Sunday, February 17, 2019


போர்க்களமாகும் சாலைகள்!


By முனைவர் அருணன் கபிலன் | Published on : 15th February 2019 01:22 AM |

இருபுறம் அல்ல. முப்புறமும்கூட அல்ல. நாற்புறமும் அணிவகுத்து நிற்கிறார்கள். எல்லாருடைய கண்களும் சமிக்ஞை ஒளியையே கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. எல்லாரும் தலைக்கவசங்கள் அணிந்திருக்கிறார்கள். சிலர் கைகளுக்கும்கூடக் கவசம் தரித்திருக்கிறார்கள். எந்திரக் குதிரைகளைப் போல இரு சக்கர வாகனங்களும் எந்திரத் தேர்களைப் போல நான்கு சக்கர வாகனங்களும் எந்திர யானைகளைப் போலப் பேருந்துகளும் கனரக வாகனங்களும் உறுமிக் கொள்கின்றன. இடையில் ஊர்ந்து திரிகிற காலாட்படை வீரர்களைப் போன்ற பாதசாரிகளும் தனக்கான சமிக்ஞை ஒளி கண்டவுடன் பாயத் தயாராக இருக்கிறார்கள். எங்கும் ஒரே இரைச்சலும் கூச்சலும். 

இது பழங்காலத்துப் போர்க்களமோ என்கிற ஐயம் ஒரு கணம் தோன்றி மறைகிறது. இல்லையில்லை. இது மாநகரத்தின் பெருஞ்சாலை என்று நிதர்சனம் கூறுகிறது. ஆனால் என்ன வேற்றுமையில் ஒற்றுமை. போர்க்களத்தில் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ள வேண்டும் என்பது விதி. சாலையில் ஒருவரோடொருவர் மோதி விடக் கூடாது என்பதுதான் விதி.
ஆனால், தலைவிதி இருக்கிறதே போர்க்களத்தில் கூட மோதிப் பிழைத்து விடலாம் போலிருக்கிறது. சாலையில் மோதிக்கொள்ளாமல் பிழைத்துப் போவது கடினம் போலத் தோன்றுகிறது. போர்க்களத்திலாவது எதிரே இருக்கிற ஒருவர் மீதுதான் நம் கவனத்தைச் செலுத்திச் செயல்பட வேண்டும். ஆனால், இன்றைய சாலைகளில் வாகனங்களில் பயணிக்க பிரமனைப் போல் நான்கு தலை கொண்டிருந்து 360 டிகிரி கோணத்தில் அவை சுழன்று கண்காணித்தாலும் மோதிக் கொள்வதைத் தடுக்க முடியாது போலிருக்கிறது. பார்த்தசாரதிகளே பயங்கொள்ளும் பல படுபயங்கரமான சாலைகளில் பாதசாரதிகளின் பாடு சொல்லி முடியாது.

சுமார் 33 இலட்சம் கி.மீ. நீளத்திற்கு நீண்டு கிடந்து உலக அளவில் இரண்டாமிடத்தில் இந்தியச் சாலைகள் விளங்குகின்றன. நாட்டின் 65 சதவீத சரக்குப் போக்குவரத்தும் 80 சதவீத மக்கள் போக்குவரத்தும் சாலை வழியாகத்தான் நடைபெறுகின்றன. ஆனால், இதற்கு இணையாகச் சாலை விபத்துகளும் உயர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழகத்தில் மட்டும் இந்தியாவிலேயே அதிகமான சாலை விபத்துகள் நேரிடுகின்றன. 2013-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 14,504 விபத்துகளில் 15,563 பேர் உயிரிழந்து விட்டதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அது மட்டுமின்றி கடந்த 2002 2012 ஆகிய பத்தாண்டுகளில் இந்திய அளவில் அதிகமான சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள மாநிலமாகவும் தமிழகமே விளங்குகிறது.
ஆனால், 2007-இல் 82 லட்சமாக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை, 2012-இல் 1.6 கோடியாக உயர்ந்துள்ளது வியப்பினை ஏற்படுத்தவில்லை. இதுவே ஐந்தாண்டுகளுக்கு முன்பான கணக்குத்தானே. நடப்பாண்டின் புள்ளிவிவரங்கள் நமக்கு அச்சத்தையே ஏற்படுத்தலாம்.

