Wednesday, May 23, 2018


தேவையில்லை!

dinamalar 23.05.2018

உள்ளூர் விமான பயணத்தில், 'போர்டிங் பாஸ்' இனி...
'டிஜி - யாத்ரா' திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவு



புதுடில்லி,உள்நாட்டு விமானங்களில் பயணிப்போர், 'போர்டிங் பாஸ்' எனப்படும், விமானப் பயணத்திற்கான அனுமதி சீட்டு பெறாமல் பயணிக்கும் வசதியை அறிமுகப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், அடையாள அட்டை, டிக்கெட் போன்ற ஆவணங்களுக்கு மாற்றாக, 'டிஜி - யாத்ரா' எனப்படும், தனிப்பட்ட அடையாள எண் மூலம், உள்ளூர் விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கும் திட்டத்தை, விமான போக்குவரத்து துறை, செயல்படுத்த துவங்கி உள்ளது.




உள்ளூர் விமானங்களில், பயணியர், விமானம் புறப்படும் நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன், விமான நிலையம் செல்ல வேண்டும் என்பது விதி.

வரிசை

அவர்கள், 'போர்டிங் பாஸ்' எனப்படும், விமான பயணத்திற்கான அனுமதி சீட்டை, சம்பந்தப்பட்ட விமான நிறுவன அலுவலரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகே, விமான நிலையத்தின் அடுத்த பகுதிக்குள், நுழைய முடியும். பல நேரங்களில், இந்த அனுமதி சீட்டை பெற, நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி இருக்கும். இதை தவிர்க்க, 'டிஜி - யாத்ரா' எனப்படும் தனிப்பட்ட அடையாள எண் முறையை அறிமுகப்படுத்த, விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

அனுமதி

இதன்படி, உள்ளூர் விமானங்களில் பயணிப்போர், விமான போக்குவரத்து துறை இணைய தளத்தில், தங்களைப் பற்றிய விபரங்களை முதலில் பதிவு செய்ய வேண்டும். ஆதார், ஓட்டுனர் உரிமம் போன்ற சில ஆவணங்களை, அப்போது பதிவேற்றம் செய்ய வேண்டும். பின், பயணிக்கு, தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும்.விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்

போது, அந்த குறிப்பிட்ட அடையாள எண்ணை, பயணி, தெரிவிக்க வேண்டும். அந்த எண், டிக்கெட்டிலும் குறிப்பிடப்படும்.இந்த அடையாள எண்ணை பெற்ற பின், முதல் முறையாக உள்ளூர் விமானப் பயணம் செய்யும்போது, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்றையும், 'பாஸ்போர்ட்' அளவு புகைப்படத்தையும் எடுத்து செல்ல வேண்டும்.விமான நிலையத்தில், விரல் ரேகை, கருவிழி ரேகை ஆகியவை பதிவு செய்யப்படும். இவை விமான நிலைய கணினியில், பாதுகாக்கப்படும். சம்பந்தப்பட்ட பயணியின், டிஜி -யாத்ரா எண்ணுடன் இந்த விபரங்கள் இணைக்கப்படும்.அதன் பின், அடுத்த முறை, விமான நிலையம் செல்லும் போது, விரல் ரேகை வைத்தாலே, விமான நிலையத்திற்குள் அனுமதி வழங்கப்படும். போர்டிங் பாஸ் வாங்க காத்திருக்க வேண்டாம். வேறு ஆவணங்களை காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. அங்கிருந்து நேராக விமானத்தில், ஏறிச் செல்லலாம்.

சோதனை

இந்த, புதுமையான வசதி, பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் ஏற்கனவே, சோதனை செய்யப்பட்டு உள்ளது. தற்போது, மேலும், சில விமான நிலையங்களில், இத்திட்டம் சோதிக்கப்பட உள்ளதாக, விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.டிஜி - யாத்ரா சேவை அறிமுகப்படுத்தப்பட்டாலும், போர்டிங் பாஸ் பெற்று பயணிக்கும் முறையும், நடைமுறையில் இருக்கும் என, அவர்கள் தெரிவித்தனர்.

முழு தொகை வாபஸ்!

விமான பயணியரின் வசதிக்காக, தற்போதைய விதிகளில், பல புதிய மாற்றங்களை, விமான போக்குவரத்து துறை செய்துள்ளது. அதன் விபரம்:* விமானப் புறப்பாடு, நான்கு மணி நேரத்துக்கு மேல் தாமதமானால், முழு டிக்கெட் தொகையும், பயணியருக்கு திருப்பித் தரப்பட வேண்டும்*

 விமானப் புறப்பாடு அடுத்த நாள் வரை தாமதமாகும் நிலையில், பயணியருக்கு, ஓட்டலில் தங்கும் ஏற்பாடுகளை, விமான நிறுவனம் செய்து தர வேண்டும்* விமானம் ரத்து செய்யப்படுகிறது என்ற தகவல், பயணியருக்கு, 24 மணி நேரத்திற்கும் குறைவான கால அவகாசத்தில் தெரிவிக்கப்பட்டால், முழு டிக்கெட் தொகையையும், விமான நிறுவனம் திருப்பித் தர வேண்டும்* விமான தாமதத்தால், அடுத்த ஊரில் இணைப்பு விமானத்தை பயணியர் தவறவிட்டால், அதற்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்* முதல் விமானத்தின் மூன்று மணி நேர தாமதத்தால் இணைப்பு விமானம் தவற விடப்பட்டால், பயணியருக்கு 5,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்; 12 மணி நேர தாமதம் என்றால், 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதற்கு மேல் என்றால், 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்* பயணியர் ஏறிய பின், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, ஓடு தளத்திலேயே விமானம் நிறுத்தி வைக்கப்பட்டால், பயணியருக்கு தேவையான உணவு, இலவசமாக வழங்கப்பட வேண்டும்* இந்த நிலைமை, இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்தால், பயணியர், விமானத்தில் இருந்து இறங்க, அனுமதிக்கப்பட வேண்டும்* அதிகமான முன்பதிவு காரணமாக, பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டால், குறைந்தபட்சம், 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்* விமான டிக்கெட் முன்பதிவு செய்து, 24 மணி நேரத்துக்குள் அதை ரத்து செய்தால், பயணியருக்கு முழு தொகையும் திருப்பித் தரப்பட வேண்டும்* டிக்கெட் ரத்து செய்தால், எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்படும் என்பது, டிக்கெட்டின் முன் பக்கத்தில், படிக்கும் வகையில் அச்சிட வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 7.11.2024