Tuesday, May 22, 2018

'நீட்' மதிப்பெண் குறைவால் அரசு டாக்டர்களுக்கு சிக்கல்

Added : மே 22, 2018 00:40

  'நீட் தேர்வில், அரசு டாக்டர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருப்பதால், முதுநிலை மருத்துவ படிப்பில், 70 சதவீத இடங்களை, அரசு சாரா டாக்டர்கள் பெற வாய்ப்புள்ளது' என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

'முதுநிலை மருத்துவ படிப்பில், அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.அரசு டாக்டர்களுக்கு, சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணையிலும், உயர் நீதிமன்றம் சில மாற்றங்கள் செய்து உத்தரவிட்டது. இதனால், முதுநிலை மருத்துவ கவுன்சிலிங்கில், அரசு டாக்டர்கள், அதிக இடங்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:கடந்தாண்டில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், அனைத்து டாக்டர்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கி, தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது. இதனால், நீட் தேர்வில், மற்றவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், அரசு டாக்டர்களே, 98 சதவீத அளவுக்கு, முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களைப் பெற்றனர்.நடப்பாண்டில், 5,000 அரசு டாக்டர்கள், முதுநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், சிலருக்கு மட்டுமே சலுகை மதிப்பெண் கிடைத்துள்ளது.நீட் தேர்வில், அரசு சாரா டாக்டர்களை விட, அரசு டாக்டர்கள் குறைவான மதிப்பெண்களே பெற்றுள்ளனர்.இதனால், சலுகை மதிப்பெண் பெற்றவர்களாலும், இடங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பின் மொத்த இடங்களில், 70 சதவீதத்துக்கும் மேல், அரசு சாரா டாக்டர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
ரூ.1,000க்குள் பொருட்கள் வாங்கினால் வரி இல்லையா?

Added : மே 22, 2018 00:35

'ஆயிரம் ரூபாய்க்குள் பொருட்கள் வாங்கினால், ஜி.எஸ்.டி., கிடையாது என, சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம்' என, வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது: 'சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள் மற்றும் ஜவுளி கடைகளில், எப்போது பொருட்கள் வாங்கினாலும், பில் போடும் முன், எச்சரிக்கையாக இருங்கள். 'கடைக்காரர்களிடம், ஆயிரம் ரூபாய்க்கு உண்டான பொருட்களை, தனித்தனியே பிரித்து கொடுத்து, பில் போடுங்கள்' என்பது போன்ற தகவல்கள், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற, சமூக வலைதளங்களில் பரவுகின்றன.மேலும், 'ஒன்று முதல், ஆயிரம் ரூபாய் வரை, ஜி.எஸ்.டி., இல்லை. ஆயிரம் முதல், 1,500 ரூபாய் வரை, 2.5 சதவீதம், 1,500 முதல், 2,500 ரூபாய் வரை, 6 சதவீதம், 2,500 முதல், 4,500 ரூபாய் வரை, 18 சதவீதம் வரி விதிக்கப்படும்' என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.இந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை. இதை, பொது மக்கள் நம்ப வேண்டாம்.இவ்வாறு வரித்துறை அதிகாரிகள் கூறினர்.

- நமது நிருபர் ---
பள்ளிகள் திறப்பு இன்னும் 10 நாளில் ஊர் திரும்ப பஸ் கிடைக்காமல் அவதி