ஒரு வீட்டுக்கு இருசக்கர வாகனம் ஒன்றே ஒன்று மட்டும் இருந்த காலங்கள் கடந்து போய், வளரும் நாகரிகச் சூழலில் மகிழுந்துகளே இரண்டு மூன்றாகி, இருசக்கர வாகனங்கள் ஆளுக்கொன்றாகி வீட்டின் முன்னே அணிவகுத்து நிற்கின்றன. இந்த வாகனப் பெருக்கத்துக்கு இணையாக என்னதான் சாலைகளை மேம்படுத்தினாலும் இடநெருக்கடி என்ற ஒன்று இருக்கிறதே.
நகரங்கள் பெருத்து வழிந்தது போதாதென்று வாகன நாகரிகச் சூழல் கிராமங்களையும் ஆட்கொண்டு விட்ட பிறகு கைகளை வீசிக்கொண்டு காலாற நடந்து போக இடமே இல்லை என்பது போலாகி விட்டது.

சாலைகளை விடவும் அதிகமான மக்கள் தொகைப் பெருக்கம் முண்டியடித்துக் கொள்வதைத் திருவிழாக்களிலும் பண்டிகைகளிலும் குடமுழுக்குகளிலும் பார்த்த காலம்போய் இப்போது தினம்தினம் அலுவலக நேரங்களில் ஒவ்வொரு சாலை முக்கியப் பகுதிகளிலும் காண முடிகிறது.
துர்நாற்றம், புகைக் காற்று, குண்டும் குழியுமான சாலைப் பள்ளங்கள், அலறும் ஒலிப்பான்கள் என எல்லாம் சூழ்ந்து கொள்ள சாலையைப் போர்க்களமாகத்தான் காட்சிப்படுத்துகின்றன. ஆங்காங்கே கண்காணித்துக் கொண்டிருக்கிற சிசிடிவி கேமராக்கள் படம்பிடித்துக் காட்டுகிற விபத்துகளின் கோரங்கள் நம்மைக் குலைபதற வைக்கின்றன.
முன்பெல்லாம் வாகனத்தை முறையாக ஓட்டக் கற்றுக் கொண்ட பின்னால்தான் அதைச் சொந்தமாக வாங்கத் துணிவார்கள். ஆனால், இப்போது நிலை வேறு; வாகனத்தை வாங்கிய பின்னரே அதைக் கற்றுக் கொள்ளத் தயாராகிறார்கள். அதுவும் இத்தனை அபாயகரமான சாலையில் கற்றுக் கொள்ளத் தொடங்குகின்றனர். இதற்கிடையில் துள்ளுகிற ரத்தம் கொண்ட இளவட்டங்கள் தங்கள் வேகத்தைக் காட்டச் சாலை பந்தயக் களமாகவும் மாறிப் போகிறது.

நன்றாக வாகனம் ஓட்டுபவர்கள் கூட அடுத்தவர்மீது இடித்துவிடாமல் கவனித்து ஓட்டிய காலம்போய் நம்மீது வந்து யாரும் இடித்து விடக் கூடாதே என்கிற எச்சரிக்கை உணர்வுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். முறையாகச் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டுமென்றால் மனுநீதிச் சோழனின் வழியைத்தான் பின்பற்றித் தண்டிக்க வேண்டியிருக்கும். சாலை விதியைச் சரியாகத் தன் மகன் மூலம் நாட்டுக்கே கற்பித்தவன் அவன்தான்.
ஒட்டுமொத்தமாகச் சாலை என்பது உயிர்ப்புடைய சமூகத்தின் அடையாளம். அதை முறையான விதிகளோடு பயன்படுத்தினால் நன்மை பெறலாம். விதிமுறைகளை மீறினால் அதே சாலைகள் போர்க்களமாகத்தான் காட்சியளிக்கக் கூடும்.

மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்காயும்...

By வெ. இன்சுவை | Published on : 15th February 2019 01:23 AM


நம்மை வளர்த்த தாய், தந்தையரே நமக்குப் பாரமா? பணம் இருப்பவன் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறான், இல்லாதவன் அடித்துத் துவைக்கிறான். ஆக இருவரும் ஒன்றுதான். முன்னதில் மனம் வலிக்கும், பின்னதில் உடல் வலிக்கும். 

குழந்தைகளே உலகம் என்று வாழ்ந்த தாய்-தந்தையரை முதுமையில் சில பிள்ளைகள் கவனிப்பது இல்லை. ஆனால், பிள்ளைகள் மீது பாசம் காட்டாமல் ஒதுக்கிய பெற்றோரைப் பின்னாளில் அந்தப் பிள்ளைகள் நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம். 

ஓய்வு பெறும் வயது 58 அல்லது 60 என்று அரசு நிர்ணயித்து பணியில் இருந்து விடுவித்து விடுகிறது. அதுவரை வேலை, குடும்பம் என்று ஓடி, ஓடிக் களைத்துப் போனவர்கள், இப்போதுதான் தன்னைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கிறார்கள். மேலும், குழந்தைகள், உறவுகள், குடும்பம் என தங்களைச் சுருக்கிக் கொண்டவர்கள் ஓய்வுக்குப் பின்தான் வெளி உலகைப் பார்க்கிறார்கள்; வேலையே சுவாசம் என்று இருந்தவர்கள், வேலைக்கு அப்பாற்பட்டும் வாழ்க்கை இருக்கிறது என்று உணர்கிறார்கள்; மேலதிகாரிக்குப் பயந்து பயந்து வாழ்ந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்; கடினமான பணியில் இருந்தவர்கள் எந்த வம்பு, வழக்கிலும் சிக்காமல் ஓய்வு பெற்றதை எண்ணி மகிழ்கிறார்கள்;

நேர்மையாக இருந்து உண்மையாக உழைத்தவர்கள் மன நிறைவு பெறுகிறார்கள்; தன் கீழ் வேலை செய்தவர்களை இரக்கம் இன்றி நடத்தி அதிகாரம் செய்தவர்கள், கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டிருக்கலாமோ என்று லேசாக வருத்தப்படுகிறார்கள்.
இப்படி கலந்து கட்டிய உணர்வுகளுடன் ஓய்வு பெற்ற பின் கடந்த காலத்தை அசை போட்டபடியே காலத்தைத் தள்ள பலரும் தயாராக இல்லை. குடும்பத்தின் பொருளாதார நிலையை இன்னும் கொஞ்சம் தூக்கிப் பிடிக்க சிலர் வேறு ஏதாவது வேலைக்குப் போகிறார்கள். 

இன்னும் சிலருக்கு பேரக் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டு விடும். குழந்தையின் பெற்றோர்கள் வேலைக்குப் போய்விட, தாத்தாவும், பாட்டியும் அல்லாடுவார்கள். பள்ளி நாள்களில் இவர்கள் விருப்பப்பட்டு எங்கும் போக முடியாது. மறுபடியும் செக்கு மாடு போல ஒரு வாழ்க்கை. பெண்களுக்கு மீண்டும் அடுப்படி வாசம்தான்.
ஒருசிலருக்கு எந்தவித குடும்ப பாரமும், பொறுப்பும் இருக்காது. பிடித்த இசை, நடைப்பயிற்சி, பிடித்த உணவு, நிம்மதியான தூக்கம், பரபரப்பில்லாத அமைதியான வாழ்க்கை, நண்பர்கள், உறவினர்கள், கோயில், விருந்து என வாழ்க்கையை ரசனையுடன் வாழ ஆரம்பிப்பார்கள். கையில் காசும், மனதில் நிம்மதியும், உடலில் தெம்பும் இருந்தால் அதுதானே சொர்க்கம்? வறுமை, நோய், பகை - இந்த மூன்றும் இல்லாமல் ஒரு புதிய வாழ்க்கையை ஓய்வுக்குப் பின் தொடங்குவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பும், புரிதலும் அதிகமாகும்.

