Sunday, September 16, 2018

படிப்பை பாதியில் விட்ட மாணவன்: டி.சி., வழங்க உத்தரவு

Added : செப் 15, 2018 23:16

சென்னை, : ஹோமியோபதி மருத்துவ படிப்பை, பாதியில் கைவிட்ட மாணவனுக்கு, மாற்று சான்றிதழ் வழங்கும்படி, கல்லுாரி நிர்வாகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.உயர் நீதிமன்றத்தில், கபில்தேவ் என்பவர் தாக்கல் செய்த மனு:கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே உள்ள, மரியா ஹோமியோபதி மருத்துவ கல்லுாரியில், ௨௦௧௬ - ௧௭ம் ஆண்டில் சேர்ந்தேன்.முதல் ஆண்டு முடித்த பின், உடல் நல பிரச்னை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, இரண்டாம் ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அதனால், படிப்பை தொடர முடியவில்லை.மாற்று சான்றிதழ்மாற்று சான்றிதழ் வழங்கும்படி, கல்லுாரி நிர்வாகத்திடம் கேட்டேன். மீதி உள்ள மூன்றரை ஆண்டுகளுக்கான கட்டணத்தை யும் செலுத்தும்படி, நிர்வாகம் கூறியது.மேலும், அபராத தொகையை செலுத்திய பின், மாற்று சான்றிதழ் பெற்று கொள்ளும்படி, என் பெற்றோரையும், நிர்வாகம் வற்புறுத்தியது.கன்னியாகுமரி மாவட்ட கலெக்டருக்கு, ௨௦௧௮ ஜூனில் மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மாற்று சான்றிதழ் வழங்கும்படி, கல்லுாரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மரியா கல்லுாரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'கவுன்சிலிங்கில், மனுதாரருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இரண்டாம் ஆண்டில், கல்லுாரியை விட்டு சென்று விட்டார்.'படிப்பை பாதியில் விட்டு சென்றால், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, விளக்க குறிப்பேட்டில் உள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.மனுவை, நீதிபதிபாரதிதாசன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், எம்.ராஜேந்திரன் ஆஜரானார்.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கல்லுாரியை விட்டு பாதியில் சென்றால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, விளக்க குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.ஆனால், அபராத தொகையை செலுத்தத் தவறினால், மாணவர்களின் சான்றிதழ்களை தக்க வைத்துக் கொள்ள, கல்லுாரிக்கு அதிகாரம் உள்ளது என்று, விளக்கக் குறிப்பேட்டில், எந்த விதியும் இல்லை.வழக்குஎனவே, மனுதாரரின்சான்றிதழ்களை, கல்லுாரிவசம் வைத்துக் கொள்ள முடியாது. அபராத தொகையை வசூலிக்க விரும்பினால், உரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.இரண்டு வாரங்களில், மாற்று சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை, மனுதாரருக்கு, கல்லுாரி நிர்வாகம் வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிஉத்தரவிட்டார்.
கிளீனிக்கில் சிறுவன் பலி: அரசு டாக்டர் கைது

Added : செப் 16, 2018 02:46

காட்பாடி, தனியார் கிளீனிக்கில் சிறுவன் இறந்ததால், அரசு டாக்டர் கைது செய்யப்பட்டார்.வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை டாக்டராக அர்ச்சுணன், 50, பணியாற்றி வருகிறார். திருவலத்தில், ஜீவன் என்ற கிளீனிக்கையும், அவர் நடத்தி வருகிறார்.கார்ணாம்பட்டு அடுத்த, ஆழ்வார்தாங்கலைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் கரண்குமார், 11.வயிற்று வலியால் அவதிப்பட்ட கரண்குமாரை, ஜீவன் கிளீனிக்குக்கு, பெற்றோர் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அர்ச்சுணன், சிறுநீரகத்தில் கல் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.பெற்றோர் சம்மதத்துடன், நேற்று முன் தினம் மாலை, 4:00 மணிக்கு, கரண்குமாருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், பெற்றோருக்கு தெரிவிக்காமல், தன் காரில், மேல்விஷாரம் தனியார் மருத்துவமனைக்கு, அர்ச்சுணன் கொண்டு சென்றார்.அங்கு, சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் இறந்து விட்டதாக, தெரிவித்தனர்.தன் காரில் சிறுவனின் உடலை வைத்துக் கொண்டு, வேலுார், கார்ணாம்பட்டு என, அர்ச்சுணன் சுற்றிக் கொண்டே இருந்தார்.இதையறிந்த, சிறுவனின் பெற்றோர், உறவினர்கள், பைக்கில் விரட்டிச் சென்று,கார்ணாம்பட்டு குளம் அருகே, இரவு, 10:00 மணிக்கு, காரை மடக்கினர். சடலத்தை காரிலேயே விட்டு விட்டு, வேறொரு காரில், டாக்டர் தப்பினார்.நேற்றிரவு, 11:00 மணிக்கு, சடலத்துடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். டாக்டரை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்ததால், நேற்று காலை, 2:00 மணிக்கு, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். நேற்று மதியம், 2:00 மணிக்கு, வேலுாரில் பதுங்கியிருந்த டாக்டர் அர்ச்சுணனை, திருவலம் போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் நாளை முதல் மின் தடை 

