Sunday, January 28, 2018

மதுரையில் 'நீட்' தேர்வு கருத்தரங்கு தினமலர் சார்பில் இன்று நடக்கிறது

Added : ஜன 27, 2018 23:51


மதுரை, தினமலர் சார்பில் மருத்துவ படிப்பிற்கான 'நீட்' நுழைவுத் தேர்வு கருத்தரங்கு மதுரை பசுமலை மன்னர் திருமலை
நாயக்கர் கல்லுாரியில் இன்று (ஜன.,28) காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தினமலர் கல்விமலர், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில் இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிப்பது முதல் அதிக மதிப்பெண் பெறும் வகையில் எவ்வாறு தயாராக வேண்டும் என்பது வரை மாணவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும்
வல்லுனர்கள் வழிகாட்டுகின்றனர். 

விண்ணப்பிக்கும் முறை, தகுதி, கவுன்சிலிங் முறை, கல்லுாரிகளை தேர்வு செய்வது குறித்து நெல்லை செயின்ட் ஜான்ஸ் கல்லுாரி முதல்வர் ஜான் கென்னடி வேதநாதன் பேசுகிறார்.

இத்தேர்வுக்கு எவ்வாறு தயாராவது, எந்த
 பாடத் திட்டத்தில் வினாக்கள் கேட்கப்படும். மாதிரி வினா, நேர மேலாண்மை மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற வழிமுறைகள் குறித்து ஸ்மார்ட் டிரைனிங் ரிசோர்சஸ் இந்தியா பிரைவேட் லிட்., நிர்வாக இயக்குனர் சுவாமிநாதன் பேசுகிறார். இணை தலைவர் வெங்கடேசன், 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் விதம், செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து பேசுகிறார்.

மருத்துவ படிப்பின் எதிர்காலம் குறித்து சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை உதவி பேராசிரியர் டாக்டர் விஜய்கிருஷ்ணன் பேசுகிறார். அனுமதி இலவசம்.

கருத்தரங்கை எஸ்.ஆர்.எம்., பல்கலையுடன் சென்னை ஸ்மார்ட் லேர்னிங் சென்டர், தினமலர் கல்வி மலர் இணைந்து வழங்குகிறது.





No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024