இப்படி இயந்திரமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்பவர்கள் ஒரு சிலரே; மகனோ, மகளோ வெளிநாட்டில் இருந்தால் இவர்களும் சில காலம் அங்கு போய் அவர்களுடன் தங்கி விட்டு மகிழ்வுடன் ஊர் திரும்புகிறார்கள்.

அடுத்து, 70 வயது ஆன முதியவர்களுக்கு உடல் தளர்ந்து போய் விடுகிறது. கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்குப் பிரச்னை இல்லை. பெற்றோர்களை உயர்வாக மதித்து, அன்புடன் நடத்தும் மகள், மருமகள் வாய்க்கப் பெறுவதுதான் சிறந்த கொடுப்பினை. கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து இருந்தால் அதுவே அவர்களுக்குப் போதும். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக, அனுசரணையாக இருக்கிறார்கள். வேறு பேச்சுத் துணை தேட வேண்டிய அவசியம் இல்லை. மனைவி தவறிப் போய் கணவன் மட்டும் இருந்தால் தவித்துப் போய் விடுகிறார்கள். சட்டென ஒரு வெறுமை. தன் சுகதுக்கங்கள் அனைத்திலும் பங்கேற்று, மனக் காயங்களுக்கு மருந்தாக இருந்த அன்பு மனைவியைப் பிரிந்து வாழும் வாழ்க்கை கசந்து போகிறது. இன்னொரு கோப்பை தேநீர் வேண்டும் என மருமகளிடம் கேட்கத் தயக்கம்; பசித்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டிய பரிதாபம்; உணவு பிடிக்கவில்லை என்று சொல்ல பயம். தன் மனதைப் படித்து வைத்திருந்த அந்த ஒரு ஜீவனுடன் தன் வாழ்வும் முடிந்து விட்டதை அந்த முதியவர் உணரும் காலம் அது. 

இதுவே பெரியவர் இறந்து போய், பாட்டி மட்டும் உயிருடன் இருந்தால் அவர் எப்படியாவது தன் பொழுதை ஓட்டி விடுவார். வீட்டு வேலை,கோயிலுக்குச் செல்வது, பூஜை என்று நேரத்தைக் கழித்து விடுவார். கொஞ்சம் நம்பகமான ஆள் கிடைத்தால் தன் மனத்தாங்கலையும், குறைகளையும் கொட்டி விடுவார். பெண்களைப் போல ஆண்கள் யாரிடமும் குடும்ப விஷயத்தைப் பேச மாட்டார்கள். சக வயதை ஒத்தவர்களிடம் நாட்டு நடப்பைப் பற்றி அலசி ஆராய்வார்களேயொழிய வேறு எதைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். எனவே, ஆத்மார்த்தமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள மனைவி இல்லாததுதான் பெரிய மனக் குறையாக இருக்கிறது. ஆகவே, அவர்களை அப்படியே ஒதுக்கி விடாமல் வீட்டில் உள்ளவர்கள் அவர்களிடம் பேச வேண்டும். அவர்களைத் தனிமை வாட்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

70 வயதுக்கு மேல் உள்ள முதியோர் வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுடன் சில காலம், பின் தன் வீட்டில் தனியாக சில காலம் என்று காலம் தள்ளுகின்றனர். இப்படி ஆறு மாதங்கள் வெளி நாட்டில் இருந்து திரும்பிய ஒருவர். தன் வீட்டைத் திறந்த போது பெரும் அதிர்ச்சியடைந்தார். வீட்டின் அனைத்து அறைகளிலும் வெள்ள நீர் புகுந்து அனைத்துப் பொருள்களையும் பாழாக்கி இருந்தது. அதைச் சுத்தம் செய்வதற்குள் அவருக்கு விழி பிதுங்கி விட்டது. தான் ஊரில் இல்லாத போது தன் வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி அவர் யாரிடமும் சொல்லவில்லை.
 
