Wednesday, May 23, 2018

நிபா' தாக்கி இறந்த நர்ஸ் : கணவருக்கு உருக்கமான கடிதம்

Added : மே 23, 2018 00:59




திருவனந்தபுரம்: கேரளாவில், 'நிபா' வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்தபோது, வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த நர்ஸ், லினி, தன் கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதத்தை, கேரள அரசு வெளியிட்டுள்ளது.கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், மார்க்., கம்யூ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில், நிபா வைரஸ் தாக்கி, 11 பேர் உயிரிழந்தனர்; இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.நிபா வைரஸ், வீட்டு விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவுகிறது. குறிப்பாக, பழந்தின்னி வவ்வால்களின் எச்சம், சிறுநீர் மற்றும் மலத்தில் இருந்து இந்த வைரஸ் பரவுகிறது. கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள பெரம்பரா என்ற இடத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை, நிபா வைரஸ் தாக்கியது. அவர்களுக்கு, பெரம்பரா தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி, மூவரும் உயிரிழந்தனர்.இவர்களுக்கு சிகிச்சையில் உதவிய, நர்ஸ், லினி புத்துசேரி, 31, நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க, லினியின் உடலை, குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல், மாவட்ட நிர்வாகமே உடனடியாக எரியூட்டியது.இந்நிலையில், லினி இறக்கும் தருவாயில், வெளிநாட்டில் பணியாற்றும், தன் கணவர் ஷாஜிக்கு எழுதிய உருக்கமான கடிதத்தை, கேரள அரசு வெளியிட்டு உள்ளது.அதன் விபரம்:நான் உங்களை விட்டு நிரந்தரமாக பிரிந்து கொண்டிருக்கிறேன். உங்களை மீண்டும் பார்ப்பேன் என்று தோன்றவில்லை; என்னை மன்னித்து விடுங்கள். நம் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களையும் உங்களுடன் அரபு நாட்டுக்கு அழைத்து சென்று விடுங்கள். நம் தந்தையை போல, அவர்களும் இங்கே தனியாக இருக்கக் கூடாது.நிறைய அன்புடனும், காதலுடனும் - லினி.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த கடிதத்தை, கேரள சுற்றுலா துறை அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன், தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். லினியின் மரணத்துக்கு, கேரள முதல்வர், பினராயி விஜயன், தன், 'பேஸ்புக்' பக்கத்தில் இரங்கல்

தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர் கைது

Added : மே 23, 2018 01:13

சிவகங்கை: சிவகங்கையைச் சேர்ந்த, 13 வயது சிறுமி, எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சார்நிலை கருவூல அலுவலர் ராஜ்குமார், 34, என்பவர் சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் கொடுமை செய்துள்ளார். சிறுமி, வளர்ப்பு தந்தையிடம் தெரிவித்தார், அவர், கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் முத்துக்கண்ணு, சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.விசாரணையில், ராஜ்குமார், ஆறு மாதங்களாக பாலியல் கொடுமைப்படுத்தி வந்ததாக, சிறுமி தெரிவித்தார். ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
வவ்வால் கடிச்ச பழமாக இருக்குமோ?'நிபா' பீதியால் விற்பனை சரிவு!

Added : மே 23, 2018 01:07

பெ.நா.பாளையம்;கேரளாவில் 'நிபா' வைரஸ் பீதி காரணமாக, கோவை பழக்கடைகளில் விற்பனை சரிந்துள்ளது.அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்பட்டுள்ள நிபா வைரஸ் பீதி, தமிழகத்தையும் தொற்றிக் கொண்டுள்ளது. ஆனைகட்டி உள்ளிட்ட, தமிழக - கேரள பகுதிகளில், சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் சிகிச்சை பெறுபவர்களின் முகவரிகளை, சுகாதாரத்துறையினர் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
நிபா வைரஸ், பழங்கள் வாயிலாக பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால், பழங்கள் வாங்குவதில் மக்கள் மத்தியில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கேற்ப, கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பழக்கடைகளில், பழ விற்பனை வழக்கத்தை விட, நேற்று குறைவாக இருந்ததாக, பழ வியாபாரிகள் தெரிவித்தனர்.பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பழ வியாபாரி ஒருவர் கூறுகையில்,'விற்பனையில் பெரிதாக பாதிப்பு இருப்பதாக கூற முடியாது என்றாலும், நேற்றைய தினத்தை விட, இன்று(நேற்று) விற்பனை சற்று குறைவுதான். இதற்கு நிபா வைரஸ்தான் காரணம் என்று கூறி விட முடியாது. எதுவாக இருந்தாலும், பழங்களை நன்கு கழுவி உண்டால், எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றார்.பெரியநாயக்கன்பாளையம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல் கூறியதாவது:காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் இருந்தால், அவரது சுற்றுச்சூழல் எத்தகையது என்பதை ஆராய வேண்டும். குறிப்பாக, காடு மற்றும் பழ மரங்கள் நிறைந்த பகுதியில் இருந்து வருபவராக இருந்தால், அவரை உடனடியாக அரசு ஆம்புலன்ஸ் வாயிலாக, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து வவ்வால்களும் நிபா வைரசால், பாதிக்கப்பட்டுள்ளதாக கூற முடியாது. ஆகவே, பயப்படத் தேவையில்லை. தற்போதைய சூழலில், அடிபடாத பழங்களை தேர்வு செய்து உண்பதே நல்லது. லேசாக அடிபட்ட பழம் என்று, வியாபாரி கூறும் பழம், வவ்வால் கடித்ததாக இருக்கலாம். பழக்கடைகளில் அடிபட்ட பழங்களை, விலை குறைவாக தருகிறார்கள் என வாங்கக் கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.

கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை முன்னாள் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் முகமது அலி கூறுகையில்,''இந்த நோய்க்கான வைரஸ், 5 முதல் 14 நாட்கள் வரை, மனித உடலில் தங்கி பாதிப்பை ஏற்படுத்தும். காய்ச்சல், சோர்வு, தலைவலி, மயக்கம் இதன் அறிகுறிகள். ''இந்த அறிகுறிகள் காணப்பட்டால், அதற்கு பொருத்தமான சிகிச்சையை, உடனடியாக பெற வேண்டும்,'' என்றார்.
வருமான வரி: ஓய்வூதியர்கள் எதிர்ப்பு

Added : மே 23, 2018 00:22

மதுரை: அரசு துறைகளில், 35 ஆண்டுகள் வரை பணி செய்து, பணி நிறைவு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 'இத்தொகை தர்மமோ, தானமோ, அல்ல' என ஓய்வூதிய விதிகளில் விவரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வருமான வரியை, ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்வதற்கு, ஓய்வூதியர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.ஓய்வூதியர் நலச்சங்க தலைவர் காளிதாஸ் கூறியதாவது:நல நிதி, குடும்ப பாதுகாப்பு நிதி தவிர, ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்ய அலுவலர்களுக்கு உரிமையில்லை. ஓய்வூதியத்தில், வருமான வரியை, கருவூல அலுவலர் பிடித்தம் செய்வது, வரம்பு மீறிய செயல். தொழில் மூலம் ஈட்டும் வருவாய்க்கும், முதுமை அடைந்ததற்கு வழங்கும் நிதிக்கும் வேறுபாடு உள்ளது. எனவே வருமான வரி பிடித்தம் கூடாது.இவ்வாறு அவர்

கூறினார்.
காத்திருப்போர் வேறு ரயிலில் செல்லும் வசதி அறிமுகம்

Added : மே 23, 2018 00:59

புதுடில்லி: காத்திருப்பு பட்டியலில் இருப்போர், வேறு ரயிலில் செல்வதற்கு வசதியாக, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., 'விகல்ப்' என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் அல்லது, ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையங்களில், டிக்கெட் முன்பதிவு செய்து, காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணியர், ரயில் புறப்படுவதற்கு, 12 மணி நேரத்திற்கு முன் வரை, டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றால், டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டியுள்ளது.இந்நிலையை மாற்றி, டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலுக்கு பதில், இருக்கை அல்லது படுக்கை வசதியுள்ள ரயில்களில், காலியிடம் இருந்தால், அந்த ரயிலில், தங்கள் டிக்கெட்டுகளை மாற்றிக் கொள்ளும் வசதியை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகப்படுத்துகிறது.இது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., வெளியிட்ட அறிக்கை:காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிக்கு, 'விகல்ப்' என்று பெயரிடப்பட்ட புதிய திட்டத்தில், ஐந்து ரயில்கள் குறித்த தகவல் வழங்கப்படும். தனக்கு வசதியான ரயிலில், இருக்கை அல்லது படுக்கை வசதி காலியாக இருந்தால், அந்த பயணி பயன்படுத்திக் கொள்ளலாம்.ஒருமுறை மாற்று ரயிலில் டிக்கெட் பதிவு செய்து விட்டால், மீண்டும் மாற்ற இயலாது. அதை ரத்து செய்வதானால், ரத்து கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், ரயில் புறப்படுவதற்கு முன், பயணியர் பட்டியல் தயாரிக்கப்படும் போது, டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றால், அவர்களுக்கு வேறு ஒரு ரயிலில் இடம் வழங்கப்படும். மாற்று ரயில் டிக்கெட்டில், கட்டண வேறுபாடு இருந்தால் வசூலிக்கவோ அல்லது வழங்கப்படவோ மாட்டாது.எனவே, மாற்று ரயிலில் டிக்கெட் பெற்றவர்கள், புறப்படும் நாளில், தங்களுடைய, பி.என்.ஆர்., எண்ணை பயன்படுத்தி, டிக்கெட்டை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே சில ரயில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'சைவ தினம்' நிறுத்தி வைப்பு மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை, 'சைவ தினம்' ஆக கொண்டாடும் முடிவு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.'மகாத்மா காந்தியின் பிறந்த நாளான, அக்., 2ல், ரயில் பயணியருக்கு அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது' என, ரயில்வே வாரியம், சமீபத்தில் அறிவித்து இருந்தது.இந்நிலையில், ரயில்வே அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி, மறு உத்தரவு வரும் வரை, இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி, அனைத்து ரயில்வே மண்டல வர்த்தக மேலாளர்களுக்கும், ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

