Sunday, September 23, 2018


நவ திருப்பதியில் சிறப்பு தரிசனம்

Added : செப் 23, 2018 02:46

திருநெல்வேலி: புரட்டாசி மாத, முதல் சனிக்கிழமையான நேற்று, நவ திருப்பதி கோவில்களில், சிறப்பு தரிசனம் மற்றும் பூஜைகள் நடந்தன. துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், நத்தம் விஜயகான பெருமாள், திருப்புளியங்குடி காசினிவேந்தர் பெருமாள், பெருங்குளம் மாயகூத்தர். மேலும், இரட்டை திருப்பதியான அரவிந்த லோசன், தேவர்பிரான், தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதர், திருக்கோவிலுார் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் ஆகியவை நவதிருப்பதி கோவில்கள். இக்கோவில்களில், ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், சிறப்பு வழிபாடு மற்றும் கருடசேவை நடக்கும். இந்தாண்டு, புரட்டாசி மாத, முதல் சனிக்கிழமையான நேற்று, நவதிருப்பதி கோவில்களில் அதிகாலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, சிறப்பு பூஜைகள் நடந்தன. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வரும், 29ம் தேதி சனிக்கிழமை, அக்டோபர், 6, 13ம் தேதி சனிக்கிழமைகளிலும், சிறப்பு வழிபாடு மற்றும் இரவில் கருட சேவை நடக்கிறது. இதையொட்டி, வாரம்தோறும் சனிக்கிழமைகளில், நவதிருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் செல்லும் வகையில், நெல்லை, துாத்துக்குடியிலிருந்து, அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கிரிவலம் வர உகந்த நேரம்

Added : செப் 23, 2018 02:23

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர் உண்ணாமுலை அம்மனை தரிசித்து செல்வர். இந்த புரட்டாசி மாத பவுர்ணமி, நாளை காலை, 7:41 மணிக்கு துவங்கி, மறுநாள் காலை, 8:42 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில், கிரிவலம் வர உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரவிருக்கும் விசேஷங்கள்
  • செப்டம்பர் 25 (செ) மகாளயபட்சம் ஆரம்பம்
  • அக்டோபர் 2 (செ) காந்தி ஜெயந்தி
  • அக்டோபர் 2 (செ) தினமலர் நிறுவனர் டிவிஆர்., 110 வது பிறந்த நாள்
  • அக்டோபர் 6 (ச) மகா சனிப்பிரதோஷம்
  • அக்டோபர் 8 (தி) மகாளய அமாவாசை
  • அக்டோபர் 10 (பு) நவராத்திரி ஆரம்பம்

Saturday, September 22, 2018


வாழ்க்கை ரகசியத்தை உணர்த்த ஒரு எருமைக் கதை சொல்லவா சார்?!


By வேலுச்சாமி ராஜேந்திரன், தேனி. | Published on : 21st September 2018 04:15 PM |



ஒருநாள் எருமைக்கு அசாத்திய கோபம் வந்தது.

கோபத்தை தீர்த்துக் கொள்ள அது நேரடியாய்ப் போய் நின்ற இடம் கைலாயம்.

கழுத்தில் பாம்பு படமெடுத்து நிற்க தியானத்தில் அமர்ந்திருந்த சிவன் மெல்லக் கண் திறந்தார். வந்திருப்பது எருமை என்று மட்டுமல்ல ஏன் வந்திருக்கிறது என்ற காரணமும் அவருக்குத் தெரியும். ஆயினும் சுற்றியிருக்கும் பூத கணங்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில்,


வந்தாயா எருமையே! வா, வா எப்படி இருக்கிறாய்? என்றார்.

எருமைக்கு கோபம் தீர்ந்தபாடில்லை.

முக்காலமும் உணர்ந்த ஐயனே! நீர் அறியாததா? எனது நலம்?! ஆயினும் நீங்கள் கேட்டதன் பின் பதிலுரைக்காமல் இருத்தல் தகுமோ! அதனால் சொல்லித்தான் தீர வேண்டும்.

