Monday, January 29, 2018

எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங் கருவியில் சிக்கிய வாலிபர் பரிதாப மரணம்

Added : ஜன 28, 2018 23:09



மும்பை:மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில், எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங் இயந்திரம் அருகே, ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்ற நபரை, அந்த இயந்திரம், உள் இழுத்ததில், படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத் தலைநகர், மும்பையில், பி.ஒய்.எல். நாயர் அறக்கட்டளை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு பெண் நோயாளியின் உறவினர், ராஜேஷ் மாரு, 32. அந்த பெண்ணுக்கு, எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங் முறையில், எலும்பு, மென் திசுக்களை படம் எடுக்க வேண்டும் என, டாக்டர் கூறியிருந்தார்.அதற்காக, பெண்ணுக்கு உதவியாக, ராஜேஷ் மாரு, ஸ்கேனிங் அறைக்கு சென்றார்.அங்கிருந்த வார்டு பாய், ஆக்சிஜன் சிலிண்டரை உள்ளே எடுத்து வரும்படி, ராஜேஷ் மாருவிடம் கூறியுள்ளார். தயங்கிய ராஜேஷ் மாருவிடம், 'ஸ்கேனிங் கருவியின் சுவிட்ச் அணைக்கப்பட்டுள்ளது; பயப்படாமல் உள்ளே வாருங்கள்; இது, தினமும் நடக்கும் வேலைதான்' என, வார்டு பாய் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஆக்சிஜன் சிலிண்டரை ஸ்கேனிங் கருவி அருகே, ராஜேஷ் மாரு எடுத்துச் சென்றார். ஆனால், அந்த சமயத்தில் ஸ்கேனிங் கருவி, 'சுவிட்ச் ஆன்' நிலையில் இருந்ததால், ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்த உலோகம், ஸ்கேனிங் கருவியின் ராட்சத, காந்த சக்தியை துாண்டி விட்டது.இதனால், சிலிண்டரையும், அதை கையில் பிடித்திருந்த ராஜேஷ் மாருவையும், ஸ்கேனிங் கருவி பலமாக உறிஞ்சி உள் இழுத்தது; அதனால், ஸ்கேனிங் கருவியின் உள்ளே, சிலிண்டருடன், ராஜேஷ் மாருவின் கையும் சிக்கியது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வார்டு பாயும், ஸ்கேனிங் டெக்னீஷியனும், ராஜேஷ் மாருவை, ஸ்கேனிங் இயந்திரத்தின் பிடியில் இருந்து, வெளியே இழுத்தனர். இருப்பினும், சிலிண்டரில் இருந்து, ஆக்சிஜன் அதிகளவில் வெளியேறியது. இதனால், ராஜேஷின் உடல், அதிகளவில் வீங்கி இருந்தது. அவர் உடலில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
அவசர சிகிச்சை பிரிவில் ராஜேஷ் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல், 10 நிமிடங்களில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, டாக்டர் சித்தார்த் ஷா, வார்டு பாய் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங் கருவி அருகே, நகைகள் உட்பட எவ்வித உலோகப் பொருளையும் எடுத்துச் செல்லக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024