அக்கம் பக்கத்தாருடன் அதிக ஒட்டுதல் கிடையாது.
இன்றைக்குத் தனியாக இருக்கும் முதியவர்களால் ஒருவரையும் நம்ப முடியவில்லை. எனவே, யாரிடமும் பழகாமல் உள்ளனர். சக மனிதர்களுக்கும், கொசுவுக்கும் ஒருசேர பயந்து ஜன்னல் கதவுகளை மூடியே வைத்திருக்கிறார்கள். ஓர் அவசரத் தேவைக்கு உதவ அவர்களுக்கு யாரும் இல்லை. ஏதாவது உதவி தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளா வந்து உதவ முடியும்? தனியாக இருப்பவர்களுக்கு அக்கம்பக்கத்தினர்தான் உறவுகள். அவர்களை நம்பாவிட்டால் எப்படி? அதே போல இளைஞர்களும் தங்கள் பகுதியில் தனியாக இருக்கும் முதியவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களுக்குச் சின்ன சின்ன உதவிகள் செய்யலாம்.இப்போது எல்லாம் இ-சேவைகளாகவே உள்ளதால் முதியவர்கள் தவித்துப் போகிறார்கள். படித்த இளைஞர்கள் அவர்களுக்கு இதுபோன்ற வேலைகளில் ஒத்தாசையாக இருக்கலாம். சும்மா இருக்கும்போது பெரியவர்களிடம் உட்கார்ந்து எதையாவது பேசிக் கொண்டிருக்கலாம். தனிமையில் இருப்பவர்களுக்கு இது பெரும் ஆறுதலாக இருக்கும். 

தற்போது கூட்டுக் குடும்பங்களில்கூட வயதானவர்களை மதித்து அவர்களிடம் உட்கார்ந்து யாரும் பேசுவது இல்லை. அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறார்கள். முதியவர்களின் மன வருத்தம் என்னவென்றால், வீட்டில் யாரும் தங்களை மதிப்பது இல்லை என்பதே.
எனவே, அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கிக் கொண்டிருக்கும் முதியவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. நம் நாட்டின் கூட்டுக் குடும்ப கலாசாரத்தையும், பண்பாட்டையும் நொறுக்கி விட்டதன் அடையாளச் சின்னங்கள் முதியோர் இல்லங்கள்; ஆதரவற்ற முதியவர்களுக்கான இல்லங்களாக மட்டும் அவை இருக்கட்டும்; பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட முதியவர்களின் அடைக்கலம் அல்ல அவை.

வசதியுள்ள, படித்த முதியோர் தங்களது தனிமையைப் பொருட்படுத்துவதில்லை. வாசிப்பை நேசிக்கும் அவர்கள் தங்கள் நேரத்தை மிக அற்புதமாகவும், பயனுள்ளதாகவும் செலவிடுகிறார்கள். தனிமையை நேசிக்கவும் கூடச் செய்கிறார்கள். ஆகவே, இவர்கள் யாரையும் சார்ந்து இருப்பதில்லை. நடுத்தரக் குடும்பத்து முதியவர்கள் மட்டுமே தவித்துப் போகிறார்கள். உடலுக்கு முடியாமல் படுத்துவிடக் கூடாது;
யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது; படுக்கையில் விழுந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் முழு நேரப் பிரார்த்தனையாக இருக்கிறது. ஏழையோ, பணக்காரரோ எல்லோருக்கும் மூப்பு வரும். முதுமை வரமாகவோ, சாபமாகவோ ஆவது, அவரவர் குடும்பப் பிண்ணனி மற்றும் பொருளாதார நிலைமையைச் சார்ந்தது. நோய் ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களிடம் தன்னம்பிக்கை அதிகம். அவர்களால் தனித்து வாழ முடியும். 