எம்பெருமானே! எங்களை ஏன் இப்படிப் படைத்தீர்கள். பூலோகத்தில் மானுடர்கள் எங்களைச் சுத்தமாக மதிப்பதே இல்லை. நாளும் அவர்களது பொல்லாச் சொற்களில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறோம் நாங்கள். சேற்றில் புரளும் எருமைகளே! மந்த புத்தி எருமைகளே! எருமை மாட்டில் மழை பெய்தார் போல, எருமை போல அசையா ஜென்மமே, சூடு, சொரணை இல்லாத எருமைகளே! என்று எப்படியெல்லாம் மானுடர்கள் எங்களைத் திட்டித் தீர்க்கிறார்கள் தெரியுமா? நினைத்தால் கோபத்திலும், ஆத்திரத்திலும் மனம் புழுங்கிச் சாகிறது. நாங்கள் அப்படியென்ன பாவம் செய்தோம்? இப்படி ஒரு பெயர் வாங்க?!

எம்பெருமான் தமக்குள் புன்னகைத்துக் கொண்டவராக எருமையை நோக்கி இப்படிச் சொன்னார்...

என்னைக் கூட சுடுகாட்டில் ஆடுபவன், பிணம் எரித்த சாம்பல் பூசித் திரிபவன், கபால ஓட்டில் பிச்சையெடுப்பவன் என்று மானுடர்களில் பலர் சொல்வதுண்டு என்றார்.

எருமை அவரது பகடியைக் கவனித்தது போலத் தெரியவில்லை.

ஐயனே... உங்கள் அருமை அறியாதவர்கள் கிடக்கிறார்கள் அவர்களை விடுங்கள்... எங்களுக்கு ஆறாத மற்றொரு ரணம் உண்டு. பசுக்களுக்கும், எங்களுக்கும் என்ன பெரிய வித்யாசம்? அவை தரும் பாலும் வெண்மையாகத்தான் இருக்கிறது. நாங்கள் தரும் பாலும் வெண்மையாகத் தான் இருக்கிறது. ஆனால், இந்த மட மானுடர்கள் அவைகளை மட்டும் புனிதம் என்ற பெயரில் போற்றிப் புகழ்கிறார்கள். கோமியத்தைப் பிடித்து வீட்டு மூலை, முடுக்கெல்லாம் தெளித்து பரிமள வாசம் என்று மெச்சிக் கொள்கிறார்கள். ஆனால், எங்களை என்னடாவென்றால் வீட்டுக்குள் நுழையவே விடுவதில்லை. எப்போது பார்த்தாலும் மந்த புத்தி எருமை என்று கரித்துக் கொட்டுகிறார்கள். இதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும். நாங்களும் பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும். பரம்பொருளான உங்களால் முடியாதது உண்டா?! எங்களை தயவு செய்து பசுக்களுக்கு இணையாக மாற இக்கணமே வரமளியுங்கள்.
- என்று சிவனிடம் கோரிக்கை வைத்தது எருமை.

இதழ்களில் நெளியும் புன்னகையுடன், சாந்த ஸ்வரூபியாக எருமை சொன்னதைச் செவி மடுத்த ஈசன்... அதைக் காத்தருளும் அபய முத்திரையுடன் எருமையை ஆசிர்வதித்து.

எருமையே பிரம்மன் படைப்பில் அனைத்து உயிர்களும் சமமானவையே. ஒன்றில் உயர்வும் பிறிதொன்றில் தாழ்வும் எப்போதும் இல்லை. உன் கோரிக்கை நியாயமானது தான். ஆதலின் அதை நிறைவேற்ற நான் முயற்சிக்கிறேன். அதற்கு முன்பு நீ எனக்கொரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அளித்தால் நான் உன்னை பசுக்களுக்கு இணையாக மானுடர் மதிக்கும் படியாகச் செய்வேன் என்றார்.

எருமைக்கு ஒரே சந்தோசமாகி விட்டது.

உத்தரவிடுங்கள் எம்பெருமானே... என்றது.