dinamalar 16.09.2018

அனல் மின் நிலையங்களில், 1.85 லட்சம் டன் நிலக்கரி மட்டும் இருப்பு உள்ளதால், நாளை முதல், கிராமங்களில், அதிக நேரம் மின் தடை செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.



மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில், தினமும் சராசரியாக, 3,500 மெகா வாட்; கோடை காலத்தில், 4,000 மெகா வாட் வரை, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மே முதல், காற்றாலைகளில் இருந்து, தினமும் சராசரியாக, 3,000 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைத்தது. இதனால், அனல் மின் உற்பத்தியை, மின் வாரியம் குறைத்தது. இம்மாத இறுதியில், காற்றாலை சீசன் முடிவடைய உள்ளதால், தற்போது, அவற்றில் இருந்து, 300 - 400 மெகா வாட் மட்டுமே கிடைக்கிறது. வெயிலும் சுட்டெரிப்பதால், மின் வாரியம், அனல் மின் உற்பத்தியை, மீண்டும், அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து, தமிழகத்திற்கு,
நிலக்கரி வரத்து பாதித்துள்ளதால், நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அனல் மின் நிலையங்களில், முழு அளவில் உற்பத்தி செய்ய முடியவில்லை. மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு தினமும், 6,138 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 2,500 மெகா வாட் வரை குறைவாகவே கிடைக்கிறது. இதனால், மின் வாரியத்தால், மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலைஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நெருக்கடி அதிகம் இருந்த, 8, 9, 10ம் தேதிகளில், கிராம பகுதிகளில், ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை, மின் தடை செய்யப்பட்டது.

இந்த பிரச்னையை, எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதனால், நிலக்கரி தட்டுப்பாட்டால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ள, 600 மெகா வாட் அலகில், 11ம் தேதி முதல், மீண்டும், மின் உற்பத்தி துவங்கப்பட்டது. இதையடுத்து, மின் தடை நேரம், ஒரு மணி முதல், இரண்டு மணி வரை என, குறைக்கப்பட்டது. இந்நிலையில், 'மூன்று நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது; அனல் மின் நிலையங்களில், தொடர்ந்து மின் உற்பத்தி செய்ய, தினமும், 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. அதை, உடனே வழங்கவிட்டால், அனல் மின் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி, அவசர கடிதம் எழுதியுள்ளார். நேற்று காலை நிலவரப்படி, அனல் மின் நிலையங்களில், 1.85 லட்சம் டன் நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது. அதை பயன்படுத்தி, நாளை வரை மின் உற்பத்தி செய்யலாம். ஒடிசாவில் உள்ள, பரதீப் துறைமுகத்தில் இருந்து, நிலக்கரி வருவதிலும்
தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், நாளை முதல், அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தி பாதித்தால், மின் தடை நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நிலக்கரி தட்டுப்பாட்டால், அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தி பாதித்தால், மின் தடை செய்வதை தவிர, வேறு வழியில்லை' என்றார்.

மிச்சமாகி இருக்கும்! :

நடப்பு காற்றாலை சீசனில், எப்போதும் இல்லாத அளவிற்கு, அதிக மின்சாரம் கிடைத்தது. கடந்த காலங்களை விட, மின் வாரியம், இந்த சீசனில், அதிக காற்றாலை மின்சாரத்தை வாங்கினாலும், முழுவதுமாக பயன்படுத்தவில்லை. அவ்வாறு, அந்த மின்சாரத்தை முழுவதும் பயன்படுத்தி இருந்தால், அனல் மின் உற்பத்தியை வெகுவாக குறைத்திருக்கலாம். இதன் வாயிலாக, நிலக்கரியை மிச்சப்படுத்தியிருக்க முடியும். தற்போது, அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது.- நமது நிருபர் -
எம்.எட்., படிப்பில் முறைகேடு: மாணவர்கள் தில்லுமுல்லு