Added : மே 22, 2018 00:25 | 

தமிழகத்தில், பள்ளிகள் திறப்பதற்கு இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்ற, தென் மாவட்ட பயணியர் மீண்டும் தொழில் நகரங்களுக்கு திரும்பவுள்ளதால், பஸ், ரயில்கள் அனைத்தும் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களையும், கூடுதலாக சிறப்பு பஸ்களை யும் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்வு முடிவு : தமிழகத்தில், கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகள், ஜூன், 4ல் திறக்கப்பட உள்ளன. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நாளை வெளியாகிறது.சொந்த ஊருக்கு சென்ற மாணவ - மாணவியர், பெற்றோருடன் மீண்டும், தொழில் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால், நெல்லை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து, சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், பெங்களூரு நகரங்களுக்கு இயக்கப்படும், வழக்கமான ரயில்கள், பஸ்கள், ஆம்னி பஸ்கள், கூட்டதால் நிரம்பி வழிகின்றன. அது மட்டுமின்றி, இந்த வழித்தடத்தில், மே, 22ல் துவங்கி, ஜூன், 5 வரை, அனைத்து முன்பதிவுகளும் முடிவுக்கு வந்து விட்டதால், முன்பதிவு செய்ய முடியாமல் பயணியர் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
நஷ்டம் : கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில், அரசு போக்குவரத்துக்கழகங்கள், நஷ்டத்தை காரணம் காட்டி, இந்த வழித்தடங்களில், 30 சதவீத பஸ்களின் இயக்கத்தை நிறுத்தி உள்ளதால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து டிரைவர், கண்டக்டர்கள் கூறியதாவது: கோடை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணியர், வழக்கமாக மே மாத கடைசி வாரத்தில் தான் பணி இடங்களுக்கு திரும்புவர். ஆனால், நடப்பாண்டு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே திரும்ப துவங்கி உள்ளதால், பஸ்கள் அனைத்தும் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, தென் மாவட்டங்களில் இருந்து, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல் ஆகிய இடங்களுக்கு வரும் பயணியரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால், பயணியர் மட்டுமின்றி, நாங்களும் அவதிக்குள்ளாகி வருகிறோம். அரசு, நிறுத்தி வைத்துள்ள பஸ்களை, பள்ளி, கல்லுாரிகள் திறக்கும் வரை, அந்தந்த வழித்தடங்களில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது சிறப்பு நிருபர்-
கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ஜனாதிபதி

Added : மே 22, 2018 06:38 |



  சிம்லா : சிம்லாவில் நடந்த பல்கலை பட்டமளிப்பு விழாவில், தனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என பல்கலை அறிவிக்க, அதனை ஏற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மறுத்தார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா ஆகியோர் 6 நாள் பயணமாக, இமாச்சல் தலைநகர் சிம்லாவுக்கு சென்றுள்ளனர். பயணத்தின் ஒரு பகுதியாக நவ்னியிலுள்ள டாக்டர் ஒய்.எஸ்.பார்மர் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலையில் 9வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு, பல்கலை அறிவியல் துறையில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்தது. இதனை ஏற்க ஜனாதிபதி மறுத்துவிட்டார்.

பின் தனது உரையின் போது ஜனாதிபதி குறிப்பிடுகையில், 'இத்துறை சார்ந்த தேர்ச்சி தனக்கு இல்லாததால் கொள்கை அடிப்படையில் இப்பட்டத்தை பெற விரும்பவில்லை' எனத் தெரிவித்தார்.
தலையங்கம்

தாங்க முடியாத பெட்ரோல்–டீசல் விலை



கடந்த 14–ந் தேதி முதல் பெட்ரோல்–டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போதெல்லாம் பொதுமக்களுக்கு அடிக்கடி மாநில சட்டசபை தேர்தல் நடந்தால் பெட்ரோல்–டீசல் விலை உயராமல் இருக்குமே! என்ற எண்ணம் வந்துவிட்டது.

மே 22 2018, 04:00
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத் சட்டசபை தேர்தல் நடந்தது. சரக்கு சேவை வரியில் பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது. பெட்ரோல்–டீசல் விலை தினமும் 1 முதல் 3 காசுகள் வரை குறைந்து கொண்டே வந்தது. குஜராத் சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவு டிசம்பர் 13–ந்தேதி முடிந்தவுடன் விலை உயரத்தொடங்கிவிட்டது. அதுபோல, கர்நாடக மாநில தேர்தல் நடந்ததையொட்டி, கடந்த மாதம் 24–ந்தேதி முதல் இந்த மாதம் 14–ந் தேதிவரை பெட்ரோல்–டீசல் விலை உயர்த்தப்படாமல் அப்படியே நிலையாக நிறுத்தப்பட்டு வந்தது. பொதுவாக பெட்ரோல்–டீசல் விலை நிர்ணயிக்கப்படுவது சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொறுத்தும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை பொறுத்தும்தான்.