ஏழை முதியவர்கள் தனிமைப்படுத்தப்படுவதில்லை. அத்தகைய முதியோருக்கு சாப்பாடுதான் பிரச்னை; பொழுது நன்றாகப் போய்விடும். மேல்தட்டு முதியோர்களுக்குக்கூட கவலை இல்லை. பணம் பத்தும் செய்யும்.ஆனால், கௌரவம் பார்க்கும் நடுத்தர குடும்ப முதியோர்தான், ஒரு சின்ன வட்டத்துக்குள் தங்களை முடக்கிக் கொள்கிறார்கள். யாரிடமும் வலிந்து போய் உதவி கேட்கத் தயக்கம். மற்றவர்களுக்கு தான் பாரமோ என்ற சந்தேகம்.

ஆக, இவர்களுக்குத்தான் சமூக அக்கறை கொண்ட இளைய சமுதாயம் உதவ வேண்டும். வயதான பாட்டியிடமிருந்து இக்காலப் பெண்கள் சமையல், பூஜை நியதிகள், கை வைத்தியம் போன்ற பலவற்றைக் கேட்டு அறிந்து கொள்ளலாம். அவர்களின் அனுபவமும், அறிவும் இளைஞர்களை நன்கு செம்மைப்படுத்தும். மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்றார் ஒளவையார்; அது நூற்றுக்கு நூறு நிஜம்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

திருந்தி வாழ வாய்ப்பளிக்கலாமே!


By உதயை மு. வீரையன் | Published on : 16th February 2019 01:22 AM |

பெருமைமிக்கப் பெரியோர்களின் பிறப்பு மட்டுமல்ல, அவர்களின் இறப்பும்கூட கொண்டாடப் படுகின்றன. ஏனென்றால் அவர்கள் தங்களுக்காக வாழ்வதில்லை; மனித குலத்தின் உயர்வுக்காகவே வாழ்கின்றனர். மக்களுக்காக வாழ்கின்றவர்களை உலகம் எப்போதும் மறப்பதில்லை.

இந்த நாட்டில் மகான்களுக்கும், மகாத்மாக்களுக்கும், ஞானிகளுக்கும், மேதைகளுக்கும் குறைவில்லை. அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்; நமக்கெல்லாம் வழிகாட்டிகள்; அவர்களுக்கு மரணமில்லை; மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது அதுதான். அவர்களின் பிறந்தநாளை ஆண்டுதோறும் கொண்டாடுவது அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதற்காகவா? இல்லை; இதன் மூலம் நமக்கு நாமே புதுவாழ்வு பெறுகிறோம்; புத்துணர்ச்சி பெறுகிறோம்; நம்பிக்கையும், அடுத்தவர் நலனில் அக்கறையும் கொள்கிறோம்; மனித சமுதாயத்துக்கு நமது கடமையும் இருக்கிறது என்பதையும் நினைவுபடுத்திக் கொள்கிறோம். அந்த நாள்களில் ஏழைகளுக்கு உணவு, உடை அளிப்பது; ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வது; கவியரங்கம், கருத்தரங்கங்கள் நடத்துவது; போற்றிப் பாடல்கள் பாடுவது; இத்துடன் நீண்ட காலம் சிறையில் இருக்கும் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்வதும் வழக்கமாக இருக்கிறது.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் நூற்றாண்டு விழாத் தொடக்கத்தினை யொட்டி சிறையில் ஏழு ஆண்டுகள் கழித்த சிறைவாசிகள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்; ஆனாலும் ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனைக் காலம் அனுபவித்திருந்தும் சிலர் விடுவிக்கப்படவில்லை என்ற ஆதங்கமும் இருந்தது. இது பற்றிய ஆர்ப்பாட்டமும், முறையீடுகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை லீலாவதி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை கருணை அடிப்படையில் அன்றைய அரசு விடுவித்தது. இது தொடர்பாக சட்டப் பேரவையில் கேள்வி எழுந்தபோது, கருணையில் பாரபட்சமெல்லாம் இல்லை என்று அன்றைய முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் தண்டனைக் கைதிகளில் சுமார் 1,800 பேர் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவர் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தார். தண்டனை காலத்துக்கு முன்பே கைதிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை. அவரது ஒப்புதலின்படியே அனைத்துக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2000-ஆம் ஆண்டு தருமபுரி பேருந்து எரிப்பில் கோவை வேளாண்மை பல்கலைக் கழக மாணவியர் 3 பேர் எரிந்து சாம்பலாயினர். அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 3 பேரையும் விடுதலை செய்யக் கோரி அரசு சார்பில் ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அந்தப் பரிந்துரையை முதலில் ஆளுநர் நிராகரித்துவிட்டார். சில நாள்களுக்குப் பிறகு மறுபடியும் ஆளுநருக்கு தமிழக அரசு மனுச் செய்தது. அதில், பேருந்து எரிப்புச் சம்பவம் திட்டமிட்டு நடந்ததல்ல. உணர்ச்சி வசப்பட்டு நடந்தது என்பதால் நல்லெண்ண அடிப்படையில் 3 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆளுநர், 3 பேரின் விடுதலைக்கு ஒப்புதல் வழங்கினார். அதைத் தொடர்ந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரும் 18 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். நீண்ட நெடிய சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, ஏழு பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கும் அனுப்பியது. ஆனாலும், அவர்களை விடுதலை செய்ய இதுவரை ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை.

