Wednesday, May 23, 2018

தலையங்கம்

நிம்மதியை கெடுக்கும் ‘நிபா’ வைரஸ்




தமிழ்நாட்டில் பலநேரங்களில் வெளிமாநிலங்களில் இருந்துதான் நோய்கள் வந்து பரவுவது உண்டு.

மே 23 2018, 03:00

தமிழ்நாட்டில் பலநேரங்களில் வெளிமாநிலங்களில் இருந்துதான் நோய்கள் வந்து பரவுவது உண்டு. தற்போது கேரளாவில் பரவும் மிகக்கொடிய நோயான ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தமிழக மக்களின், குறிப்பாக கேரளா எல்லையோரம் உள்ள மக்களின் நிம்மதியை கெடுத்துக்கொண்டிருக்கிறது. சரியான சிகிச்சையே இல்லாத ‘நிபா’ வைரஸ், 1999–ம் ஆண்டு முதலில் மலேசியா நாட்டில் உள்ள ‘சுங்கை நிபா’ என்ற கிராமத்தில் கண்டறியப்பட்டது. அந்த காலக்கட்டங்களில் இந்த வைரஸ் பல உயிர்களை பறித்தது. அந்த ஊரில் தொடங்கிய வைரஸ் என்பதால் இதற்கு அந்த ஊரின் பெயரையே சூட்டும் வகையில் ‘நிபா’ வைரஸ் என்று பெயரிடப்பட்டது. பெரும்பாலும் பழந்தின்னி வவ்வால்கள் மூலமே இந்த நோய் பரவுகிறது. பழந்தின்னி வவ்வால்கள் ஏதாவது ஒரு பழத்தை சாப்பிட்டுவிட்டு அப்படியே விட்டுவிடும். இது அணில் கடித்த பழம் சுவையாக இருக்கும் என்று அதை சாப்பிட்டு ‘நிபா’ வைரசை வாங்கிக்கொள்கிறார்கள். இந்த வவ்வால்கள் சாப்பிட்டு கீழே விழும் பழங்களை சாப்பிடும் பன்றிகள் மூலமாகவும் மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது. மனிதர்களில் ஒருவருக்கு பரவினால் இது ஒரு தொற்றுநோய் என்றவகையில் அடுத்தவர்களுக்கும் வேகமாக பரவிவிடுகிறது. இந்த நோயின் அறிகுறி தொடர்ச்சியாக 2 வாரகாலத்திற்கு காய்ச்சலும், தலைவலியும் இருக்கும். மிகச்சோர்வும், மனக்குழப்பமும் இருக்கும். இதற்கு இன்னும் தகுந்த சிகிச்சைகளை கண்டுபிடிக்காத நிலையில், பாதிக்கப்பட்ட அனைவரும் மரணத்தைத்தான் தழுவுகிறார்கள்.

கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரோத் என்னும் கிராமத்தில் வசித்த மூசா என்பவரின் 2 மகன்களுக்குத்தான் முதலில் இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டது. மூசா வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் ஏராளமான வவ்வால்கள் இருந்தது தெரியவந்தது. இதில் பெரிய கொடுமை என்னவென்றால், ‘நிபா’ வைரஸ் நோயாளிகளுக்கு மிகவும் கடமை உணர்வோடு சிகிச்சை அளித்த பெரம்பரா தாலுகா மருத்துவமனை நர்சு லினி தன் 31–வது வயதில் இந்த நோய்க்கு பலியானதுதான். மேலும் 3 நர்சுகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு, இப்போது சிகிச்சைப்பெற்று வருகிறார்கள்.

பழங்களை சாப்பிடும்போது நன்றாக கழுவியோ, தோலை உரித்தோதான் சாப்பிடவேண்டும். கூடுமான வரையில் வவ்வால்கள், பன்றிகள் இருக்கும் இடங்களுக்கு அருகில் நிற்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இந்த நோய் பரவாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உறுதி செய்யவேண்டும். கேரளாவில் இருந்து வரும் ரெயில்கள், பஸ்கள், விமானங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பயணிகள் யாராவது வருகிறார்களா? என்பதை கவனமாக கண்காணிக்கவேண்டும். ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து, மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவத்துறை துணை இயக்குனர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறார். பொதுமக்களுக்கும் இந்த நோய் குறித்து நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். நோய் வந்தவுடன் குணமாக்குவதைவிட, நோய் வராமலே தடுப்பது என்றவகையில் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவேண்டும். ஏனெனில், இந்த நோய்க்கு சிகிச்சையே இல்லை என்றவகையில், நோய் வந்தால் மரணம் நிச்சயம் என்பதால், நோய் வராமல் தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 7.11.2024