ரூபாய் மதிப்பு குறைந்ததால் அதன் காரணமாக அதிக விலைகொடுத்து டாலர் வாங்கவேண்டிய நிலையில் அந்த செலவு அதிகரித்துள்ளது. ஏப்ரல் 24–ந்தேதிக்குப்பிறகு கச்சா எண்ணெய் விலை ஏறத்தாழ ஒரு பீப்பாய்க்கு 3 டாலருக்கு மேல் உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 79.07 அமெரிக்க டாலராகும். இதுபோல, ரூபாய் மதிப்பும், ஒரு டாலருக்கு கணக்கிட்டால் 68.01 காசாக இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது, ரூபாய் மதிப்பு சரிந்துவிட்டது. எனவேதான் பெட்ரோல்–டீசல் விலை அதிகமாக உயர்ந்துகொண்டே போகிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் இதுவரை இல்லாத அளவு பெட்ரோல்–டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் வாழ்வில் பெரும்பாதிப்பு ஏற்படும்நிலை உருவாக தொடங்கிவிட்டது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.47 ஆகும். டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.71.59 ஆகும். இவ்வளவு விலை வாசியை மக்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது, ரூபாய் மதிப்பு விலை சரிந்து விட்டது என்று பெட்ரோல்–டீசல் விலை உயர்வுக்கு ஒரு காரணத்தைச் சொன்னாலும், மத்திய–மாநில அரசுகள் விதிக்கும் வரிகள்தான் விலை உயர்வை மேலும் தூண்டுகிறது, அதிகரிக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 47 சதவீதம் மத்திய அரசின் கலால்வரியும், மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரியும் ஆகும். அதுபோல, டீசல் விலையில் 40 சதவீதம் மத்திய–மாநில அரசுகள் விதிக்கும் வரிகளை பொறுத்துதான் இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வை நாம் குறைக்கமுடியாது. ரூபாய் மதிப்பு விலை வீழ்ச்சியை தடுக்கமுடியாது. பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்றால், உடனடியாக மத்திய–மாநில அரசுகள் வரிகளை குறைப்பதை தவிர வேறு வழியில்லை. ஆகவே, மக்களின் நலன்தான் முக்கியம் என்று செயல்படவேண்டிய மத்திய–மாநில அரசுகள் உடனடியாக இந்த வரிகளை குறைக்கவும், 28 சதவீத சரக்கு சேவைவரி வளையத்துக்குள் பெட்ரோல்–டீசல் விலையை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணம் இது. விலைவாசி உயர்வில் இருந்து பொதுமக்களை அரவணைத்து காப்பாற்ற வேண்டியதுதான் மத்திய–மாநில அரசுகளின் கடமையாகும்.
மாநில செய்திகள்

10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு





10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது.

மே 22, 2018, 05:15 AM

சென்னை,

10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது. இணையதளத்தில் காலை 9.30 மணிக்கு முடிவுகளை பார்க்கலாம்.

10-ம் வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் ஏப்ரல் 20-ந் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்களும், 36 ஆயிரத்து 649 தனி தேர்வர்களும் என மொத்தம் 10 லட்சத்து 1,140 பேர் எழுதினர்.

இதில் மாணவிகள் 4 லட்சத்து 81 ஆயிரத்து 371 பேரும், மாணவர்கள் 4 லட்சத்து 83 ஆயிரத்து 120 பேரும் அடங்குவர். மாணவிகளை விட 1,749 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களில் 5 திருநங்கைகளும், 186 சிறை கைதிகளும் தேர்வு எழுதினர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி (அதாவது, நாளை) வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து முடிந்தது.

