Monday, May 21, 2018

இந்தப் பழக்கத்தை என்னால விடவே முடியல!" - மலிவு விலை போதை அதிர்ச்சி
 
விகடன் 

  மதுவில் தொடங்கி மருந்துவரை பல்வேறு பரிமாணங்களில் உலகெங்கும் போதை தன்னை வியாபித்துக் கொண்டிருக்கிறது. ஒருவர் வாழும் சூழலும், தேவையும்தான் அவர்களின் போதை என்னவென்பதை நிர்ணயிக்கின்றன. எவ்வித சம்பாத்தியமும் இல்லாமல், குடும்பத்தின் பிடிமானமும் இல்லாமல் சுற்றித்திரியும் இளைஞர்கள் தேர்ந்தெடுப்பது மிகவும் மலிவு விலை போதையைத்தான். பஞ்சர் போடும் பசை, ஒயிட்னர் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்தே போதையை ஏற்றிக் கொள்கிறார்கள்.

செங்கல்பட்டு பகுதிகளில் போதையில் சுற்றித் திரியும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைக் காணமுடிகிறது. இப்படிப் போதையை ஏற்றிக் கொள்ளும் நபர்கள் அப்படியே சில நிமிடங்கள் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிடுகிறார்கள். இவ்வகை போதைக்கு அடிமையானவர்களின் மரணம் மிகவும் கொடியது. போதைக்காக இவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் நுரையீரல் வழியாக நேரடியாக மூளையைப் பாதிக்கும் தன்மை கொண்டவை. மேலும் மதுவை விடவும் பலமடங்கு வேகமாக செயல்பட்டு உடல்உறுப்புகளை இவை பாதிப்பதால், வெகு சீக்கிரத்திலேயே உடல் உறுப்புகளானது செயல் இழக்கத் தொடங்கிவிடும். இதன் தொடர்ச்சியாக உடலின் மொத்த இயக்கத்தையும் சிலவருடங்களிலேயே முடக்கிவிடும் அபாயமும் உள்ளது.

செங்கல்பட்டு பகுதியில், ஒரு சிறிய பிளாஸ்டிக் கவரோடு சுற்றித்திரிகிறார் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுவயது இளைஞர். சிறுவயதிலிருந்தே பிரபல நிறுவனத்தின் பசை ஸ்ட்ராங்காக அவரிடம் ஒட்டிக்கொண்டுள்ளது. இன்றுவரை அவரால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அருகில் உள்ள பொன்விளைந்த களத்தூர் பகுதியிலிருந்து தினமும் காலையில் கிளம்பி செங்கல்பட்டு பேருந்து நிலையத்துக்கு வந்துவிடுகிறார். பேருந்து நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பிச்சை எடுத்து, அந்தக் காசில், பஞ்சர் பசையை வாங்கி போதை ஏற்றிக்கொள்கிறார். போதை, தலைக்கு ஏறிய நிலையில், மீண்டும் ‘பசிக்குது… காசு வேணும்’ எனக் கையேந்தி திரிகிறார். அவரைப் பற்றித் தெரிந்தோர் முறைப்பார்கள். தெரியாதவர் பத்து, இருபது எனக் கொடுத்து கரிசனம் காட்டுவார்கள். பெரும்பாலான கடைகளில் இவருக்கு அந்தப் பசை விற்பது கிடையாது. இதைப் பயன்படுத்தி சில கடைகளில் அதிக விலையிலும் இந்தப் பசை இவருக்கு விற்கப்படுகிறது.

பேருந்து நிலையத்தில் போதையில் இருந்த குமாரிடம் பேசினோம்… “எங்க அம்மா பிச்சை எடுப்பாங்க. அவங்க கத்துகொடுத்த தொழில் இதுதான். பொய் சொல்லமாட்டேன். திருட மாட்டேன். பணம் கொடுக்கலையா… விட்டுட்டு வேற ஆளப் பார்ப்பேன். பிச்சை எடுக்கும்போது இவ்வளவுதான் கொடுக்கணும்னு கேட்க மாட்டேன். ஒரு ரூபாய் கொடுத்தாக்கூட வாங்கிக்குவேன். ஒரு நாளைக்கு சுமாரா 250 ரூபாய் கிடைக்கும். மாதம் 6,000 ரூபாய்க்கு மேல வருமானம் வரும். சாயங்காலம்வரை பிச்சை எடுத்து முடிச்சுட்டு மூணு மணிக்கு மேல பஸ்ஸுல வீட்டுக்குக் கிளம்பிவிடுவேன். வீட்டுக்குப் போய் அண்ணி கைல காசு கொடுத்துட்டு, வெளியே கிளம்பிடுவேன். பின்னர் பசையைப் பயன்படுத்தி போதை ஏத்திக்கொள்வேன். அவ்வளவுதான்” என விரக்தியாகச் சொன்னவர் தொடர்ந்தார்.