Updated : மே 23, 2018 04:32 | Added : மே 23, 2018 04:31




சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று(மே 23) காலை, 9:30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. 'தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும், 28ல், வழங்கப்படும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ரிசல்ட்:

தமிழக பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 16ல் துவங்கி, ஏப்., 20ல் முடிந்தது. இந்த தேர்வில், 10.01 லட்சம் மாணவ, மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், இன்று காலை, 9:30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்களின் மொபைல்போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரங்களுடன், எஸ்.எம்.எஸ்., ஆக, தேர்வு முடிவு வரும்.

மேலும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற, இணையதளங்களிலும், மாணவர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்:

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், வரும், 28ல் வழங்கப்படும். தேர்வர்கள், தங்கள் பள்ளிகளில் சான்றிதழை பெறலாம். தேர்வுத்துறையின், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும், தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டல்:

மேலும், தேர்வு எழுதிய மாணவர்கள், எந்த ஒரு பாடத்திற்கும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல் தேவைப்படுவோர், நாளை முதல், 26ம் தேதி, மாலை, 5:45 மணி வரை, பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள், தங்கள் தேர்வு மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

உடனடி துணை பொதுத்தேர்வு:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில், தேர்ச்சி பெறாதவர்களுக்கான, உடனடி துணை பொதுத்தேர்வு, ஜூன், 28ல் நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து, புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

தேவையில்லை!

dinamalar 23.05.2018

உள்ளூர் விமான பயணத்தில், 'போர்டிங் பாஸ்' இனி...
'டிஜி - யாத்ரா' திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவு



புதுடில்லி,உள்நாட்டு விமானங்களில் பயணிப்போர், 'போர்டிங் பாஸ்' எனப்படும், விமானப் பயணத்திற்கான அனுமதி சீட்டு பெறாமல் பயணிக்கும் வசதியை அறிமுகப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், அடையாள அட்டை, டிக்கெட் போன்ற ஆவணங்களுக்கு மாற்றாக, 'டிஜி - யாத்ரா' எனப்படும், தனிப்பட்ட அடையாள எண் மூலம், உள்ளூர் விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கும் திட்டத்தை, விமான போக்குவரத்து துறை, செயல்படுத்த துவங்கி உள்ளது.




உள்ளூர் விமானங்களில், பயணியர், விமானம் புறப்படும் நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன், விமான நிலையம் செல்ல வேண்டும் என்பது விதி.

வரிசை

அவர்கள், 'போர்டிங் பாஸ்' எனப்படும், விமான பயணத்திற்கான அனுமதி சீட்டை, சம்பந்தப்பட்ட விமான நிறுவன அலுவலரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகே, விமான நிலையத்தின் அடுத்த பகுதிக்குள், நுழைய முடியும். பல நேரங்களில், இந்த அனுமதி சீட்டை பெற, நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி இருக்கும். இதை தவிர்க்க, 'டிஜி - யாத்ரா' எனப்படும் தனிப்பட்ட அடையாள எண் முறையை அறிமுகப்படுத்த, விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

அனுமதி

இதன்படி, உள்ளூர் விமானங்களில் பயணிப்போர், விமான போக்குவரத்து துறை இணைய தளத்தில், தங்களைப் பற்றிய விபரங்களை முதலில் பதிவு செய்ய வேண்டும். ஆதார், ஓட்டுனர் உரிமம் போன்ற சில ஆவணங்களை, அப்போது பதிவேற்றம் செய்ய வேண்டும். பின், பயணிக்கு, தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும்.விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்