Added : செப் 15, 2018 23:21

 
எம்.எட்., படிப்பில், தனியார் கல்லுாரிகளில் தில்லுமுல்லு நடந்துள்ளதாக, பல்கலை கண்டுபிடித்துள்ளது.பி.எட்., - எம்.எட்., படிப்பில் சேரும் மாணவர்கள், கல்லுாரிகளில் நடக்கும் வகுப்புகளில், தினமும் பங்கேற்க வேண்டும்; பின் தேர்வு எழுதி, சான்றிதழ் பெற வேண்டும். அப்படி பட்டம் பெற்றவர்களுக்கு, ஆசிரியர் பணியில் முன்னுரிமை தரப்படுகிறது.இரண்டு ஆண்டு காலம்ஆனால், ஆசிரியர் கல்வியியல் படிப்புக்கான, இரண்டு ஆண்டு காலத்தை, படிப்புக்கு மட்டும் பயன்படுத்தாமல், பள்ளிகளில் வேலை செய்து கொண்டே, பலர் படிக்கின்றனர். அதனால், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்பில் சேருவோர், கல்லுாரிக்கு தினமும் செல்லாமல், வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே செல்கின்றனர். இருப்பினும், தினமும் வகுப்புகளில் பங்கேற்றதாக, போலி சான்றிதழ் பெற்று, தனியார் கல்லுாரிகள் வழியாக, தேர்வு எழுதி வந்தனர்.

முறைகேடு

பி.எட்., படிப்பில், இந்த முறைகேடு நடந்ததாக, ஆசிரியர் கல்வியியல் பல்கலை, கடந்த கல்வி ஆண்டில் கண்டுபிடித்தது. இதையடுத்து, மாணவர்களுக்கு, 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு முறை அமலானது.இந்நிலையில், எம்.எட்., படிப்பிலும், இதே தில்லுமுல்லு நடந்திருப்பதை, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை கண்டுபிடித்துள்ளது. எம்.எட்., படிப்புக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, தனியார் சுயநிதி கல்லுாரிகளில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இருந்தும், கடந்த கல்வி ஆண்டில், அதிக கட்டணம் வசூலித்த சுயநிதி கல்லுாரிகளில், எம்.எட்., படிப்பில், காலியிடங்களே இல்லாத அளவுக்கு, அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். குறைந்த கட்டணம் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தது.பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், மாணவர்கள் இன்றி, இடங்கள் காலியாக இருந்தன. குறைந்த கட்டணத்தில் உள்ள, அரசு கல்லுாரிகளில் சேராமல், தனியார் கல்லுாரிகளில் சேர்ந்தது ஏன் என, பல்கலை நிர்வாகம் விசாரணை நடத்தியது.

தனியார் கல்லுாரிகள்

இதுகுறித்து, பல்கலை துணை வேந்தர் தங்கசாமி உத்தரவில், அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளனர். அதில், தனியார் கல்லுாரிகள் சிலவற்றில், எம்.எட்., படிப்பில் முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளது. அதாவது, பட்டதாரிகள் பலர், பள்ளிகளில் பணியாற்றிபடி, தனியார் கல்லுாரிகளில் எம்.எட்., சேர்ந்து, வகுப்புக்கு வராமல் இருந்துள்ளனர்.அவர்களுக்கு, தினமும் வகுப்புக்கு வந்தது போல, போலி வருகைப்பதிவு அளித்து, தேர்வு எழுத வைத்ததும் தெரிய வந்துள்ளது. இது குறித்து, சில கல்லுாரிகளுக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. விரைவில், அந்த கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. - நமது நிருபர் -
புதிய கட்டுப்பாடு அமல்!

மோசடியை கட்டுப்படுத்த, புதிய கட்டுப்பாட்டை, கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு கல்லுாரியிலும், எம்.எட்., படிப்பை நடத்துவதற்கு, குறைந்தபட்சம், 10 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த, 10 பேரின் பட்டியலுடன், அவர்களின் கல்வி சான்றிதழ்களையும், பல்கலையில் தாக்கல் செய்ய வேண்டும்.பின், பல்கலைகளின் அனுமதியை பெற்று, அவர்களை கல்லுாரிகளில் நியமிக்க வேண்டும். அதற்கு பிறகே, மாணவர்களை சேர்க்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான அனுமதியையும், கல்லுாரிகள் பெற வேண்டும் என, பல்கலை பதிவாளர் ரவீந்திரநாத் தாகூர் கூறியுள்ளார்.
டிக்கெட் இல்லை என இழப்பீடு மறுக்க முடியாது: ரயிலில் இருந்து விழுந்து பயணி இறந்த வழக்கில் உத்தரவு

Added : செப் 15, 2018 23:02
சென்னை,: ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து இறந்த, கூலித்தொழிலாளியின் குடும்பத்துக்கு, 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, ரயில்வே துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