“ரெண்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன். மெட்ராஸுல இருந்து எங்க அண்ணன் இங்க வரும்போது, என்னையும் கூட்டிக்கிட்டு வந்துட்டார். செங்கல்பட்டுல இருக்கும் பசங்க எனக்கு இதைக் கத்துக்கொடுத்துட்டாங்க. என்னால இதை விடவே முடியல. நான் இந்த ஊரு முழுக்க பிச்சை எடுத்தவன் என்பதால, என்னை எல்லோருக்கும் அடையாளம் தெரியும். எனக்கு யாரும் வேலை கொடுக்கமாட்டாங்க. அப்படியே கொடுத்தாலும் அந்தக் கடைக்கு வர்றவங்க இந்தப் பிச்சைக்காரனுக்கா வேலை கொடுத்தீங்கன்னு சொல்லி கெடுத்து விட்டுடுவாங்க. அப்புறம் வேலைக்கு சேர்த்தவங்களுக்குத்தான் கெட்ட பேர் வரும். பெட்டிக்கடை வச்சாக்கூட, அதில் வர்ற வருமானம் மொத்தமா எங்க அண்ணன், அண்ணிக்குத்தான் போகும். சம்பாதிக்குற காசுகூட நம்ம கையில இருக்காது. ஒரே கெட்டப்ல இருந்தா மாட்டிக்குவேன். அதனால அடையாளம் தெரியாம இருக்க அடிக்கடி மொட்டை அடிச்சுக்குவேன்.” என்றவர் “டைம் ஆகுது நான் வர்றேன்” என சொல்லிவிட்டு விர்ரென கிளம்பினார்.

குமாரைப் போல நிறைய இளைஞர்கள் செங்கல்பட்டில் சுற்றித் திரிகிறார்கள். இரும்பு பொறுக்கி எடைக்குப் போடுவது, அந்த வேளை உணவுக்கான பணமும், கொஞ்சம் பசையும் இருந்தால் அவர்களுக்குப் போதும். எல்லோரும் ஓய்வாக இருக்க ஓர் இடத்தைத் தேடுகிறார்கள். மக்கள் அதிகம் புழங்காத ரயில் தண்டவாளங்கள், பாழடைந்தக் கட்டிடங்கள் பக்கமாக ஒதுங்கி போதையை ஏற்றிக் கொள்கிறார்கள். தொடர்ந்து ஒரே இடத்தில் இல்லாமல் இடம் பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.

இத்தகையப் போதையை பயன்படுத்துபவர்களுக்கு அதன் தீவிரம், விளைவுகள் எல்லாம் நன்றாகவேத் தெரியும். ஆனாலும் அவர்களால் அதைக் கைவிட முடிவதில்லை. இதுபோன்று போதையில் திரிபவர்களை மீட்க அரசின் எந்தத் துறையும் முன்வருவதில்லை. தனியார் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள் மட்டுமே இவர்களைப் போன்றவர்களை மீட்க முடியும் என்றாலும், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள்தான் இவர்களை மீட்பு மையங்களுக்குக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இவர்களை மீட்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், இத்தகைய போதை இளைஞர்களைப் பற்றி யாரும் கண்டுகொள்வதே இல்லை. இத்தகையப் போதைப் பொருட்களை உபயோகப்படுத்துபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சரிவரச் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுவார்கள். கண்ணுக்கெட்டிய தொலைவில் மரணம் அவர்களைத் துரத்துவது தெரியும். ஆனாலும் அந்தப் போதை, சிரித்துக்கொண்டே மரணத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது...

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...