இரவு நேர விபத்துகளை தடுக்க வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் தந்து களைப்பைப் போக்கும் காவல்துறை!
விகடன் 11 hrs ago
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரங்களில் நடக்கும் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் அளித்து களைப்பு நீக்கும் சேவைப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாடானை தாலுகா தொண்டி வழியாக கிழக்குக் கடற்கரைச் சாலை செல்கிறது. இந்தச் சாலை தொண்டி, எஸ்.பி.பட்டிணம், திருப்பாலைக்குடி காவல் நிலைய எல்லைக்குட்டபட்ட பகுதிகளில் குறிப்பாக வட்டாணம் அருகே மற்றும் உப்பூர், திருப்பாலைக்குடி அருகே அடிக்கடி விபத்துகள் நிகழந்து வருகின்றன. இந்த இடங்களில் கடந்த சில மாதங்களில் பல்வேறு விபத்துகள் நடந்து, உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான விபத்துக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களிலேயே நடக்கின்றன.
இதேபோல், ராமநாதபுரம்-மதுரை இடையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும் இரவு நேரங்களில் அதிக அளவில் வாகன விபத்துகள் ஏற்பட்டு, உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. நள்ளிரவு நேரங்களில் ஓய்வின்றி வாகனங்களை இயக்கி வரும் ஓட்டுநர்கள், தூக்க கலக்கத்துடன் வாகனங்களை இயக்குவதால் இத்தகைய விபத்துகள் ஏற்படுவது வழக்கமாகி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, இரவு நேர வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கி ஓய்வு அளித்து ஓட்டுநர்களின் களைப்பு, நீங்கிய பின்னர் வாகனங்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இதன்படி, திருவாடானை துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இரவு 10 மணிக்கு மேல் செல்லும் வாகனங்களை தொண்டி, திருப்பாலைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் நிறுத்தி, அந்த வாகன ஓட்டுநர்களுக்கு இலவசமாக சுடச் சுட தேநீர் வழங்கி ஓட்டுநர்களின் களைப்பினை போக்கி அனுப்பும் பணியில் திருவாடானை காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, தொண்டி ஆய்வாளர் நலாயினி, திருப்பாலைக்குடி ஆய்வாளர் ராணிமுத்து, திருவாடானை அணைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரீஸ்வரி ஆகியோர் போலீஸாருடன் இணைந்து இந்த சேவை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சாலை ஓரங்களில் கருவேல மரங்கள் வளர்ந்திருந்தால் அதையும் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ரோடுகளில் பள்ளங்கள் இருந்தால் அதையும் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதோடு, ஆங்காங்கே விபத்து பற்றிய விழப்புணர்வு பதாதைகளும் வைத்து விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இதேபோல் மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 10 மணிக்கு மேல் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு பார்த்திபனூர் சோதனை சாவடி அருகே தேநீர் வழங்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் தொடர்ந்து வெகுதூரம் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸார் இந்த இரவு நேர தேநீர் உபசரிப்பு, ஓட்டுநர்கள் மத்தியில் மட்டும் இன்றி, பொதுமக்கள் மத்தியிலும் போலீஸாருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.
No comments:
Post a Comment