Sunday, January 28, 2018

ரயில்வேக்கு ரூ.8,000 அபராதம்

Added : ஜன 28, 2018 01:36

நாகர்கோவில்;குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாமதமாக இயக்கப்பட்டதால், ரயில்வே நிர்வாகத்துக்கு, 8,000 ரூபாய் அபராதம் விதித்து, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்உத்தரவிட்டு உள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள், செல்வராஜ் சாலோமன், பிரின்ஸ்லிசேம். இருவரும், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, பார்வையற்றவர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்காக, ஐந்து எடை பார்க்கும் இயந்திரங்கள், 20 ஊன்றுகோல் கருவிகளை வழங்கதிட்டமிட்டனர்.இதற்காக, 2014 மே, 9ல், நாகர்கோவிலில் இருந்து, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து ராஞ்சி செல்ல முன்பதிவு செய்தனர்.

வழக்கமாக, இரவு, 9:15 மணிக்கு சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், அன்று, இரண்டு மணி நேரம், 25 நிமிடங்கள் தாமதமாக, இரவு, 11:40 மணிக்கு தான், சென்னை சென்றது.இதற்குள், இரவு, 11:00 மணிக்கு, ராஞ்சி ரயில் புறப்பட்டு விட்டது. இதையடுத்து, அந்த ரயிலின் டிக்கெட்டை ரத்து செய்த இருவரும், மறு நாள், சொந்த ஊருக்கே திரும்பினர்.பின், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதி, நாராயணசாமி, உறுப்பினர், சங்கர் ஆகியோர் விசாரித்தனர். பின், 'பாதிக்கப்பட்டவர்களுக்கு, சென்னை - ராஞ்சி, ராஞ்சி- - சென்னை முன்பதிவு மற்றும் ரத்து கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்.

நுகர்வோரின் மன உளைச்சலுக்காக, 5,000, வழக்கு செலவாக, 3,000 என, மொத்தம், 8,000 ரூபாயை, ரயில்வே நிர்வாகம், ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024