Sunday, May 27, 2018

 
திருமணம் முடிந்த 15 நிமிடத்தில் டைவர்ஸ்! - அதிர்ச்சி கொடுத்த துபாய் கணவர்

 
விகடன் 15 hrs ago
 


துபாயில் திருமணம் முடிந்த 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்திருக்கிறார் மணமகன். `அனைவர் முன்னிலையில் மாமனார் என்னை அவமதித்துவிட்டார்' எனக் காரணம் கூறியிருக்கிறார் மணமகன்.

துபாய் ஊடகங்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ` மணமகன் ஒருவர் திருமணம் செய்துகொள்வதற்காக மணமகளை வலைவீசித் தேடியுள்ளார். இந்நிலையில், பெண் ஒருவரைத் தேர்வு செய்த அவர் அப்பெண்ணின் தந்தையிடம் சென்று, ' 18 லட்சம் ரூபாய் தருகிறேன். உங்கள் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள்' எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையை ஏற்ற அப்பெண்ணின் தந்தை திருமணத்துக்கு முன்னதாக பணத்தை தரும்படி கேட்டுள்ளார்.

இதற்கு மணமகன் சம்மதம் தெரிவிக்கவே, ஒன்பது லட்ச ரூபாயை முன்பணமாகக் கொடுத்துள்ளார். அதன்பின், திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. நண்பர்கள், உறவினர்கள் என அனைவர் முன்னிலையில் இன்று திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த அடுத்த நொடியில், மணமகன் தருவதாகக் கூறிய மீதிப் பணத்தை பெண்ணின் தந்தை கேட்டுள்ளார். இதனால், இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாமனாரின் இந்தச் செயலால் மனமுடைந்த மணமகன், 'அனைவர் முன்னிலையிலும் உனது தந்தை என்னை அவமதித்துவிட்டார். அதனால் உன்னுடன் வாழமுடியாது' எனக் கூறிவிட்டு, `தலாக்' முறைப்படி அப்பெண்ணை விவாகரத்து செய்துள்ளார்.
 காடுவெட்டி குரு வளர்ந்த கதையும்... கடந்து வந்த பாதையும்!
 
விகடன் 27.05.2018


 

காடுவெட்டி குரு... அதிரடிப் பேச்சு, அசராத நம்பிக்கை ஆகிய குணநலன்களைக் கொண்டவர் குரு. அவருடைய இறப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவு என்பதில் மாற்றுக்கருத்திலை. பா.ம.க-வில் முன்னணித் தலைவராகவும் மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்துவந்தார். கடந்த இரண்டு மாத காலமாக உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி என்னும் கிராமத்தில் ஜெகநாதன் - கல்யாணியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் குருநாதன் என்று அழைக்கப்படும் குரு. சொந்த ஊரான காடுவெட்டியை தன் பெயருடன் இணைத்துக்கொண்டதால் 'காடுவெட்டி குரு' என்று பெயர் வந்தது. இவருக்கு மனைவி லதா, விருதாம்பிகை மற்றும் கனல் அரசன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 1986-இல் காடுவெட்டியில் தி.மு.க-வின் கிளைச் செயலாளராக இருந்தவர் குரு, தங்கள் பகுதியில் வன்னியர்களுக்கு தி.மு.க.வில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதாலும், வன்னியர் சங்கத்தை விரிவுபடுத்துவதற்காகவும் எம்.கே.ராஜேந்திரன், வீரபோக.மதியழகன் ஆகியோர் குருவை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தில் இணைத்தனர். அவர், ராமதாஸின் நெருங்கிய உறவினரும்கூட. படிப்படியாக செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி வகித்து பா.ம.க-வில் வளர்ந்தார்.