மதிப்பெண்கள் பட்டியல் மீண்டும் சரிப்பார்க்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடந்து முடிந்தன. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (புதன் கிழமை) வெளியாகிறது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை (நாளை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும். www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவை பார்க்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, May 21, 2018

மனிதப் பிறவியின் மாண்பு

By வாதூலன்  |   Published on : 21st May 2018 02:36 AM  
அண்மைக் காலமாக இந்தியா முழுவதும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை விவசாயிகள் தொடர்புள்ளவை. மிக அண்மையில் தமிழ்நாட்டில் நேர்ந்த இரண்டு தற்கொலைகள் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. ஒன்று ஓர் அரசியல் கட்சித் தலைவரின் உறவினரின் தற்கொலை. மற்றொன்று நெல்லை மாவட்ட மாணவனின் தற்கொலை. இரண்டுமே அரசியல் சார்பு கொண்டவை.
தற்கொலைகள் ஏன் நிகழ்கின்றன? ஒரு வகையான மன அழுத்தத்தினாலும், பிரச்னைகளிலிருந்து எளிதாக விடுபடவுமே சிலர் இச்செயலில் ஈடுபடுகிறார்கள். பள்ளித் தேர்வில் தோல்வி, காதல் நிராகரிப்பு, உயர் அதிகாரிகளின் கெடுபிடி போன்ற பலவும் இதில் அடங்கும். ஆனால், ஒரு பொதுப் பிரச்னை சம்பந்தமாக தனி மனிதர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் சரிதானா? இல்லை என்றே கூறத்தோன்றுகிறது.
இதுவரை ஒரு சில தற்கொலைகள்தான் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, பலன் கிட்டுவதற்கும் காரணிகளாய் அமைந்துள்ளன. குறிப்பாக இரண்டு தற்கொலைகள். இரண்டுமே உணர்வுபூர்வமான பிரச்னைகள். முதலாவது வாஞ்சிநாதன். ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்த கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட நிகழ்வு 1911-இல் நடந்தது. ஆனால், இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து 1947-இல். இருந்தால்கூட தேச விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களும் தீவிரமாகப் பங்கேற்றார்கள் என்பதற்கு ஒரு சான்றாக இது அமைந்தது.
மற்றொன்று, "தமிழ்நாடு' என்று பெயர்சூட்டக் கோரி சங்கரலிங்கனார் தொடர்ந்து இரண்டு மாதத்துக்கு மேல் உண்ணாவிரதம் இருந்து, பிறகு இறந்து போனார். ஆனாலும், 1967-இல் அண்ணாதுரை தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்தான் "தமிழ்நாடு' என்ற பெயர் அரசாங்கப் பதிவேடுகளில் இடம்பெற்றது.
கிட்டத்தட்ட சங்கரலிங்கனார் மாதிரியே உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தவர் ஆந்திராவைச் சேர்ந்த பொட்டி ஸ்ரீராமுலு. மெட்ராஸ் பிரசிடென்சியிலிருந்து ஆந்திர மகாணம் தனியே பிரிய வேண்டும் என்பது அவர் கோரிக்கை. அந்த ஒரு தற்கொலைக்கு உடனே பலன் ஏற்பட்டது. பிறகு, நேருவின் தலைமையிலான காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து, ஆந்திரா தனி மாநிலமாக மாறியது.
