Monday, May 21, 2018

மனிதப் பிறவியின் மாண்பு

By வாதூலன்  |   Published on : 21st May 2018 02:36 AM  
அண்மைக் காலமாக இந்தியா முழுவதும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை விவசாயிகள் தொடர்புள்ளவை. மிக அண்மையில் தமிழ்நாட்டில் நேர்ந்த இரண்டு தற்கொலைகள் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. ஒன்று ஓர் அரசியல் கட்சித் தலைவரின் உறவினரின் தற்கொலை. மற்றொன்று நெல்லை மாவட்ட மாணவனின் தற்கொலை. இரண்டுமே அரசியல் சார்பு கொண்டவை.
தற்கொலைகள் ஏன் நிகழ்கின்றன? ஒரு வகையான மன அழுத்தத்தினாலும், பிரச்னைகளிலிருந்து எளிதாக விடுபடவுமே சிலர் இச்செயலில் ஈடுபடுகிறார்கள். பள்ளித் தேர்வில் தோல்வி, காதல் நிராகரிப்பு, உயர் அதிகாரிகளின் கெடுபிடி போன்ற பலவும் இதில் அடங்கும். ஆனால், ஒரு பொதுப் பிரச்னை சம்பந்தமாக தனி மனிதர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் சரிதானா? இல்லை என்றே கூறத்தோன்றுகிறது.
இதுவரை ஒரு சில தற்கொலைகள்தான் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, பலன் கிட்டுவதற்கும் காரணிகளாய் அமைந்துள்ளன. குறிப்பாக இரண்டு தற்கொலைகள். இரண்டுமே உணர்வுபூர்வமான பிரச்னைகள். முதலாவது வாஞ்சிநாதன். ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்த கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட நிகழ்வு 1911-இல் நடந்தது. ஆனால், இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து 1947-இல். இருந்தால்கூட தேச விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களும் தீவிரமாகப் பங்கேற்றார்கள் என்பதற்கு ஒரு சான்றாக இது அமைந்தது.
மற்றொன்று, "தமிழ்நாடு' என்று பெயர்சூட்டக் கோரி சங்கரலிங்கனார் தொடர்ந்து இரண்டு மாதத்துக்கு மேல் உண்ணாவிரதம் இருந்து, பிறகு இறந்து போனார். ஆனாலும், 1967-இல் அண்ணாதுரை தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்தான் "தமிழ்நாடு' என்ற பெயர் அரசாங்கப் பதிவேடுகளில் இடம்பெற்றது.
கிட்டத்தட்ட சங்கரலிங்கனார் மாதிரியே உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தவர் ஆந்திராவைச் சேர்ந்த பொட்டி ஸ்ரீராமுலு. மெட்ராஸ் பிரசிடென்சியிலிருந்து ஆந்திர மகாணம் தனியே பிரிய வேண்டும் என்பது அவர் கோரிக்கை. அந்த ஒரு தற்கொலைக்கு உடனே பலன் ஏற்பட்டது. பிறகு, நேருவின் தலைமையிலான காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து, ஆந்திரா தனி மாநிலமாக மாறியது.
மேற்சொன்னவற்றோடு தற்போது நிகழ்ந்த தற்கொலைகளை ஒப்பிட முடியுமா என்பது கேள்விக் குறிதான். ஏனெனில், நெல்லை மாவட்ட மாணவன் தினேஷ், தந்தையின் குடிப்பழக்கத்தால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கும், பிற தம்பி, தங்கைகளுக்கும் அவர்களின் சித்தப்பா உதவி புரிந்து வருகிறார். தினேஷ் கல்வியில் ஆர்வமுள்ளவன் என்றும், மருத்துவப் படிப்பைத் தொடர விரும்பியிருக்கிறான் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தக் கணநேர முடிவு சோகமானது மட்டுமல்ல, பேதமையானதும்கூட.
