Tuesday, January 16, 2018

மின் கட்டணம் வசூலில் முறைகேடு இரு பொறியாளர்கள், 'சஸ்பெண்ட்'

Added : ஜன 16, 2018 01:16 |
 
கட்டணம் செலுத்தாத இணைப்புகளில், மின் இணைப்பை துண்டிக்காமல், துண்டிப்பு செய்தது போல், பதிவேட்டில் பதிவு செய்த, இரண்டு உதவி பொறியாளர்களை, மின் வாரியம், 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.


வீடு, கடை உள்ளிட்ட மின் இணைப்புகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்த, 20 நாட்களுக்குள், கட்டணத்தைச் செலுத்த வேண்டும்; இல்லை
யெனில், இணைப்பு துண்டிக்கப்படும். 


கையூட்டு


பின், அபராதத்துடன், கட்டணம் செலுத்தியதும், மீண்டும் மின் சப்ளை வழங்கப்படும்.
பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் சிலர், குறித்த காலத்தில் கட்டணம் செலுத்தாத இணைப்புகளில், மின் இணைப்பை துண்டிப்பதில்லை. 


ஆனால், துண்டித்தது போல், அலுவலக பதிவேட்டில் பதிவு செய்கின்றனர். இதற்காக அவர்கள், அந்த நுகர்வோர்களிடம் கையூட்டு பெறுவதாக கூறப்படுகிறது.


துண்டிப்பு


இது தொடர்பான புகாரில், மின் வாரியம், தற்போது அதிரடியாக, இரண்டு உதவி பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.


இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:


குறித்த காலத்தில் கட்டணம் செலுத்தாத, மின் இணைப்புகளின் விபரத்தை, தினமும் எடுத்து, வணிக ஆய்வாளர், போர்மேனிடம் வழங்குவார். 


அவர், அந்த பட்டியலை, ஒயர் மேன், மின்பாதை ஆய்வாளரிடம் வழங்குவார். அவர்கள், சம்பந்தப்பட்ட இணைப்புகளில், மின்சாரத்தை துண்டிப்பர்.


அந்த இணைப்புகளில், முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா என்று, கணக்கீட்டு ஆய்வாளர் ஆய்வு செய்ய வேண்டும். அந்த விபரத்தை, வணிக ஆய்வாளர், அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர், பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்.


மின் இணைப்பு துண்டித்த, மூன்று மாதங்களுக்குள், அபராதத்துடன் கட்டணம் வசூலிக்க வேண்டும். இல்லையெனில், மின் இணைப்பை நிரந்தரமாக துண்டித்து, மீட்டர் அகற்றப்பட வேண்டும்.


இந்த அனைத்து பணிகளையும், உதவி பொறியாளர் கண்காணிக்க வேண்டும். ஆனால், பலர், இந்த வேலைகளை ஒழுங்காக செய்வதில்லை. 


வீடுகளில், குறித்த காலத்தில், மின் கட்டணம் செலுத்தவில்லை எனில், உடனே இணைப்பை துண்டிக்க காட்டும் ஆர்வத்தை, கடை, தொழிற்சாலை, வணிக வளாகம் போன்ற, வணிக இணைப்புகளில் காட்டுவதில்லை. 


அவர்கள், மின் இணைப்பை துண்டிக்காமல், துண்டித்தது போல், அலுவலக பதிவேட்டில் பதிவு செய்கின்றனர்.


இது போன்ற முறைகேடுகளால், மின் வாரியத்திற்கு, பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 


ஆய்வு


இது தொடர்பான புகாரில், தற்போது, ஆலந்துார், குன்றத்துார் பகுதிகளைச் சேர்ந்த, இரண்டு உதவி பொறியாளர்கள் மற்றும் வணிக பிரிவு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
அனைத்து அலுவலகங்களிலும், இது தொடர்பான ஆய்வு முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்: தமிழக அரசு

Added : ஜன 16, 2018 18:46




சென்னை:தமிழகத்தில் நாளை பொது விடுமுறை கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லுாரி, பல்கலைகழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும். எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு நாளை விடுமுறை என சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2017-ம்ஆண்டு ஜனவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி விடுமுறை விடப்பட்டதால் அதனை வைத்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டதால் இன்று அதனை தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
ஊனத்தை அளவிட புதிய விதிமுறை

Added : ஜன 16, 2018 06:02

சென்னை, ஊனத்தை அளவீடு செய்வதற்கான புதிய விதிமுறைகளை, மத்திய அரசு வெளியிட்டு
உள்ளது. அவற்றை, மாநில அரசு பின்பற்ற வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.