ஈசன் சொன்னார்... பூலோகத்தில் பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும் என்ற உனது விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டுமெனில், நீ இன்று முதல் சேற்றில் புரளும் உன் இன்பத்தைக் கைவிட வேண்டும். சொந்த ஆசையிலோ அல்லது சூழ்நிலை காரணமாகவோ கூட நீ இனி எப்போதும் சேற்றில் அமிழ்ந்து புரளக்கூடாது. இந்த உத்தரவாதம் மட்டும் அளித்தாயானால் நாளை முதல் பூலோகத்தில் எருமைகளும், பசுக்களும் ஒரே விதத்தில் மதிக்கப்பட வேண்டும் என்று நான் வரமளிக்கிறேன்’ என்றார்.

எம்பெருமானின் கருணையில் முகம் பூரித்தாலும் எருமைக்கு அவர் கேட்ட உத்தரவாதம் நடு மண்டையில் கல்லைத் தூக்கிப் போட்டாற் போலிருந்தது.

அது ஒரு நொடி திகைத்து நின்றது. பின் எம்பெருமானை நோக்கி;

சர்வேஸ்வரா, நீங்கள் கேட்கும் உறுதிமொழியை என்னால் தர இயலாது. மானுடர்களின் மதிப்பு, மரியாதைக்காக என்னால் எனது சிற்றின்பத்தைப் பலி கொடுக்க முடியாது. சேற்றில் புரள்வது எருமைகளான எங்கள் இனத்திற்கு கோடானு கோடி இன்பங்களில் ஒன்று. அதைத் தாரை வார்த்து விட்டு பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட்டு நாங்கள் பெறப்போவது ஏதுமில்லை. என் கோபத்தின் மீதே எனக்கிப்போது கோபம் வருகிறது. உங்கள் ஆசி போதும். எனக்கு வரம் ஏதும் வேண்டாம்’ என்று சொல்லி புறமுதுகிட்டு ஓடிப் போனது.

நடந்தது அத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த நந்தி தேவரும், பூத கணங்களும் எம்பெருமானின் அருகில் அணைந்து;

மகாதேவரே! எருமையின் கோரிக்கையில் தவறென்ன? என்றார்கள்.

ஜடைமுடியில் உச்சிப் பிறைநிலா பளீரென ஒளி விட... மந்தகாசப் புன்னகையுடன் அவர்களை நோக்கிய மகா நீலகண்டர்...

கோரிக்கையில் தவறில்லை நந்தி... அந்தக் கோரிக்கையை அடைவதற்கான முயற்சியில் தான் தடை. எருமை முடிவெடுத்து விட்டது சேற்றில் புரள்வது தான் தனக்கு இன்பம் என. அப்படி இருக்கையில் மானுடர்கள் அதை குளிப்பாட்டி பூஜித்து நடு வீட்டில் கொண்டு வைக்க நினைத்தாலும் அதன் நினைவெல்லாம் சேற்றைத் தேடிக் கண்டடைவதாகத் தான் இருக்கும். நினைவில் எப்போதும் சேற்றைத் தேடும் எருமையை மானுடர் எப்படி பூஜிப்பர்? எருமை சேற்றைக் கைவிட முடியாததோடு தமக்கு நிஜமான இன்பம் மானுடர்களின் மரியாதையில் இல்லை என்பதையும் கண்டு கொண்டது. இது தன்னையறிந்த நிலை. இந்த நிலையை மனிதர்கள் அடைவார்களாயின் அவர்களுக்குள் போட்டி பொறாமை என்பதே இல்லாமல் நீங்கி விடும்.

வாழ்வின் ரகசியம் இது தான்.

ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானறிந்து செயல்பட்டால் அதற்குண்டான வெற்றிக்கும், தோல்விக்கும் தானன்றி வேறெவரும் காரணமில்லை என்பதையும் உணர்வார்கள். அதோடு வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டுமெனில் எதையாவது தியாகம் செய்தே தீர வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அந்த தியாகத்தைச் செய்து வாழ்வின் அடுத்த படிக்கு முன்னேற எருமைக்கு மனமில்லை. அதனால் அது தனது வழக்கமான நிலையிலேயே நீடிக்கிறது என்றும் ஈசன் பகர்ந்தார். இனிமேல் அதற்கு தன்னைப் பற்றிய சுயமதிப்பீட்டில் மனக்குறை இருக்காது என்று மென்னகையுடன் நிஷ்டையில் ஆழ்ந்து போனார் மூவுலகையும் பரிபாலிக்கும் எம்பெருமான் ஈசன்.
அவர்கள் பாக்கியசாலிகள்