பின்பு வன்னியர் சங்கத் தலைவராகப் பதவியேற்றார். 2001-இல் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியிலும், 2011-இல் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டசபை உறுப்பினராக இருந்தவர். இரண்டுமுறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர். இவர், பங்கேற்கும் கூட்டங்களில் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் பேசுவதால், 'வன்னிய இளைஞர்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிவருகிறார்' என்று தெரிவித்து அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

29.12.1995-ம் ஆண்டில் அம்பலவர் கட்டளையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசினார் என்று கூறி, விக்கிரமங்கலம் போலீஸாரால் வழக்கு பதியப்பட்டது. 27.8.1997-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உஞ்சினி சடையன் இறப்பில் வெங்கடேசன், ராமசந்திரன் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தில் போலீஸாரின் செயல்பாடுகளைக் கண்டித்துப் பேசியதாக குரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் 20.1.2005-ம் ஆண்டு தா.பழூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய வீராணம் திட்டத்துக்கு எதிராகப் பேசியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 6.1.2006 அன்று ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் "வெள்ளம்பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகள் சரிவர வழங்கப்படவில்லை" என அரசை குற்றம்சாட்டியதுடன், "உரிய நிவாரணம் வழங்காவிட்டால் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தை கொளுத்தி விடுவேன்" என்று கூறியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

21.6.2006-ம் ஆண்டு மேலூர் கிராமத்தில் அனல் மின்திட்டத்துக்கு அளவிடச் சென்ற அதிகாரிகளை வழிமறித்து, மாட்டுவண்டிகளைக் கொண்டு சாலையை மறித்ததுடன், ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டுமென பொதுமக்களைத் தூண்டியதாக ஜெயங்கொண்டம் போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 6.1.2008 அன்று பா.ம.க. மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க எம்.எல்.ஏ. சிவசங்கர் ஆகியோரைத் தரக்குறைவாகப் பேசியதாக அரியலூர் போலீஸார் குரு மீது வழக்கு பதிவு செய்தனர். 10.3.2008 அன்று முன்னாள் பா.ம.க. மாநில மகளிரணிச் செயலாளர் செல்வி, மேடையில் குரு இருக்கும்போதே அவரைப் பற்றி பேசியதால் செல்வியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக குரு உள்ளிட்ட 5 பேர் மீது உடையார்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஜெயங்கொண்டம் நீதிமன்றத்துக்கு 7.7.2008 அன்று குரு உள்ளிட்ட 5 பேர் அழைத்துச் செல்லப்பட்டபோது, பா.ம.க-வினர் தடுத்ததால் தடியடி நடைபெற்றது. இதில் பலர் காயமடைந்தனர். இந்த நிகழ்வு பெரிய அளவில் பேசப்பட்டது.

28.7.2010 அன்று அரியலூரில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒதுக்கீடு வழங்காவிட்டால், தமிழகத்தில் பேருந்து மற்றும் ரயில்கள் ஓடாது என்றும் அனைத்தையும் கொளுத்துவோம் என்றும் மிரட்டல் விடும்வகையில் பேசியதாக அரியலூர் போலீஸார் குரு மீது வழக்கு பதிவு செய்தனர். 5.7.2008 அன்று குணசேகரன் வழக்கில் குரு கைது செய்யப்பட்டார். 15.7.2008 அன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குரு கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.

26.11.2008 அன்று ஜெ.குரு மீதான தேசிய பாதுகாப்புச் சட்டம் விலக்கப்பட்டது. 30.11.2008 அன்று திருச்சி மத்திய சிறையிலிருந்து குரு விடுதலை செய்யப்பட்டார். வன்னியர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த குரு, தன் தந்தையைக் கொலைசெய்த மாமாவின் தலையை வெட்டி, காளி கோயிலில் உள்ள சூலத்தில் குத்திவைத்தார். இதுதான் இவர் மீதான தனிப்பட்ட வழக்கு. அதேபோல் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் குற்றவாளி என குருவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் குருவிடம் கேட்டபோது, "என்னுடைய மக்களுக்காக போராட்டத்தில் இறங்கியிருக்கிறேன். என்னை குற்றவாளியாக மட்டும் அல்ல, துப்பாக்கியால் சுட்டுக்கொன்றாலும் என் மக்களுக்காக ஏற்றுக்கொள்வேன்" என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.

