Sunday, September 16, 2018

தமிழகத்தில் நாளை முதல் மின் தடை 

dinamalar 16.09.2018

அனல் மின் நிலையங்களில், 1.85 லட்சம் டன் நிலக்கரி மட்டும் இருப்பு உள்ளதால், நாளை முதல், கிராமங்களில், அதிக நேரம் மின் தடை செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.



மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில், தினமும் சராசரியாக, 3,500 மெகா வாட்; கோடை காலத்தில், 4,000 மெகா வாட் வரை, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மே முதல், காற்றாலைகளில் இருந்து, தினமும் சராசரியாக, 3,000 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைத்தது. இதனால், அனல் மின் உற்பத்தியை, மின் வாரியம் குறைத்தது. இம்மாத இறுதியில், காற்றாலை சீசன் முடிவடைய உள்ளதால், தற்போது, அவற்றில் இருந்து, 300 - 400 மெகா வாட் மட்டுமே கிடைக்கிறது. வெயிலும் சுட்டெரிப்பதால், மின் வாரியம், அனல் மின் உற்பத்தியை, மீண்டும், அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து, தமிழகத்திற்கு,
நிலக்கரி வரத்து பாதித்துள்ளதால், நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அனல் மின் நிலையங்களில், முழு அளவில் உற்பத்தி செய்ய முடியவில்லை. மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு தினமும், 6,138 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 2,500 மெகா வாட் வரை குறைவாகவே கிடைக்கிறது. இதனால், மின் வாரியத்தால், மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலைஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நெருக்கடி அதிகம் இருந்த, 8, 9, 10ம் தேதிகளில், கிராம பகுதிகளில், ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை, மின் தடை செய்யப்பட்டது.

இந்த பிரச்னையை, எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதனால், நிலக்கரி தட்டுப்பாட்டால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ள, 600 மெகா வாட் அலகில், 11ம் தேதி முதல், மீண்டும், மின் உற்பத்தி துவங்கப்பட்டது. இதையடுத்து, மின் தடை நேரம், ஒரு மணி முதல், இரண்டு மணி வரை என, குறைக்கப்பட்டது. இந்நிலையில், 'மூன்று நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது; அனல் மின் நிலையங்களில், தொடர்ந்து மின் உற்பத்தி செய்ய, தினமும், 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. அதை, உடனே வழங்கவிட்டால், அனல் மின் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி, அவசர கடிதம் எழுதியுள்ளார். நேற்று காலை நிலவரப்படி, அனல் மின் நிலையங்களில், 1.85 லட்சம் டன் நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது. அதை பயன்படுத்தி, நாளை வரை மின் உற்பத்தி செய்யலாம். ஒடிசாவில் உள்ள, பரதீப் துறைமுகத்தில் இருந்து, நிலக்கரி வருவதிலும்
தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், நாளை முதல், அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தி பாதித்தால், மின் தடை நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நிலக்கரி தட்டுப்பாட்டால், அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தி பாதித்தால், மின் தடை செய்வதை தவிர, வேறு வழியில்லை' என்றார்.

மிச்சமாகி இருக்கும்! :

நடப்பு காற்றாலை சீசனில், எப்போதும் இல்லாத அளவிற்கு, அதிக மின்சாரம் கிடைத்தது. கடந்த காலங்களை விட, மின் வாரியம், இந்த சீசனில், அதிக காற்றாலை மின்சாரத்தை வாங்கினாலும், முழுவதுமாக பயன்படுத்தவில்லை. அவ்வாறு, அந்த மின்சாரத்தை முழுவதும் பயன்படுத்தி இருந்தால், அனல் மின் உற்பத்தியை வெகுவாக குறைத்திருக்கலாம். இதன் வாயிலாக, நிலக்கரியை மிச்சப்படுத்தியிருக்க முடியும். தற்போது, அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024