By ம. அஹமது நவ்ரோஸ் பேகம் | Published on : 21st September 2018 01:51 AM 

நம் மக்கள் கையில் அறிதிறன்பேசி (ஸ்மார்ட் போன்') கிடைத்தாலும் கிடைத்தது, சமூக வலைதளங்கள் மூலம் ஒருவரையொருவர் தூற்றிக் கொள்வதற்கும், விமர்சனங்களை அள்ளி விடுவதற்கும் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது போல சாடுவதற்கும், தூற்றுவதற்கும் தயாராகி விடுகின்றனர். ஒரு சிறு செய்தி கிடைத்தால் போதும், அவரவர் தாங்களே பஞ்சாயத்து தலைவர் போலவும், நீதிபதி போலவும் தீர்ப்பு சொல்ல ஆரம்பித்துவிடுகின்றனர்.
சம்பந்தப்பட்டவர்களை இவர்கள் நார், நாராய்க் கிழிப்பது போதாதென்று, காட்சி ஊடகங்களும் தங்கள் பங்குக்கு காலையில் இருந்து இரவு வரையிலும், சில நேரங்களில் நாட்கணக்கிலும்கூட அந்த சாதாரண செய்தி பற்றியே பேசித் தீர்க்கின்றனர். இழந்துவிட்டால் திரும்பக் கிடைக்க முடியாத நேரம் வீணாகப் போகிறதே என்று யாரும் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. 

அடுத்தவர் விவகாரங்களை அறிவதில்தான் மக்களுக்கு எத்துணை ஆர்வம்? யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று கூறுவதுபோல இம்மாதிரியான தகவல்களை தாங்கள் பார்த்து ரசிப்பது மட்டுமின்றி இதனை ஒரு சேவையாகக் கருதி மற்றவர்களுக்கும் பகிர்கிறார்கள். பெரியவர்கள் இம்மாதிரியான செய்திகள், விவாதங்களை குழந்தைகளுடன் பார்க்கும்பொழுது கொலை, கொள்ளை, கூடாவொழுக்கம் ஆகியவை பற்றி எதுவுமே தெரியாத இளம் சிறார்கள் மனதில் படிப்படியாக நச்சு விதை விதைக்கப்படுகிறது. 

நல்ல விஷயங்களை நாள் கணக்கில் பேசுவதிலும், விவாதிப்பதிலும் தவறொன்றும் இல்லை. அதனால் நன்மைகள் விளையவில்லையென்றாலும், தீமைகள் ஏற்படப்போவதில்லை. செல்லிடப்பேசியில் அழைப்பொலி கேட்கவேண்டாம் என்று நாம் நினைக்கும் போது சப்தத்தை முடக்கும் (வைப்ரேஷன்') முறையைத் தேர்வு செய்கிறோம்.

அது போல நல்ல செய்திகளை மூளை உடனே பதிவு செய்தாலும், செயல்படுத்துவதற்கான வழியை மனம் அவ்வளவு சீக்கிரம் தெரிவு செய்வதில்லை. ஆனால் கெட்ட விஷயங்களை மூளை பதிவு செய்துவிடும் அதே வேகத்தில் செயல்படுத்தத் தயாராகி விடுகிறது. திரும்பத் திரும்ப அவற்றைக் கேட்கும்போது, பார்க்கும்போது தவறு அரங்கேறிவிடுகிறது.
தவறு செய்பவர்களைத் தண்டிக்க, சட்டம் இருக்கிறது, காவல்துறையினர் இருக்கின்றனர். சட்டம் தரும் தண்டனையை விடக் கொடுமையானது இவர்களைப் பற்றிய மக்களின் விமர்சனங்கள்தாம். தவறு நடந்ததை நேரில் பார்த்தது போல் தவறு செய்து பிடிபட்டவர்களின் மீது ஆங்காரம் கொள்கிறார்கள். அத்துடன் நில்லாமல் அவர்களின் அந்தரங்களை பொதுவெளியில் விவாதப் பொருளாக்குகிறார்கள். இது நாகரிக வளர்ச்சி அடைந்த சமுதாயத்திற்கு அழகல்ல. 

