அவர்கள் பாக்கியசாலிகள்
By ம. அஹமது நவ்ரோஸ் பேகம் | Published on : 21st September 2018 01:51 AM
நம் மக்கள் கையில் அறிதிறன்பேசி (ஸ்மார்ட் போன்') கிடைத்தாலும் கிடைத்தது, சமூக வலைதளங்கள் மூலம் ஒருவரையொருவர் தூற்றிக் கொள்வதற்கும், விமர்சனங்களை அள்ளி விடுவதற்கும் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது போல சாடுவதற்கும், தூற்றுவதற்கும் தயாராகி விடுகின்றனர். ஒரு சிறு செய்தி கிடைத்தால் போதும், அவரவர் தாங்களே பஞ்சாயத்து தலைவர் போலவும், நீதிபதி போலவும் தீர்ப்பு சொல்ல ஆரம்பித்துவிடுகின்றனர்.
சம்பந்தப்பட்டவர்களை இவர்கள் நார், நாராய்க் கிழிப்பது போதாதென்று, காட்சி ஊடகங்களும் தங்கள் பங்குக்கு காலையில் இருந்து இரவு வரையிலும், சில நேரங்களில் நாட்கணக்கிலும்கூட அந்த சாதாரண செய்தி பற்றியே பேசித் தீர்க்கின்றனர். இழந்துவிட்டால் திரும்பக் கிடைக்க முடியாத நேரம் வீணாகப் போகிறதே என்று யாரும் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை.
அடுத்தவர் விவகாரங்களை அறிவதில்தான் மக்களுக்கு எத்துணை ஆர்வம்? யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று கூறுவதுபோல இம்மாதிரியான தகவல்களை தாங்கள் பார்த்து ரசிப்பது மட்டுமின்றி இதனை ஒரு சேவையாகக் கருதி மற்றவர்களுக்கும் பகிர்கிறார்கள். பெரியவர்கள் இம்மாதிரியான செய்திகள், விவாதங்களை குழந்தைகளுடன் பார்க்கும்பொழுது கொலை, கொள்ளை, கூடாவொழுக்கம் ஆகியவை பற்றி எதுவுமே தெரியாத இளம் சிறார்கள் மனதில் படிப்படியாக நச்சு விதை விதைக்கப்படுகிறது.
நல்ல விஷயங்களை நாள் கணக்கில் பேசுவதிலும், விவாதிப்பதிலும் தவறொன்றும் இல்லை. அதனால் நன்மைகள் விளையவில்லையென்றாலும், தீமைகள் ஏற்படப்போவதில்லை. செல்லிடப்பேசியில் அழைப்பொலி கேட்கவேண்டாம் என்று நாம் நினைக்கும் போது சப்தத்தை முடக்கும் (வைப்ரேஷன்') முறையைத் தேர்வு செய்கிறோம்.
அது போல நல்ல செய்திகளை மூளை உடனே பதிவு செய்தாலும், செயல்படுத்துவதற்கான வழியை மனம் அவ்வளவு சீக்கிரம் தெரிவு செய்வதில்லை. ஆனால் கெட்ட விஷயங்களை மூளை பதிவு செய்துவிடும் அதே வேகத்தில் செயல்படுத்தத் தயாராகி விடுகிறது. திரும்பத் திரும்ப அவற்றைக் கேட்கும்போது, பார்க்கும்போது தவறு அரங்கேறிவிடுகிறது.
தவறு செய்பவர்களைத் தண்டிக்க, சட்டம் இருக்கிறது, காவல்துறையினர் இருக்கின்றனர். சட்டம் தரும் தண்டனையை விடக் கொடுமையானது இவர்களைப் பற்றிய மக்களின் விமர்சனங்கள்தாம். தவறு நடந்ததை நேரில் பார்த்தது போல் தவறு செய்து பிடிபட்டவர்களின் மீது ஆங்காரம் கொள்கிறார்கள். அத்துடன் நில்லாமல் அவர்களின் அந்தரங்களை பொதுவெளியில் விவாதப் பொருளாக்குகிறார்கள். இது நாகரிக வளர்ச்சி அடைந்த சமுதாயத்திற்கு அழகல்ல.
இப்படிப்பட்ட விமர்சனங்களால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மனம் என்ன பாடுபடும் என்றும் அவர்கள் வெளியில் எப்படித் தலை காட்டுவர் என்பதையும், மற்றவர்களின் கேலியும், கேள்விக்கணைகளும் அவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சளைத் தரும் என்பதையும் மனிதநேயத்துடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இப்படிப்பட்ட அணுகுமுறை தவறு செய்பவர்களைத் திருத்துவதற்கு நிச்சயமாக உதவாது. தவறு செய்யாதவர்களையும், தவறு செய்யத் தூண்டுவதாகவே அமையும்.
தாயன்பிற்கு ஈடு இணை கிடையாது. இதற்கு, களங்கம் கற்பிக்கும் வகையில் மோக வலையில் சிக்கி பெற்ற குழந்தைகளைக் கொன்ற தாய், தன் கவனக்குறைவால்தான் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தண்ணீரில் தவறி விழுந்து இறந்து விட்டனர் என்ற குற்ற உணர்ச்சியால் தற்கொலை செய்து கொள்ளும் தாய், குழந்தைகளின் மனம் பாதிப்புக்குள்ளாகக் கூடாது என்பதற்காக கொடூரமான கணவனைச் சகித்துக் கொண்டு வாழும் பெண்கள் என முற்றிலும் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்ட கலப்பு (கலப்பட) சமுதாயமாக நம் சமுதாயம் மாறி விட்டது.
முன்பெல்லாம் ஒருவரிச் செய்தியாக பத்திரிகைகளில் வலம் வந்தவை இன்று பக்கம், பக்கமாக, அடுத்தடுத்த நாட்களில் கூட விரிவாகப் பேசப்படுகிறது. தான் மட்டும் சரியாக நடப்பதாக ஒவ்வொருவரும் எண்ண ஆரம்பித்துவிட்டதால், பக்கத்து வீட்டுக்காரர்கள் முதற்கொண்டு சொந்தக்காரர்கள், அரசியல்வாதிகள் வரை யாருமே சரியில்லை என்று புலம்புகிறார்கள். தம் முதுகில் என்ன இருக்கிறதென்பது யாருக்கும் தெரியாது என்னும் சொலவடை, நாம் செய்யும் தவறுகளை நாம் உணர்ந்து கொள்வதில்லை என்பதைத்தான் குறிப்பிடுகிறது.
அடுத்தவர் மீது குற்றம் சாட்டுவோர், தாம் சரியாக இருக்கின்றோமா என்பதை மட்டும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் மீது கல்லெறிவதற்கு தயாரான கூட்டத்தினரிடம் உங்களில் யார் எந்தத் தவறுமே செய்யவில்லையோ அவர்கள் மட்டுமே கல்லெறியட்டும்' என்று இயேசுநாதர் சொல்வதாக பைபிள் கதை ஒன்று உண்டு.
ஒவ்வொருவரும் தத்தம் குறைகளை சீர் தூக்கிப் பார்த்துக் களைந்து கொண்டால் நாட்டில் குறை சொல்வோர் கூட்டம் குறைந்துவிடும்.
நம் நேரத்தை வீணடிக்கக்கூடிய மனதைப் பாதிக்கக்கூடிய இது மாதிரியான விமர்சனம், விவாத அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து தப்பிப்பவர்கள் தொலைக்காட்சி, அறிதிறன்பேசி போன்ற வசதிகள் இல்லாதவர்கள்தாம். அவர்கள் பாக்கியசாலிகள்.

No comments:
Post a Comment