ஊனமுற்றோர் உரிமைகளுக்கான புதிய சட்டம், 2016ல், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு, அமலில் உள்ளது. 


இதன்படி, ரத்த ஒவ்வாமைகளால் ஏற்படும், 'தலசீமியா, ஹெமோபிலியா, சிக்கிள் செல்,
பார்க்கின்ஸன்' நோய், 'ஆசிட்' வீச்சால் பாதிப்பு உள்ளிட்ட, புதிதாக சேர்க்கப்பட்ட, 21 வகையான ஊனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.


இந்த ஊனங்களையும், மருத்துவர்கள் அளவீடு செய்து, சான்று வழங்குவதற்கான விதிமுறைகள், மத்திய அரசால் உருவாக்கப்பட்டு, சமீபத்தில், அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளன. 


அவற்றை, மாநில அரசு பின்பற்ற வேண் டும் என, மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
தஞ்சை பெரியகோயில் நந்திக்கு 750 கிலோ காய், கனி அலங்காரம்

Added : ஜன 16, 2018 01:23



தஞ்சாவூர், மாட்டு பொங்கலையொட்டி, தஞ்சை பெரியகோயிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு, 750 கிலோவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்பு வகையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது.உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோயிலில், மிகப்பெரிய நந்தியம்பெருமான் சிலைஉள்ளது. இந்த நந்தியம் பெருமானுக்கு பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மாலை, சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.மாட்டு பொங்கலான நேற்று காலை அதிகாலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு உருளை கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும், பலவகையான பழங்களாலும், இனிப்பு மற்றும் மலர்களாலும் நந்திபெருமானுக்கு, 750 கிலோ அளவிலான பொருள்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.மேலும், நந்திபெருமான் சிலை முன்பு, 108 பசுக்கள்
வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, பசுக்கள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டது. பின், நந்திபெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
துணைவேந்தர் தேர்வு: சட்ட பல்கலையில் குழு

Added : ஜன 16, 2018 01:01

தமிழ்நாடு சட்ட பல்கலைக்கு, புதிய துணை வேந்தரை நியமிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி, ஜெகதீசன் தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டுஉள்ளது.துணை வேந்தராக இருந்த, வணங்காமுடியின் பதவிக் காலம், 2016 டிச., 10ல் முடிந்தது. புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, தமிழக அரசின் சார்பில், தேடல் குழு அமைக்கப்பட்டது ஆனால், குழுவுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


'பல்கலை மானியக் குழுவின் வழிகாட்டுதல் படி, தேடல் குழு அமைக்க வேண்டும்' என, முன்னாள் மாணவர் தொடர்ந்த இந்த வழக்கால், தேடல் குழு கலைக்கப்பட்டது. 'விதிகளை சரியாக பின்பற்றி, சட்ட பல்கலை துணை வேந்தரை நியமிக்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தர
விட்டது.இதைத் தொடர்ந்து, புதிய தேடல் குழு அமைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, ஜெகதீசன், குழு தலைவராக செயல்படுவார்.
இந்திய சட்ட கமிஷன் உறுப்பினர், பேராசிரியர் சிவகுமார், அம்பேத்கர் சட்ட பல்கலை முன்னாள் துணை வேந்தர், ஆதிசேஷன் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவர் என, அறிவிக்கப்பட்டு
உள்ளது.


துணை வேந்தர் பதவிக்கு வர விரும்புவோர், பிப்., 12க்குள், தேடல் குழுவிடம் விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மற்றும் விபரங்களை, www.tndalu.ac.in/vcapplications.pdf என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். - நமது நிருபர் -
முன்னோருக்கு நன்றி சொல்ல மறக்காதீங்க! இன்று தை அமாவாசை

Added : ஜன 15, 2018 23:38



சூரியன் வானில் சஞ்சரிப்பதன் அடிப்படையில், தை முதல் ஆனி மாதம் வரை உத்ராயண புண்ணிய காலமாகும். இதில் மகர ராசியில் சூரியனுடன், சந்திரன் இணையும் நாளான தை அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்குரியது. இந்நாளில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்கரை, குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட புனித தலங்களில் நீராடி முன்னோரை நன்றியுடன் வழிபட, அவர்களின் ஆசி உண்டாகும்.