போது, அந்த குறிப்பிட்ட அடையாள எண்ணை, பயணி, தெரிவிக்க வேண்டும். அந்த எண், டிக்கெட்டிலும் குறிப்பிடப்படும்.இந்த அடையாள எண்ணை பெற்ற பின், முதல் முறையாக உள்ளூர் விமானப் பயணம் செய்யும்போது, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்றையும், 'பாஸ்போர்ட்' அளவு புகைப்படத்தையும் எடுத்து செல்ல வேண்டும்.விமான நிலையத்தில், விரல் ரேகை, கருவிழி ரேகை ஆகியவை பதிவு செய்யப்படும். இவை விமான நிலைய கணினியில், பாதுகாக்கப்படும். சம்பந்தப்பட்ட பயணியின், டிஜி -யாத்ரா எண்ணுடன் இந்த விபரங்கள் இணைக்கப்படும்.அதன் பின், அடுத்த முறை, விமான நிலையம் செல்லும் போது, விரல் ரேகை வைத்தாலே, விமான நிலையத்திற்குள் அனுமதி வழங்கப்படும். போர்டிங் பாஸ் வாங்க காத்திருக்க வேண்டாம். வேறு ஆவணங்களை காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. அங்கிருந்து நேராக விமானத்தில், ஏறிச் செல்லலாம்.

சோதனை

இந்த, புதுமையான வசதி, பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் ஏற்கனவே, சோதனை செய்யப்பட்டு உள்ளது. தற்போது, மேலும், சில விமான நிலையங்களில், இத்திட்டம் சோதிக்கப்பட உள்ளதாக, விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.டிஜி - யாத்ரா சேவை அறிமுகப்படுத்தப்பட்டாலும், போர்டிங் பாஸ் பெற்று பயணிக்கும் முறையும், நடைமுறையில் இருக்கும் என, அவர்கள் தெரிவித்தனர்.

முழு தொகை வாபஸ்!

விமான பயணியரின் வசதிக்காக, தற்போதைய விதிகளில், பல புதிய மாற்றங்களை, விமான போக்குவரத்து துறை செய்துள்ளது. அதன் விபரம்:* விமானப் புறப்பாடு, நான்கு மணி நேரத்துக்கு மேல் தாமதமானால், முழு டிக்கெட் தொகையும், பயணியருக்கு திருப்பித் தரப்பட வேண்டும்*

 விமானப் புறப்பாடு அடுத்த நாள் வரை தாமதமாகும் நிலையில், பயணியருக்கு, ஓட்டலில் தங்கும் ஏற்பாடுகளை, விமான நிறுவனம் செய்து தர வேண்டும்* விமானம் ரத்து செய்யப்படுகிறது என்ற தகவல், பயணியருக்கு, 24 மணி நேரத்திற்கும் குறைவான கால அவகாசத்தில் தெரிவிக்கப்பட்டால், முழு டிக்கெட் தொகையையும், விமான நிறுவனம் திருப்பித் தர வேண்டும்* விமான தாமதத்தால், அடுத்த ஊரில் இணைப்பு விமானத்தை பயணியர் தவறவிட்டால், அதற்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்* முதல் விமானத்தின் மூன்று மணி நேர தாமதத்தால் இணைப்பு விமானம் தவற விடப்பட்டால், பயணியருக்கு 5,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்; 12 மணி நேர தாமதம் என்றால், 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதற்கு மேல் என்றால், 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்* பயணியர் ஏறிய பின், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, ஓடு தளத்திலேயே விமானம் நிறுத்தி வைக்கப்பட்டால், பயணியருக்கு தேவையான உணவு, இலவசமாக வழங்கப்பட வேண்டும்* இந்த நிலைமை, இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்தால், பயணியர், விமானத்தில் இருந்து இறங்க, அனுமதிக்கப்பட வேண்டும்* அதிகமான முன்பதிவு காரணமாக, பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டால், குறைந்தபட்சம், 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்* விமான டிக்கெட் முன்பதிவு செய்து, 24 மணி நேரத்துக்குள் அதை ரத்து செய்தால், பயணியருக்கு முழு தொகையும் திருப்பித் தரப்பட வேண்டும்* டிக்கெட் ரத்து செய்தால், எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்படும் என்பது, டிக்கெட்டின் முன் பக்கத்தில், படிக்கும் வகையில் அச்சிட வேண்டும்.

PCI announces special provisions for B.Pharm students admitted up to AY 2025-26

PCI announces special provisions for B.Pharm students admitted up to AY 2025-26 Gireesh Babu, New Delhi Saturday, July 25, 2026, 08:00 Hrs ...