இப்படிப்பட்ட விமர்சனங்களால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மனம் என்ன பாடுபடும் என்றும் அவர்கள் வெளியில் எப்படித் தலை காட்டுவர் என்பதையும், மற்றவர்களின் கேலியும், கேள்விக்கணைகளும் அவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சளைத் தரும் என்பதையும் மனிதநேயத்துடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இப்படிப்பட்ட அணுகுமுறை தவறு செய்பவர்களைத் திருத்துவதற்கு நிச்சயமாக உதவாது. தவறு செய்யாதவர்களையும், தவறு செய்யத் தூண்டுவதாகவே அமையும். 

தாயன்பிற்கு ஈடு இணை கிடையாது. இதற்கு, களங்கம் கற்பிக்கும் வகையில் மோக வலையில் சிக்கி பெற்ற குழந்தைகளைக் கொன்ற தாய், தன் கவனக்குறைவால்தான் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தண்ணீரில் தவறி விழுந்து இறந்து விட்டனர் என்ற குற்ற உணர்ச்சியால் தற்கொலை செய்து கொள்ளும் தாய், குழந்தைகளின் மனம் பாதிப்புக்குள்ளாகக் கூடாது என்பதற்காக கொடூரமான கணவனைச் சகித்துக் கொண்டு வாழும் பெண்கள் என முற்றிலும் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்ட கலப்பு (கலப்பட) சமுதாயமாக நம் சமுதாயம் மாறி விட்டது.

முன்பெல்லாம் ஒருவரிச் செய்தியாக பத்திரிகைகளில் வலம் வந்தவை இன்று பக்கம், பக்கமாக, அடுத்தடுத்த நாட்களில் கூட விரிவாகப் பேசப்படுகிறது. தான் மட்டும் சரியாக நடப்பதாக ஒவ்வொருவரும் எண்ண ஆரம்பித்துவிட்டதால், பக்கத்து வீட்டுக்காரர்கள் முதற்கொண்டு சொந்தக்காரர்கள், அரசியல்வாதிகள் வரை யாருமே சரியில்லை என்று புலம்புகிறார்கள். தம் முதுகில் என்ன இருக்கிறதென்பது யாருக்கும் தெரியாது என்னும் சொலவடை, நாம் செய்யும் தவறுகளை நாம் உணர்ந்து கொள்வதில்லை என்பதைத்தான் குறிப்பிடுகிறது. 

அடுத்தவர் மீது குற்றம் சாட்டுவோர், தாம் சரியாக இருக்கின்றோமா என்பதை மட்டும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் மீது கல்லெறிவதற்கு தயாரான கூட்டத்தினரிடம் உங்களில் யார் எந்தத் தவறுமே செய்யவில்லையோ அவர்கள் மட்டுமே கல்லெறியட்டும்' என்று இயேசுநாதர் சொல்வதாக பைபிள் கதை ஒன்று உண்டு. 

ஒவ்வொருவரும் தத்தம் குறைகளை சீர் தூக்கிப் பார்த்துக் களைந்து கொண்டால் நாட்டில் குறை சொல்வோர் கூட்டம் குறைந்துவிடும்.
நம் நேரத்தை வீணடிக்கக்கூடிய மனதைப் பாதிக்கக்கூடிய இது மாதிரியான விமர்சனம், விவாத அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து தப்பிப்பவர்கள் தொலைக்காட்சி, அறிதிறன்பேசி போன்ற வசதிகள் இல்லாதவர்கள்தாம். அவர்கள் பாக்கியசாலிகள்.

