Tuesday, May 22, 2018

'நீட்' மதிப்பெண் குறைவால் அரசு டாக்டர்களுக்கு சிக்கல்

Added : மே 22, 2018 00:40

  'நீட் தேர்வில், அரசு டாக்டர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருப்பதால், முதுநிலை மருத்துவ படிப்பில், 70 சதவீத இடங்களை, அரசு சாரா டாக்டர்கள் பெற வாய்ப்புள்ளது' என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

'முதுநிலை மருத்துவ படிப்பில், அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.அரசு டாக்டர்களுக்கு, சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணையிலும், உயர் நீதிமன்றம் சில மாற்றங்கள் செய்து உத்தரவிட்டது. இதனால், முதுநிலை மருத்துவ கவுன்சிலிங்கில், அரசு டாக்டர்கள், அதிக இடங்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:கடந்தாண்டில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், அனைத்து டாக்டர்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கி, தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது. இதனால், நீட் தேர்வில், மற்றவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், அரசு டாக்டர்களே, 98 சதவீத அளவுக்கு, முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களைப் பெற்றனர்.நடப்பாண்டில், 5,000 அரசு டாக்டர்கள், முதுநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், சிலருக்கு மட்டுமே சலுகை மதிப்பெண் கிடைத்துள்ளது.நீட் தேர்வில், அரசு சாரா டாக்டர்களை விட, அரசு டாக்டர்கள் குறைவான மதிப்பெண்களே பெற்றுள்ளனர்.இதனால், சலுகை மதிப்பெண் பெற்றவர்களாலும், இடங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பின் மொத்த இடங்களில், 70 சதவீதத்துக்கும் மேல், அரசு சாரா டாக்டர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024