தள்ளுபடிமின்சார ரயிலில், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு சென்ற போது, சைதாப்பேட்டை - மாம்பலம் இடையே, சீனிவாசன் என்பவர், கீழே விழுந்து இறந்தார்.அவரிடம் பயண டிக்கெட் இல்லாததால், இழப்பீடு வழங்க, ரயில்வே நிர்வாகம் மறுத்தது. இழப்பீடு கோரிய மனுவை, ரயில்வே தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சீனிவாசனின் குடும்பத்தினர் வழக்கு தொடுத்தனர். மனுவை, நீதிபதி, எம்.வி.முரளிதரன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர், எஸ்.பார்த்தசாரதி ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:ரயிலில் இருந்து, ஒருவர் கீழே விழுந்து இறக்கும் போது, அவரது வாரிசுகளால், பயண டிக்கெட்டை தாக்கல் செய்ய இயலாது. உயிரிழந்தவர் வசம், ௨,௫௧௦ ரூபாய் இருந்ததாக, தீர்ப்பாயம் கூறியுள்ளது. இவ்வளவு பணம் வைத்திருந்தவர், கண்டிப்பாக பயண டிக்கெட் வாங்கியிருப்பார் என்பது, குடும்பத்தினரின் கருத்து.ரூ.8 லட்சம்இதை மறுக்கும் வகையில், எந்த ஆதாரங்களையும், ரயில்வே தாக்கல் செய்யவில்லை.பாக்கெட்டில், ௨,௫௧௦ ரூபாய் வைத்திருந்தவர், அதிகபட்சம், ௨௦ ரூபாய்க்கான பயண டிக்கெட்டை வாங்காமல் பயணம் செய்திருப்பாரா; விபத்தின் போது, பயண டிக்கெட் காணாமல் போயிருக்கலாம்.ஒருவர் டிக்கெட் வாங்கி பயணித்தாரா, இல்லையா என்பதை, ரயில்வே தான் நிரூபிக்க வேண்டும்.பயண டிக்கெட்டை சமர்ப்பிக்காததால், மனுதாரர்களுக்கு இழப்பீடு மறுப்பது சரியல்ல. எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவு, தள்ளுபடி செய்யப்படுகிறது. சீனிவாசனின் மனைவி, ௩௮ம் வயதில், கணவரை இழந்துள்ளார். இழப்பீடு பெறும் உரிமை, மனுதாரர்களுக்கு உள்ளது.மனுதாரர்களுக்கு, 8 லட்சம் ரூபாயை, வட்டிஉடன் ரயில்வே வழங்க வேண்டும். இழப்பீட்டு தொகைக்கான காசோலையை, ௧௨ வாரங்களில், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
சபரிமலை நடை இன்று மாலை திறப்பு தரிசனம் முடிந்ததும் திரும்பிவிட அறிவுறுத்தல்

Added : செப் 15, 2018 23:43

சபரிமலை புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. உணவு, தண்ணீர் பிரச்னை உள்ளதால், தரிசனம் முடிந்ததும் ஊர் திரும்பிவிடுமாறு பக்தர்களுக்கு தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.55 நாட்கள் இடைவெளிக்கு பின் சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து ஆழிகுண்டத்தில் தீ வளர்க்கப்படும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 4.00 மணிக்கு நெய் அபிஷேகம் துவங்கும். 21-ம் தேதி இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். தினமும் படிபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகளை நடத்துவார்.
கட்டுப்பாடுகள்

பம்பை உருக்குலைந்து காணப்படுவதால் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் அனுமதிக்கும் பாதை வழியாக மட்டுமே செல்ல வேண்டும். குடிநீர், உணவு எடுத்து செல்ல வேண்டும். சன்னிதானத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. தரிசனம் முடிந்த உடன் ஊர் திரும்பிவிட வேண்டும்.பக்தர் வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்தப்படும். அங்கிருந்து கேரள அரசு பஸ்சில் சென்று திரும்ப வேண்டும்.பம்பையில் புலி மீது அமர்ந்த கோலத்தில் 28 அடி உயர ஐயப்பன் சிலை வைக்கப்பட உள்ளது. இதற்கு நேற்று தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் அடிக்கல் நாட்டினார்.
'மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'

Added : செப் 15, 2018 21:03 |



டேராடூன்: அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், நோயாளி களுக்கு பரிந்துரைக்கும் மருந்து சீட்டுகளை, இனி கையால் எழுதி தராமல், 'கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்'களாக தரவேண்டும் என, உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான ஒரு வழக்கில், உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், நோயாளி களுக்கு மருந்து சீட்டுகளை, கையால் எழுதி தருகின்றனர். இதனால், நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள், பல சந்தர்ப்பங்களில், டாக்டர்களின் கையெழுத்து புரியாமல் தவிக்கின்றனர். இதை தவிர்க்கும் வகையில், உத்தரகண்டை சேர்ந்த அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், இனி மருந்து சீட்டுகளை, கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்களாக வழங்க வேண்டும்.அரசு டாக்டர்களுக்கு, கம்ப்யூட்டர் மற்றும், 'பிரின்டர்' வசதிகளை, மாநில அரசு செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NEWS TODAY 01.07.2026