தன் மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த குருவின் இறப்பு, அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்த மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

 
மதுரை- கொச்சி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 10 மணி நேரம் தாமதம்: பயணிகள் அவதி
 
தினகரன் 38 mins ago

  மதுரை: மதுரையில் இருந்து கொச்சி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 10 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து இரவு 11மணிக்கு வர வேண்டிய விமானம் 1.30க்கு வந்ததால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். நேற்றிரவு கொச்சி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 10 மணி நேர தாமதத்திற்கு பிறகு இன்று காலை செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.
`10 பேரைச் சுட்டுக்கொன்றால் ஆட்சியைக் கலைக்க சட்டம் இருக்கு!' - கொந்தளிக்கும் ட்ராஃபிக் ராமசாமி 

மலையரசு  26.05.2018

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததைக் கண்டித்து சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி சென்னையில் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.




அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ராஃபிக் ராமசாமி, ``தூத்துக்குடியில் சட்ட விரோதமாக துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி போன்றோர் நரேந்திர மோடியின் கைக்கூலிகளாக வேலை செய்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்ட எந்த அமைச்சருக்கும் தூத்துக்குடி பக்கம் தலைகாட்ட தைரியமில்லை. இவர்களெல்லாம் மக்களைக் காப்பாற்றுவதாக பொய் கூறிவருகின்றனர். இதனைக் கண்டித்து இன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து வருகிறேன். ஒருவாரகாலத்துக்குள் இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும். 10 பேரைச் சுட்டுக்கொன்றாலே ஆட்சியைக் கலைக்க வேண்டும் எனச் சட்டம் இருக்கிறது. அதனை அமல்படுத்த வேண்டும் என திங்கள்கிழமை வழக்கு போடவுள்ளேன்.

 சிபிஐ விசாரணை தேவையில்லை. வழக்கு நிச்சயம் புதன்கிழமை விசாரணைக்கு வரும். விசாரணை ஆணையம் என்பதெல்லாம் வேஸ்ட். நீதிபதிகளைக் குறை சொல்ல விரும்பவில்லை. ஏற்கெனவே, ஆறுமுகசாமி ஆணையம், ராஜேந்திரன் ஆணையம் என 4 ஆணையங்கள் பல்வேறு விஷயங்களை விசாரித்து வருகிறது. விசாரணை ஆணையம் அமைத்தும் ஜல்லிக்கட்டு பிரச்னைக்கே இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. ஆட்சியாளர்களுடன் கூட்டு வைத்து அதிகாரிகள் செயல்படுகின்றனர். ஆளுபவர்களுக்கு அடியாமையாக செயல்பட்டு தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்த பயப்படுகின்றனர். நிச்சயமாக நல்ல ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர இளைஞர்களுடன் சேர்ந்து நான் போராடுவேன்" என்றார்.

நான்காண்டு ஆட்சியில் முக்கியப் பிரச்னைகளும்... மோடியின் மெளனமும்!

ஜெ.பிரகாஷ்  vikatan 26.05.2018


பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று நான்காண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி யாராலும் முடியாததை முடித்துக் காட்டுபவர் என்று பெருமித்துடன் மார்தட்டுகிறார்கள் பி.ஜே.பி-யினர். ஆனால், முக்கியமான பல பிரச்னைகளில் மோடி வாயே திறப்பதில்லை என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

ஆம்... பிரதமர் மெளனம் காக்கும் விஷயங்கள் ஒன்றிரண்டு அல்ல; தமிழகம் உள்பட ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடக்கும் ஏராளமான பிரச்னைகளுக்கும் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் வாய்மூடியே இருந்துள்ளார் என்று குற்றம்சாட்டுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.