தந்தையை குறிக்கும் கிரகம் சூரியன் என்பதால் 'பிதுர் காரகர்' என்றும், தாயைக் குறிக்கும் கிரகம் சந்திரன் என்பதால் 'மாதுர் காரகர்' என்றும் சாஸ்திரம் கூறுகிறது. ஆண்மை, நிர்வாக ஆற்றல், வீரத்தை தர வல்லவர் சூரியன். மகிழ்ச்சி, தெளிந்த புத்தி, உற்சாகம் அளிக்க வல்லவர் சந்திரன். இருவரும் இணையும் அமாவாசை நாளில் மறைந்த முன்னோர், பெற்றோரை வழிபடுவது பிள்ளைகளின் கடமையாகும். இது குறித்து ராமாயணம் சொல்வதை கேளுங்கள்.

குழந்தைபேறு அடைய விரும்பிய தசரதர், புத்திரகாமேஷ்டி யாகத்தை ரிஷ்ய சிருங்கரின் தலைமையில் நடத்தினார். யாகத்தின் பயனாக வந்த தெய்வீக பாயாசத்தை மனைவியரான கோசலை, கைகேயி பெற்றனர். இருவரும் தங்களின் பங்கு போக, மீதியை மூன்றாவது மனைவி சுமித்ரைக்கு கொடுத்தனர். அதனால், கோசலைக்கு ராமன், கைகேயியிக்குப் பரதன், சுமித்ராவிற்கு லட்சுமணன், சத்ருக்கனன் பிறந்தனர்.

இவர்களின் பிறப்புக்கான காரணத்தை வேறு விதமாகவும் சொல்வதுண்டு. ஒரு பிள்ளை பெற்றால், அவன் பிதுர் தர்ப்பணத்தை புனித தலமான கயாவில் செய்வானோ மாட்டானோ என்ற சந்தேகம் தசரதருக்கு இருந்ததாம். கயாவில் பிதுர்க்கடன் செய்வது சிறப்பு என்பதால், ஒருவன் இல்லாவிட்டால் வேறொருவனாவது கயாவில் தனக்குப் பிண்டம் இடுவான் என அவர் நினைத்தார். அதனால் நான்கு பிள்ளைகள் இருக்கட்டும் என முடிவெடுத்ததாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது.

இதன் மூலம் ராமாயண காலத்திற்கு முந்தியே கயாவில் தர்ப்பணம் செய்யும் வழக்கம் இருந்ததையும், ஒரு மகன் விட்டாலும் இன்னொரு மகனாவது பிதுர்க்கடன் அவசியம் செய்ய வேண்டும் என்பதையும் அறிய முடிகிறது. தசரதருக்கு அந்திமக்கிரியை என்னும் இறுதி சடங்கு செய்தது நான்காவது மகன் சத்ருக்கனனே. ராமர், லட்சுமணர் காட்டிற்கு சென்றதாலும், கைகேயி பெற்ற வரத்தால் பரதனும் தந்தைக்கு இறுதிக்கடன் செய்ய முடியாமல் போனது. அயோத்தி மன்னராக ராமர் பட்டம் சூட்டிய பிறகு, கயா சென்று பிண்டம் அளித்ததாக ஆனந்த ராமாயணம் கூறுகிறது.

தை அமாவாசையான இன்று தீர்த்தக்கரைகளில் நீராடி, மறைந்த முன்னோர், பெற்றோருக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காகத்திற்கு உணவு அளிப்பது, பசுவுக்கு கீரை, பழம் கொடுப்பது, அன்னம், ஆடை தானம் செய்வது சிறப்பு.

RAJINI SILENT..POLITICS


அரசியல்,Political, ரஜினி, Rajini, ஜெயலலிதா மறைவு, Jayalalitha death,கருணாநிதி, Karunanidhi,  ஆன்மிக அரசியல்,  aanmeega arasiyal , நடிகர் விஷால்,actor Vishal, நடிகர்  லாரன்ஸ், actor Lawrence, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ,  finance minister Arun Jaitley, ரஜினிகாந்த், Rajinikanth, spiritual politics, rajini mandram,
அரசியல் கட்சி துவக்குவதாக அறிவித்த, நடிகர் ரஜினி, 10 நாட்களுக்கும் மேலாக, அதுபற்றி வாய் திறக்காமல், 'சைலன்ட்' ஆக இருக்கிறார். அவரிடம் எதிர்பார்த்த எந்த பரபரப்பும் இல்லாததால், அவரது ரசிர்கள் விரக்தி அடைந்துள்ளனர். ரஜினி வருகையை எதிர்த்த, சில அமைப்புகள் மற்றும் கட்சிகள், அவரின் மவுனத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளன.




ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் உடல் நலக் குறைவு, கமலின் அரசியல் பிரவேசம் ஆகிய காரணங்களாலும், 'மீடியா'க்கள் மற்றும் ரசிகர்களின் வலியுறுத்தலாலும், அரசியல் கட்சி துவக்கும் அறிவிப்பை, நடிகர் ரஜினி, 2017 டிச., 31ல் வெளியிட்டார்.

ஆதரவு:

'ஆன்மிக அரசியல் பாதையில் பயணிப்போம்' என, அவர் அறிவித்த கருத்துக்கு, ஒரு தரப்பில் எதிர்ப்பும், பல தரப்பில் ஆதரவும் காணப்பட்டது. சட்டசபை தேர்தலில், ரஜினியை எதிர்த்து களமிறங்கப் போவதாக, தமிழ் அமைப்புகள் சில, அறிவித்த போதிலும், அதை ரஜினி பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

'என்னை எதிர்த்து விமர்சனம் செய்தவர் அனைவருக்கும் நன்றி' என, ஒற்றை வார்த்தையில் கருத்து சொல்லி, நிறுத்திக் கொண்டார்.

ஆலோசனை:

அதே நேரத்தில், நடிகர்கள் விஷால், லாரன்ஸ் போன்றவர்கள், ரஜினிக்கு காவலர்களாக செயல்படப் போவதாக அறிவித்து, ரஜினியின் எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.

இதற்கிடையே, அரசியல் ஆலோசனை பெறவும், ஆசி கேட்டும், தி.மு.க., தலைவர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., கழக தலைவர், ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை சந்தித்தார், ரஜினி. அதோடு, தன்னுடைய ரசிகர் மன்றத்தின் பலத்தை அதிகரிக்க, 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற பெயரில், புதிய இணைதளம் ஒன்றையும் துவக்கினார்.

அதன் வாயிலாக, ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், அவர் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு, உறுப்பினர்கள் சேர்ப்பு நடக்கவில்லை. அதுபற்றிய, அதிகாரப்பூர்வ தகவல்கள் கூட, பத்திரிகைகளுக்கு தரப்படவில்லை.

அரசியல் அறிவிப்பை வெளியிட்டு, பத்து நாட்களுக்கு மேலாகியும், ரஜினி மவுனம் சாதிப்பதற்கு, என்ன காரணம் என்பது தெரியாமல், அவரது ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

ரஜினியிடம் ஆர்வம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து, அவருக்கு நெருக்கமான சிலர் கூறியதாவது: ரசிகர் மன்ற நிர்வாகிகள், ஆறாயிரம் பேரை அழைத்து, போட்டோ எடுத்துக் கொண்டாரே தவிர, அடுத்த கட்டமாக, மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து, கட்சி துவக்கும் பணிகள் குறித்து, ரஜினி ஆலோசிக்கவில்லை.

எதிர்பார்ப்பு:

கருணாநிதி, வீரப்பன் சந்திப்புகளை தொடர்ந்து, நட்சத்திர விழாவில் பங்கேற்க, மலேஷியா சென்று விட்டார். சென்னையில், நேற்று முன்தினம் நடந்த, 'துக்ளக்' பத்திரிகையின் ஆண்டு விழாவில், ரஜினி பங்கேற்பார்; பரபரப்பாக பேசுவார் என, ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அந்த விழாவில், மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி பங்கேற்றதால், அவரை சந்திப்பதை தவிர்த்து, விழாவை புறக்கணித்தார். ஜெட்லியை சந்தித்திருந்தால், ரஜினியை எதிர்க்கும் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், 'பெருந்தீனி' கிடைத்திருக்கும்.

அவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகி விடக் கூடாது என்பதற்காக, ரஜினி ஒதுங்கி கொண்டார். ஆனால், அரசியல் என்று வருகிற போது, இது போன்ற விமர்சனங்களுக்கு, அவர் அஞ்சக் கூடாது என்பது தான், ரசிகர்களின் கருத்து.

சென்னையில், நேற்று முன்தினம், போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்திருந்த, ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம், கட்சி தொடர்பாக, எதையும் அவர் பேசவில்லை; பொங்கல் வாழ்த்து மட்டும் கூறி, அனுப்பி விட்டார். இதனால், அவரிடம் எதிர்பார்த்த எந்த அரசியல் பரபரப்பும் இல்லையே என்ற விரக்தி, ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ரஜினியின் மவுனம், அவரை கடுமையாக எதிர்த்து வரும் அமைப்புகளுக்கும், சில கட்சிகளுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

NEWS TODAY 11.06.2026