ஓர் அரசியல்வாதியின் சகோதரி மகன் தீக்குளித்த சம்பவத்தை எப்படி வகைப்படுத்துவது என்றே தெரியவில்லை. அரசியல்வாதியின் உறவினருக்கு அரசியல் சார்பான முடிவுகள் எப்படி எடுக்கப்படும் என்று தெரியாதா என்ன? மேலும், காவிரி நீர்ப் பிரச்னை இன்று நேற்று முளைத்ததல்ல. எல்லா அரசியல் கட்சிகளும் தாங்கள் பதவியில் இல்லாதபோது இதை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி ஆதாயம் தேட முனைகின்றனவே தவிர, உருப்படியாக ஏதும் செய்யவில்லை என்பதே நிதர்சனம்.
நிலைமை இப்படி இருக்க, தற்கொலையால் தான் விரும்பத்தக்க மாறுதல் ஏற்படும் என்று நினைப்பது அறிவுடைமை அல்ல. அதுவும் சுயநலவாதிகள் மிகுந்திருக்கும் இன்றைய சூழ்நிலையில், அதுபோல மாறுதல் நேர்ந்தால் அது எட்டாவது அதிசயமாகத்தான் இருக்கும்.
என் நண்பர் ஒருவர் பட்டப் படிப்பு முடித்து வேலையில் சேர்ந்து, தனது விதவைத் தாயாருடன் வசித்து வந்தார். மெத்தப் படித்த அவருடைய தமையன்மார்களும் தமக்கைகளும் அவரைக் கேலி செய்துகொண்டே இருப்பார்கள். வீட்டில் விசேஷம் ஒன்று நடந்தபோது, அண்ணன் மகள் அவரை ஏளனம் செய்தவுடன் அவர் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்குச் சென்றுவிட்டார். மனம் சமாதானப்பட்டுத் திரும்பியபோது, மனைவியும் தாயாரும் அவருக்கு அறிவுரை கூறினார்கள். தன்னுடைய தற்கொலையால் யாரும் திருந்தி, மாறப்போவதில்லை என்ற எண்ணம் மிக ஆழமாக அவருக்குள் பதிந்தது. ஓய்வு பெற்றபிறகு அவர் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டு, இப்போது நலமாக இருக்கிறார்.
இதற்கு மாறாக, நாசிக் அருகே நான்காம் வகுப்பு படித்த சிறுவன் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக்கொண்டு "சக்திமான் என்னைக் காப்பாற்று' என்று கூவி அழைத்த ஒரு பழைய சம்பவமும் இருந்திருக்கிறது. 1993-இல் "சக்திமான்' தொலைகாட்சித் தொடர் ஏற்படுத்திய பாதிப்பு இது. சிறுவர்கள் பலர் இதுபோன்ற வீரதீரச் செயல்களில் இறங்கியதாக நிறைய செய்திகள் அப்போது வெளிவந்தன.
ஆனால் ஒன்று உறுத்துகிறது. வீராவேசம் பேசும் அரசியல்வாதிகள் குறைந்தபட்சம் தொடர் உண்ணாவிரதம் கூட இருப்பதில்லையே ஏன்?
ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறுகிறார்: "இந்தச் சரீரம் என்னுடையது மட்டுமல்ல, இந்தச் சரீரத்தை என்னுடையது என்று சொந்தம் கொண்டாடும் உரிமை, தாய் - தந்தைக்கும் இருக்கிறது. அதனால் அதைக் கொலை செய்யும் உரிமை நமக்கு இல்லை'. 
அப்பர் தேவாரமும் "மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்று கூறுகிறது. "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்று ஒளவைப்பாட்டியும் மனிதப் பிறவியின் மாண்பைக் கூறியிருக்கிறார். இத்தகைய மாண்புமிக்க மானுடப் பிறவியை அற்பக் காரணங்களுக்காக மாய்த்துக் கொள்வது போன்ற பேதமைச் செயல் வேறொன்றுமில்லை!

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...