போ சான்றிதழ் கொடுத்து டில்லியில் படிக்கும் மாணவர்

Added : செப் 22, 2018 05:37

வேலுார்: போலி சான்றிதழ் கொடுத்து, டில்லியில் படித்து வரும் மாணவன் குறித்து, திருவள்ளுவர் பல்கலை அம்பலப்படுத்தியுள்ளது.டில்லியை சேர்ந்த, ஹன்கிவ் பைசோயா, 22, என்ற மாணவன், டில்லி பல்கலைக்கழகத்தில், புத்த மத சம்பந்தமான, எம்.ஏ., படிப்பு படித்து வருகிறான். இவன், இளங்கலை, பி.ஏ., படிப்பு சான்றிதழ் மூலம், டில்லி பல்கலையில் சேர்ந்துள்ளான். இவனது இளங்கலை சான்றிதழ், வேலுார், திருவள்ளுவர் பல்கலையில் படித்து வாங்கப்பட்டதாக உள்ளது.கடந்த மாதம் நடந்த தேர்தலில், இவன் பல்கலை மாணவர் அமைப்பு தலைவனாக தேர்வு செய்யப்பட்டான்

. அப்போது, இவனது சான்றிதழ்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பி.ஏ., கல்வி சான்றிதழில், சில முரண்பாடு இருப்பது தெரிந்தது.இந்த விபரம், அங்குள்ள இந்திய தேசிய மாணவர் அமைப்பு மூலம், தமிழ்நாடு, காங்., கமிட்டிக்கு தெரிந்தது.இதனால், மாணவனின், பி.ஏ., சான்றிதழ் உண்மை தன்மை குறித்து தகவல் தெரிவிக்கும்படி, தமிழ்நாடு, காங்., கமிட்டி, எஸ்.சி., பிரிவில் இருந்து, வேலுார் திருவள்ளுவர் பல்கலைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.அதில் மாணவனின், பி.ஏ., சான்றிதழ் நகல் இணைக்கப்பட்டிருந்தது. அதை பரிசோதித்ததில், போலி என, தெரிந்தது.இது குறித்து, திருவள்ளுவர் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செந்தில்குமார், நேற்று கூறியதாவது:டில்லி மாணவர் வைத்துள்ள, பி.ஏ., சான்றிதழ் போலியானது. 

அவர், 2013 - 16ம் ஆண்டு வரை திருவள்ளுவர் பல்கலையில் படித்து, சான்றிதழ் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.அந்த காலத்தில், அவர் இங்கு படித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பெயர், பதிவு எண் இல்லை. அவர், எந்த பிரிவை தேர்வு செய்து படித்தார் என்ற விபரமும் இல்லை.இதன் மூலம் மாணவர், திருவள்ளுவர் பல்கலை பெயரில் போலியான சான்றிதழ் தயாரித்து, டில்லி பல்கலையில் சேர்ந்துள்ளார். இந்த விபரம், மாநில, காங்., கமிட்டி, எஸ்.சி., பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.பூதாகரமாக கிளம்பியுள்ள இந்த விவகாரம் குறித்து, டில்லி போலீசார், டில்லி பல்கலைக்கழகம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது.விரைவில், மாணவன் சமர்ப்பித்த, பி.ஏ., சான்றிதழுடன், பல்கலை அதிகாரிகள், டில்லி போலீசார், வேலுாருக்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாணவர் அமைப்பு தலைவன் பதவியில் இருந்து, ஹக்கிவ் பைசோயா நீக்கப்படுவான் என, தெரிகிறது.
ராஜகம்பீரத்தில் 25 மயில்கள் பலி

Added : செப் 22, 2018 00:16

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் 25 க்கும் மேற்பட்ட மயில்கள் பலியாகி கிடந்தன. ராஜகம்பீரத்தில் சந்திரன், 50, என்பவர் 3 ஏக்கரை குத்தகைக்கு எடுத்து நெல் விவசாயம் செய்து வருகிறார். நேற்று அந்த பகுதியில் 25 க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனை பார்த்தவர்கள்மயில்களை ஒரே இடத்தில் குவித்து விட்டு அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இரவு 7:00 மணிக்குள் மர்ம நபர்கள் மயில்களை அப்புறப்படுத்தி விட்டனர். வனத்துறையினர் நடவடிக்கை கோரிக்கை எழுந்துள்ளது.

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...