``அப்படி பிரதமர் மோடி எந்தெந்த விஷயங்களில் எல்லாம் மெளனம் கடைப்பிடித்தார்'' என்று எதிர் தரப்பைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``ஒன்றா... இரண்டா சொல்வதற்கு'' என்றவர்கள், ஒரு பட்டியலே உள்ளது என்று தெரிவித்து, அவற்றை எடுத்துக் கூறினார்கள்.

காவிரிப் பிரச்னை, காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம், வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்றுக்கொண்டு வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த தொழிலதிபர்கள், வங்கிகளின் செயல்பாடு, தொடரும் பெட்ரோல் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி என அந்தப் பட்டியல் நீள்கிறது.

``காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அதற்கு காலக்கெடுவையும் விதித்தது. காவிரிப் பிரச்னை தீவிரமடைந்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கண்டனப் போராட்டங்களில் ஈடுபட்டனர். காவிரிப் பிரச்னை தீவிரம் அடைந்திருந்த சமயத்தில் சென்னைக்கு அருகே ராணுவக் கண்காட்சியைத் திறந்துவைக்க பிரதமர் மோடி வந்தார். அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி போராட்டம் மற்றும் கறுப்புப் பலூன்கள் பறக்கவிடப்பட்டு எதிர்க்கட்சியினர் தங்களுடைய கண்டனத்தைப் பதிவுசெய்தனர். ஆனால், மோடியோ காவிரிப் பிரச்னை தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காத்தார். இப்போதுவரை காவிரி விவகாரத்தில் மௌனியாகவே உள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற இடத்தில் நடந்த சிறுமியின் பாலியல் வன்கொடுமையும், காஷ்மீர் மாநிலத்தில் ஒரு சிறுமியை விஷமிகள் சிலர் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்ட கொடூரத்தையும் அறிந்து ஒட்டுமொத்த இந்திய மக்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இந்தச் சம்பவங்கள் குறித்து நீண்ட நாள்கள்வரை வாய் திறக்காமல் இருந்ததுடன், கடும் விமர்சனங்களுக்குப் பின்னர் 'குற்றம் செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது; இந்திய மகள்களுக்கு முழுமையான நீதி நிச்சயம் கிடைக்கும்' என்று ஒற்றை வரியில் தெரிவித்தார்.



தற்போது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் 13 பேர் போலீஸாரால் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்திலும் இதுவரை பிரதமர் வாய்திறக்கவில்லை.

15 நாள்களுக்கு ஒருமுறை விலையேற்றம் என்ற நிலைமாறி, அன்றாடம் பெட்ரோலியப் பொருள்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மாற்றியமைத்த பின்னர், பெட்ரோல், டீசலின் விலையானது தினமும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் உயர்ந்துகொண்டே வருகிறது. வரலாறுகாணாத அளவில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 81 ரூபாயைத் தாண்டிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டிருப்பது பற்றியும் பிரதமர் மோடி எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.

தமிழகத்தில் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பி.ஜே.பி. நிர்வாகிகளின் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கண்டிக்கும் வகையில் மோடி எந்தக் கருத்தையும் வெளியிட்டதில்லை.

மோடியின் தொடர் மெளனம் குறித்து பி.ஜே.பி. மூத்த தலைவரும், நடிகருமான சத்ருகன் சின்ஹா, 'நம் நாட்டில் ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறதா அல்லது பாசிச ஆட்சி நடக்கிறதா, பிரதமர் மோடி நீங்கள் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று கூறினார்.