மேற்சொன்னவற்றோடு தற்போது நிகழ்ந்த தற்கொலைகளை ஒப்பிட முடியுமா என்பது கேள்விக் குறிதான். ஏனெனில், நெல்லை மாவட்ட மாணவன் தினேஷ், தந்தையின் குடிப்பழக்கத்தால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கும், பிற தம்பி, தங்கைகளுக்கும் அவர்களின் சித்தப்பா உதவி புரிந்து வருகிறார். தினேஷ் கல்வியில் ஆர்வமுள்ளவன் என்றும், மருத்துவப் படிப்பைத் தொடர விரும்பியிருக்கிறான் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தக் கணநேர முடிவு சோகமானது மட்டுமல்ல, பேதமையானதும்கூட.
ஓர் அரசியல்வாதியின் சகோதரி மகன் தீக்குளித்த சம்பவத்தை எப்படி வகைப்படுத்துவது என்றே தெரியவில்லை. அரசியல்வாதியின் உறவினருக்கு அரசியல் சார்பான முடிவுகள் எப்படி எடுக்கப்படும் என்று தெரியாதா என்ன? மேலும், காவிரி நீர்ப் பிரச்னை இன்று நேற்று முளைத்ததல்ல. எல்லா அரசியல் கட்சிகளும் தாங்கள் பதவியில் இல்லாதபோது இதை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி ஆதாயம் தேட முனைகின்றனவே தவிர, உருப்படியாக ஏதும் செய்யவில்லை என்பதே நிதர்சனம்.
நிலைமை இப்படி இருக்க, தற்கொலையால் தான் விரும்பத்தக்க மாறுதல் ஏற்படும் என்று நினைப்பது அறிவுடைமை அல்ல. அதுவும் சுயநலவாதிகள் மிகுந்திருக்கும் இன்றைய சூழ்நிலையில், அதுபோல மாறுதல் நேர்ந்தால் அது எட்டாவது அதிசயமாகத்தான் இருக்கும்.
என் நண்பர் ஒருவர் பட்டப் படிப்பு முடித்து வேலையில் சேர்ந்து, தனது விதவைத் தாயாருடன் வசித்து வந்தார். மெத்தப் படித்த அவருடைய தமையன்மார்களும் தமக்கைகளும் அவரைக் கேலி செய்துகொண்டே இருப்பார்கள். வீட்டில் விசேஷம் ஒன்று நடந்தபோது, அண்ணன் மகள் அவரை ஏளனம் செய்தவுடன் அவர் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்குச் சென்றுவிட்டார். மனம் சமாதானப்பட்டுத் திரும்பியபோது, மனைவியும் தாயாரும் அவருக்கு அறிவுரை கூறினார்கள். தன்னுடைய தற்கொலையால் யாரும் திருந்தி, மாறப்போவதில்லை என்ற எண்ணம் மிக ஆழமாக அவருக்குள் பதிந்தது. ஓய்வு பெற்றபிறகு அவர் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டு, இப்போது நலமாக இருக்கிறார்.
இதற்கு மாறாக, நாசிக் அருகே நான்காம் வகுப்பு படித்த சிறுவன் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக்கொண்டு "சக்திமான் என்னைக் காப்பாற்று' என்று கூவி அழைத்த ஒரு பழைய சம்பவமும் இருந்திருக்கிறது. 1993-இல் "சக்திமான்' தொலைகாட்சித் தொடர் ஏற்படுத்திய பாதிப்பு இது. சிறுவர்கள் பலர் இதுபோன்ற வீரதீரச் செயல்களில் இறங்கியதாக நிறைய செய்திகள் அப்போது வெளிவந்தன.
ஆனால் ஒன்று உறுத்துகிறது. வீராவேசம் பேசும் அரசியல்வாதிகள் குறைந்தபட்சம் தொடர் உண்ணாவிரதம் கூட இருப்பதில்லையே ஏன்?
ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறுகிறார்: "இந்தச் சரீரம் என்னுடையது மட்டுமல்ல, இந்தச் சரீரத்தை என்னுடையது என்று சொந்தம் கொண்டாடும் உரிமை, தாய் - தந்தைக்கும் இருக்கிறது. அதனால் அதைக் கொலை செய்யும் உரிமை நமக்கு இல்லை'. 
அப்பர் தேவாரமும் "மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்று கூறுகிறது. "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்று ஒளவைப்பாட்டியும் மனிதப் பிறவியின் மாண்பைக் கூறியிருக்கிறார். இத்தகைய மாண்புமிக்க மானுடப் பிறவியை அற்பக் காரணங்களுக்காக மாய்த்துக் கொள்வது போன்ற பேதமைச் செயல் வேறொன்றுமில்லை!

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...