Wednesday, May 23, 2018

மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி, நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவு



ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் தூத்துக்குடி நகரம் போர்க்களம் ஆனது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி ஆனார்கள். இதுபற்றி நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.

மே 23, 2018, 05:45 AM
தூத்துக்குடி,

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக் காலை கடந்த 1996-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

இந்த ஆலையில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் பாஸ்பாரிக் அமிலம், கந்தக அமிலம் ஆகியவையும் தயாரிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு இந்த ஆலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மேலும் விரிவாக்கம் செய்வதை கைவிட்டு, நிரந்தரமாக மூடவேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதியில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்துக்கு மடத்தூர் உள்ளிட்ட 18 கிராம மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை விதித்தது. இதனால் கடந்த 1½ மாதங்களாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் நேற்று 100-வது நாளாக நீடித்தது.

நூறாவது நாளையொட்டி, ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் இன்று (புதன்கிழமை) காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவாக தூத்துக்குடியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை.

முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வந்த கிராம மக்கள் மடத்தூரிலும், தூத்துக்குடி நகர்ப்புறம் மற்றும் திரேஸ்புரம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் அருகேயும் நேற்று காலை 9 மணி அளவில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டது. ஆலயம் அருகே திரண்ட போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

ஆனால், ஆங்காங்கே போலீசார் அவர்களை வழிமறித்தனர். இருந்தபோதும், போலீசார் வைத்து இருந்த தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர். தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே அவர்கள் வந்தபோது, அந்த பகுதியில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் தலைமையில் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி, 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு இருப்பதால் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர்.

இதனால் ஆவேசம் அடைந்த போராட்டக்காரர் கள் இரும்பு தடுப்புகளை தள்ளிக்கொண்டு முன்னேறிச் செல்ல முயன்றனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினார்கள். இதில் சிலர் காயம் அடைந்தனர். இதனால் கலவரம் வெடித்தது.

ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால், போலீசார் அங்கிருந்து பின்வாங்கி ஓடினார்கள். தொடர்ந்து போலீசாரை ஓட, ஓட விரட்டி கல்வீசினார்கள். மேலும், அங்கு நின்ற போலீஸ் வாகனம் ஒன்றை கவிழ்த்து போட்டு கல்வீசி தாக்கினார்கள். இதில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. பின்னர் இரும்பு தடுப்புகளை உடைத்து விட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி முன்னேறிச் சென்றனர். இந்த கல்வீச்சு சம்பவத்தில் போலீசாரும், ஏராளமான பொதுமக்களும் காயம் அடைந்தனர்.

பேரணியாக வந்த போராட்டக்காரர்களை இந்திய உணவு கழக குடோன் அருகே போலீசார் மீண்டும் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து முன்னேற முயன்ற போராட்டக்காரர்களை நோக்கி, வஜ்ரா வாகனம் மூலம் 27 முறை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

ஆனாலும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் போலீசாரை நோக்கி கற்களை வீசியபடி முன்னேறியதால், போலீசார், வஜ்ரா வாகனத்துடன் அங்கிருந்து பின்வாங்கினார்கள்.

அதே நேரத்தில், மடத்தூரில் திரண்டு இருந்த மக்களும் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலகம் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுத்தனர்.

இருந்தாலும் ரெயில் தண்டவாளம் வழியாகவும், காட்டுப்பகுதி வழியாகவும் சாரை சாரையாக இந்திய உணவு கழக குடோன் பகுதியில் மக்கள் வந்து சேர்ந்தனர். இதனால் கூட்டம் அதிகமானதால் போலீசாரால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

பொதுமக்கள் கல்வீசி தாக்கியதால் போலீசார் பின்வாங்கி ஓடினார்கள். அப்போது சாலை ஒரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த போலீசாரின் இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் போராட்டம் பயங்கர கலவரமாக மாறியது. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பாலத்தின் கீழ் நின்ற இருசக்கர வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை கலெக்டர் அலுவலக வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் மீண்டும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

அப்போது சிதறி ஓடிய போராட்டக்காரர்களில் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் புகுந்தனர். அந்த வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை தீவைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை கல்வீசி தாக்கி சூறையாடினார்கள். இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர்.

ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால், நிலைமை மிகவும் மோசம் அடைந்தது. இதைத்தொடர்ந்து கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

துப்பாக்கி சூட்டை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினார்கள். அப்போது போராட்டக்காரர்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

துப்பாக்கி சூட்டில், ரஞ்சித் குமார் என்பவர் குண்டு பாய்ந்து பலி ஆனார். மேலும் 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை போராட்டக்காரர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி ஒரு மாணவி உள்பட 8 பேர் உயிர் இழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 9 ஆனது. பலியானவர்களின் பெயர் விவரம் வருமாறு.

1. ரஞ்சித்குமார் (வயது 22). தூத்துக்குடி.

2. கிளாஸ்டன் (40), தூத்துக்குடி லூர்தம்மாள்புரம்.

3. கந்தையா (55), சிலோன் காலனி.

4. தமிழரசன் (45), ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையைச் சேர்ந்தவர்.

5. சண்முகம் (25), தூத்துக்குடி மாசிலாமணிபுரம்.

6. எஸ்.எஸ்.எல்.சி. மாணவி வெனிஸ்டா (17), தூத்துக்குடி.

7. அந்தோணி செல்வராஜ் (35), தூத்துக்குடி.

8. மணிராஜ் (25), தூத்துக் குடி தாமோதர நகர்.

9. கார்த்திக் (20), தூத்துக் குடி

மேலும் இந்த சம்பவத்தில் 15 போலீசார் உள்பட 65-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். போராட்டக்காரர்கள் மதியம் 1 மணி அளவில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த போது, 3-வது மைல் பகுதியில் போலீசார் அவர்களை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சிலர் காயம் அடைந்தனர்.

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் நேற்று மாலை வடக்கு கடற்கரை ரோட்டில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டு இருந்த போது, திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் திடீரென்று அவரது காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு பொதுமக்களும் போலீசாரை தாக்கினார்கள். நிலைமை மோசமானதால் போலீசார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கலைத்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் திரேஸ்புரத்தைச் சேர்ந்த வினிதா (37) என்ற பெண் பலி ஆனார். இதனால் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

தூத்துக்குடியில் நேற்று நடந்த கலவரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த அரசு வாகனங்கள் மற்றும் ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் என சுமார் 110-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், நகர் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் பற்றி ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் மூலம் நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்து இருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 7.11.2024