வரி ஏய்ப்பு மற்றும் ஐபிஎல் முறைகேடு தொடர்பான வழக்குகள் தொடர்புடைய ஐபிஎல். முன்னாள் தலைவர் லலித் மோடி பிரிட்டனில் இருந்து போர்ச்சுக்கல் செல்வதற்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரம் மத்திய அரசுக்குப் பெரும் சிக்கலானது. மேலும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, லலித்மோடிக்கு பல்வேறு உதவிகளைச் செய்ததும் அம்பலமானது. அப்போதும் மோடி வழக்கம் போல் மௌனம் காத்தார்'' என்று அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

 மோடி தலைமையிலான மத்திய அரசு நான்காண்டுகளைக் கடந்து விட்டநிலையில், முக்கியப் பிரச்னைகளுக்கு இனிமேலாவது அவர் தன் மௌனத்தைக் கலைக்க வேண்டும். கலைப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்...
ஆரூரா... தியாகேசா கோஷத்துடன் தொடங்கிய திருவாரூர் ஆழித்தேரோட்டம்!

க.சதீஷ்குமார்


திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. ஆரூரா... தியாகேசா முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.




உலகப் புகழ்பெற்றதும் சைவ ஸ்தலங்களின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாராஜர் கோயிலின் ஆழித்தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகப் பிரசித்திப் பெற்றதும் பிரமாண்டமானதும் தமிழகத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கோவில்களில் உள்ள ஆழித்தேர்களில் முதன்மையானது திருவாரூர்தியாகராஜர் கோயில் தேர். மன்னார்குடி மதிலழகு; திருவாரூர் தேரழகு என்பது பழமொழி. 96 அடி உயரமும், 31 அடி அகலமும், 350 டன் எடைகொண்டது திருவாரூர் ஆழித்தேர். ஆண்டுதோறும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவுக்குப் பிறகு ஆழித்தேரோட்டம் நடப்பது வழக்கம்.
 
இதையடுத்து இன்று காலை 5 மணிக்கு திருவாரூர் சன்னதி தெரு எதிரே அமைந்துள்ள விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் நடைபெற்றது. இதனைத் தொடரந்து காலை 6.30 மணிக்கு சன்னதி தெரு எதிரே அமைந்துள்ள தேரடியிலிருந்து ஆழித்தேரோட்டம் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆருரா, தியாகேசா என்று விண்ணதிரும் பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்தனர். ஆழித்தேர் அலங்கார தொம்பைத்துணி அசைந்தாட வந்ததைக் கண்டு, பக்தர்கள் மெய்சிலிர்க்கத் தரிசனம் செய்தனர். தேர் வருகையில் அதிர்வேட்டுகளும், ஆரூரா தியாகேசா முழக்கங்களும் ஒலிக்க நான்கு வீதிகளிலும் ஆழித்தேர் வலம் வந்து கொண்டுடிருக்கிறது.
அரசு மருத்துவமனையின் ஜெனரல் வார்டில் ஓய்வெடுக்கும் தெரு நாய்கள்! உ.பியில் அவலம் 

தினேஷ் ராமையா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றின் ஜெனரல் வார்டில் நோயாளிகளுடன் தெருநாய்களும் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Photo Credit: ANI

சிதாபூர் பகுதியில் நாய்கள் தாக்கியதில் இந்த மே மாதத்தில் மட்டுமே 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், பெரும்பாலானோர் சிறுவர்கள் ஆவார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் தெரு நாய்கள் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். .சிதாபூர் சம்பவம் குறித்து பேசிய அம்மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சுரேஷ்குமார் கண்ணா, ``விலங்குகள் புகுந்து ஒருவரைக் கடித்தால், அதற்கு அரசு எப்படி பொறுப்பாகும்’என அலட்சியமாகப் பதிலளித்தார். இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், அம்மாநிலத்தின் ஹர்தோய் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் ஜெனரல் வார்டில் நோயாளிகளுடன் தெரு நாய்கள் சில ஒய்வெடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அங்கிருந்த நோயாளிகள் சிலர் கூறுகையில்,` தெருநாய்கள் குறித்து அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் கூறினோம். அதற்கு நீங்களே அந்த நாய்களைத் துரத்தி விடுங்கள் என்று அலட்சியமாகப் பதிலளிக்கிறார்கள்’ என்றனர். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய சுகாதாரத் துறை அதிகாரி, விசாரணை முடிவில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...