சிபிஐ விசாரணை வேண்டாம் என அரசு ஆட்சேபணை தெரிவிப்பதை பார்த்தால் குட்கா வழக்கில் ஆழ்ந்து கவனம் செலுத்த தோன்றுகிறது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
Published : 25 Jan 2018 21:35 IST
சென்னை
குட்கா, உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்
அரசு தரப்பு சிபிஐ தேவையில்லை என ஆட்சேபனை தெரிவிப்பதை பார்க்கும்போது குட்கா வழக்கில் ஆழ்ந்து கவனம் செலுத்த தோன்றுகிறது. என தலைமை நீதிபதிகள் தரப்பு தெரிவித்துள்ளது. குட்கா வழக்கு ஜன.30க்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் தரப்பு அரசு கூடுதல் தலைமை வக்கீல் ராஜகோபால். வாதம் “குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்படும் குட்காப் பொருட்கள் உடனடியாக அழிக்கவும் படுகிறது.” என்று தெரிவித்தார்.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தனது வாதத்தில் “மத்திய அரசு அதிகாரிகள் ஒருசிலர் மீதே குற்றச்சாட்டு உள்ளது. எனவே மாநில காவல்துறை விசாரித்தாலே போதும், சிபிஐ தேவையில்லை. தமிழக லஞ்ச ஒழிப்புதுறையின் விசாரணை இறுதிகட்டத்தில் உள்ளது. மாநில காவல்துறை ஒத்துழைப்பு இல்லாமல் சிபிஐ விசாரணை செய்வது கடினம். நீதிமன்றம் வேண்டுமானால் எங்கள் விசாரணையை கண்காணிக்கலாம். அதற்கேற்றவாறு குறிப்பிட்ட கால இடைவெளியில் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்கிறோம்.” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வு “அரசு தலைமை வக்கீல், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் என ஓவ்வொருவராக சிபிஐ தேவையில்லை என ஆட்சேபனை தெரிவிப்பதை பார்க்கும்போது குட்கா வழக்கில் ஆழ்ந்து கவனம் செலுத்த தோன்றுகிறது.” என்று தெரிவித்தனர்.
உணவு பாதுகாப்பு ஆணையர் தரப்பில் வைக்கப்பட்ட வாதம் வருமாறு:
“மென்று தின்னும் புகையிலையை (chewing tobacco) தடுக்கும் வகையில் எவ்வித உத்தரவை பிறப்பித்தாலும், நீதிமன்றத்தை நாடி தடை வாங்கி விடுகின்றனர். குட்கா மீதான தடையை முழுமையாக அமல்படுத்தி வருகிறோம். 2013-ம் ஆண்டு தடை கொண்டு வரப்பட்ட ஆண்டிலிருந்து 5 ஆயிரம் டன்னுக்கும் அதிகமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உடனுக்குடன் அழிக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.
அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் “சிபிஐ விசாரணைக்கு ஒத்துக்கொண்டு நீங்கள் ஏன் அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பை வழங்கக்கூடாது?” என கேள்வி எழுப்பினர்.
ஊழல் கண்காணிப்பு ஆணையர் தரப்பு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் வாதம்:
“மாநில காவல்துறை இந்த வழக்கை விசாரிக்கவில்லை. லஞ்ச ஒழிப்பு துறை தான் விசாரிக்கிறது. இது சம்பந்தமான விசாரணை குறித்து டி.ஜி.பி-க்கு அறிக்கை அளிக்க வேண்டியதில்லை. ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கீழ் தான் லஞ்ச ஒழிப்பு துறை செயல்படுகிறது. அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை. மனுதாரர் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இதேபோன்று டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
திமுக ஜூலை மாத இறுதியில் வழக்கு தொடுத்தனர், ராமசாமி ஆகஸ்ட் முதல் வாரம் வழக்கு தொடர்ந்துள்ளனர். விசாரணையில் தொய்வு என்றாலே வேறு அமைப்புக்கு மாற்ற முடியும். திமுக மனுவில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் அடங்கிய விசாரணை என கேட்டுவிட்டு, தற்போது சிபிஐ விசாரணை கோரி வாதங்களை முன்வைக்கின்றனர்.” என்று தெரிவித்தார்.
திமுக ஜெ.அன்பழகன் தரப்பு வக்கீல் வில்சன் வைத்த வாதத்தில்: “வருமான வரித்துறையிலிருந்து தலைமை செயலாளர், டிஜிபிக்கு ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முறைகேடுக்கு துணைபுரிந்த அனைத்து அதிகாரிகளையும் பாதுகாக்க ஊழல் கண்காணிப்பு ஆணையம் பாதுகாக்க நினைக்கிறது.
4 மாநிலங்கள் 1 யூனியன் பிரதேச தொடர்புடைய வழக்கு என்பதால் சிபிஐ-க்கு உகந்தது. ஹவாலா பணபரிமாற்றம் நடந்துள்ளதாக கலால் வரித்துறை தெரிவித்துள்ளதால், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வருகிறது. அதனால் சிபிஐ தான் விசாரிக்க வேண்டும்.
லஞ்ச ஒழிப்புதுறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள், பிற மாநில அதிகாரிகள், உணவுபாதுகாப்புதுறை அதிகாரிகள் என பலருக்கும் தொடர்பு உள்ளது. இவர்களின் விசாரணையை நாங்கள் குறைசொல்லவில்லை. ஆனால் பிற மாநில அதிகாரிகள் மீது இவர்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் தான் சிபிஐ விசாரணை கேட்கிறோம்.
லஞ்ச ஒழிப்பு துறையில் உள்ள அதிகாரிகள் டிஜிபிக்கு அறிக்கை அளிக்க வேண்டியதில்லை என்றாலும், அவருக்கு கீழான அந்தஸ்தில் உள்ளவர்கள் தான். டிஜிபிக்கு கீழ் உள்ளவர்களால் எப்படி டிஜிபிக்கு எதிராகவோ, அமைச்சருக்கு எதிராகவோ நடவடிக்கை எடுக்க முடியும். எனவே சிபிஐ விசாரணையே சிறப்பானது.” என வாதிட்டார்.
டிராபிக் ராமசாமி தரப்பு வக்கீல் அரவிந்த் தனது வாதத்தில், “குட்கா பறிமுதல் தொடர்பான விசாரணையில் டிஜிபி தலையிடக்கூடாது, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டும். மாநில போலிஸ் தலையீடு இல்லாமல் சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும்.” என்று தெரிவித்தார்.
வழக்கின் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 30-ம் தேதிக்கு தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது.
No comments:
Post a Comment