், நிர்மலேஸ்வர் ஆஜரானார். நீதிபதி, பிறப்பித்த உத்தரவு:
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், முன்னாள் ராணுவத்தினர் என்ற முறையில், பென்ஷன் பெற்றுள்ளார். போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற பின், அதற்கான பென்ஷன் பெற்றுள்ளார்.
ராணுவத்தில் இருந்து பென்ஷன் பெற்று வரும் போது, போக்குவரத்து கழகத்தில் ஆற்றிய சேவைக்காக, அவரது மனைவி பென்ஷன் பெறுவதில், எந்த தடையும் இல்லை.

எனவே, போக்குவரத்து கழகத்திடம் இருந்து, குடும்ப பென்ஷன் பெற, மனுதாரருக்கு உரிமை உள்ளது. நான்கு வாரங்களில், பென்ஷன் தொகையை, போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும்.
கணவர் இறந்த தினத்தில் இருந்து, பாக்கி தொகையை விடுவிக்க வேண்டும். தவறி னால், ௧௦ சதவீத வட்டியுடன் கணக்கிட்டு வழங்க வேண்டியது வரும்.
இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024