Tuesday, May 22, 2018

பள்ளிகள் திறப்பு இன்னும் 10 நாளில் ஊர் திரும்ப பஸ் கிடைக்காமல் அவதி

Added : மே 22, 2018 00:25 | 

தமிழகத்தில், பள்ளிகள் திறப்பதற்கு இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்ற, தென் மாவட்ட பயணியர் மீண்டும் தொழில் நகரங்களுக்கு திரும்பவுள்ளதால், பஸ், ரயில்கள் அனைத்தும் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களையும், கூடுதலாக சிறப்பு பஸ்களை யும் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்வு முடிவு : தமிழகத்தில், கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகள், ஜூன், 4ல் திறக்கப்பட உள்ளன. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நாளை வெளியாகிறது.சொந்த ஊருக்கு சென்ற மாணவ - மாணவியர், பெற்றோருடன் மீண்டும், தொழில் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால், நெல்லை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து, சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், பெங்களூரு நகரங்களுக்கு இயக்கப்படும், வழக்கமான ரயில்கள், பஸ்கள், ஆம்னி பஸ்கள், கூட்டதால் நிரம்பி வழிகின்றன. அது மட்டுமின்றி, இந்த வழித்தடத்தில், மே, 22ல் துவங்கி, ஜூன், 5 வரை, அனைத்து முன்பதிவுகளும் முடிவுக்கு வந்து விட்டதால், முன்பதிவு செய்ய முடியாமல் பயணியர் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
நஷ்டம் : கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில், அரசு போக்குவரத்துக்கழகங்கள், நஷ்டத்தை காரணம் காட்டி, இந்த வழித்தடங்களில், 30 சதவீத பஸ்களின் இயக்கத்தை நிறுத்தி உள்ளதால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து டிரைவர், கண்டக்டர்கள் கூறியதாவது: கோடை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணியர், வழக்கமாக மே மாத கடைசி வாரத்தில் தான் பணி இடங்களுக்கு திரும்புவர். ஆனால், நடப்பாண்டு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே திரும்ப துவங்கி உள்ளதால், பஸ்கள் அனைத்தும் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, தென் மாவட்டங்களில் இருந்து, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல் ஆகிய இடங்களுக்கு வரும் பயணியரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால், பயணியர் மட்டுமின்றி, நாங்களும் அவதிக்குள்ளாகி வருகிறோம். அரசு, நிறுத்தி வைத்துள்ள பஸ்களை, பள்ளி, கல்லுாரிகள் திறக்கும் வரை, அந்தந்த வழித்தடங்களில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது சிறப்பு நிருபர்-

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...