இந்தியாவில் மரண தண்டனைக்குள்ளாகி குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துவிட்டுக் காத்திருந்த 50 பேரின் சார்பாக கடந்த 2005 அக்டோபர் 17-ஆம் தேதியன்று அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

மரண தண்டனை சிறைவாசிகளை கருணை அடிப்படையில் பரிசீலனை செய்து, அவர்கள் வாழ வழி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இவர்களைச் சுமையாகக் கருதாமல் மனிதச் சொத்தாக மதித்து நல்வழிப்படுத்த ஆவன செய்ய வேண்டும். இனி இந்த உலகில் வாழும் எஞ்சிய காலத்தைத் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்... என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டார்.

தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு இருந்தபோதிலும் உள்துறை அமைச்சகம் செய்யும் பரிந்துரையின் அடிப்படையிலேயே அவர் முடிவெடுக்க முடியும். இதற்கு அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தலாம் என்றார்.

உலகில் யாரும் குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. வாழும் சூழ்நிலையும், வாய்ப்புகளுமே அவனைக் குற்றவாளியாக்குகின்றன என்பதே எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை. குற்றங்களின் தன்மைக்கேற்ப தண்டனையும் காலம் காலமாக இருந்து வருவதுதான். காலத்திற்கேற்பவும், ஒவ்வொரு நாட்டு சட்டதிட்டங்களுக்கேற்பவும் தண்டனை மாறுபடுகிறது. மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் யானையால் மிதித்தும், கழுவேற்றியும், கொலைவாளால் வெட்டியும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இப்போதும் சில அரபு நாடுகளில் மரண தண்டனைக் கைதிகளைப் பொது இடத்தில் நிறுத்தி பொதுமக்கள் கல்லால் அடித்துக் கொல்லும் முறையும், பொது இடத்தில் தூக்கில் போடும் முறையும் இருக்கிறது.

இந்திய தண்டனைச் சட்டத்தில் 8 குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தைத் தவிர, போதைப் பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் போதைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்குக் குறைந்தது 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். அவ்வாறு தண்டனை அனுபவித்தவர் மீண்டும் இந்தக் குற்றத்தைச் செய்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று அந்தச் சட்டம் கூறுகிறது.
மரண தண்டனை விதிப்பது அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 14, 19 மற்றும் 21 ஆகியவற்றை மீறிய செயலாகாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பும் கூறியுள்ளது. அத்துடன் இது பன்னாட்டு உடன்படிக்கையை மீறிய செயலாகாது.

உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின்படி, ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகளோடு முடியாது. ஆயுளின் இறுதிவரை தண்டனைதான் என்று கூறியுள்ளது. அப்படியானால் தூக்குத் தண்டனை தேவையில்லை என்றாகிறது. தூக்குத் தண்டனையின் நோக்கம் குற்றவாளி உலகில் நடமாடக் கூடாது என்பதுதான்; ஆயுள் முழுவதும் சிறையில் கிடக்கும்போது, குற்றவாளிக்கு அந்தத் தண்டனையே போதும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நாகரிக காலத்தில் பழைமையான சட்டங்கள் நடைமுறையில் இருக்கலாமா? பல்லுக்கு பல், கண்ணுக்குக் கண் என்பது பழங்காலச் சட்டம். வீட்டைக் கொளுத்தியவனுக்குத் தண்டனை, அவன் வீட்டைக் கொளுத்துவது என்று இப்போது சட்டம் இல்லை. அதே போன்று உயிருக்குப் பதில் உயிர் என்னும் மரண தண்டனை இருக்கலாமா?

இந்த விவாதம் பல ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மனித உயிர்களுக்கு எதிரான மரண தண்டனையை அறவே ஒழித்துவிட வேண்டும் என உலக நாடுகளுக்கு பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனத்தின் பொன்விழாவில் ஐ.நா. பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோளை ஏற்று பல உலக நாடுகள் மரண தண்டனையை விலக்கிக் கொண்டுள்ளன. தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்தியடிகள் பிறந்து, வாழ்ந்து, உபதேசித்த நாடு; அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே!

இங்கே தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளைவிட விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகம். எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படாத நிலையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பது என்ன நியாயம்? இது பற்றி நீதிபதிகளே பலமுறை தங்கள் வருத்தங்களைத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்னையை அரசியல் கலக்காமல் மனிதநேயத்துடன் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு ஞானிக்கும் ஓர் இறந்த காலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஓர் எதிர்காலம் உண்டு என்றார் ஆஸ்கார் ஒயில்டு. இதை, சட்டத்தின் ஆட்சி என்பது ஞானிகள், பாவிகள் ஆகிய இருவருக்குமானது என்று தன் தீர்ப்பு ஒன்றில் வி.ஆர்.கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தவறு செய்பவர்கள் திருந்தி வாழ்வதற்கே அரசும், சட்டங்களும் வழிகாட்ட வேண்டும். சீர்திருத்தச் சாலைகளாக சிறைகள் இருக்க வேண்டுமே தவிர, சித்திரவதைக் கூடங்களாகச் செயல்படக் கூடாது. திருந்தி வாழ்வதற்கான தீர்ப்புகளாக தண்டனைகள் இருக்க வேண்டும்; ஒழித்துக் கட்டும் ஒருவழிப் பாதையாய் இருக்கக் கூடாது.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

ஆளுநராக கிரண் பேடி ஒரு நிமிடம்கூட நீடிக்கக் கூடாது: புதுவை முதல்வர் நாராயணசாமி

By DIN | Published on : 17th February 2019 12:55 AM




மக்களுக்கு எதிராகச் செயல்படும் கிரண் பேடி, புதுவை துணைநிலை ஆளுநராக ஒரு நிமிடம் கூட நீடிக்கக் கூடாது என முதல்வர் நாராயணசாமி கூறினார்.

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை எதிரே நடத்தி வரும் தர்னா 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

புதுவையில் மக்கள் நலத் திட்டங்களை ஆளுநர் கிரண் பேடி முடக்குகிறார். தொடர்ந்து, மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தில் தலையிடுகிறார். மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் உடனே கையெழுத்திட வேண்டும். கிரண் பேடியைத் திரும்பப் பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இதேபோல, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் கடிதம் எழுதியுள்ளேன். அவர், தனது அரசியல் ஆலோசகர் வேணுகோபால், கட்சியின் புதுவை மாநிலப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொருளாளர் அமல்பந்தல் ஆகியோரை அழைத்துப் பேசி, நான் கடிதத்தில் குறிப்பிட்டபடி மத்திய உள்துறை அமைச்சரை, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சந்தித்து, புதுவையின் நிலையை விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன்.
குறிப்பாக, மக்கள் நலத் திட்டங்களை கிரண் பேடி தடுக்கக் கூடாது. விரைந்து ஒப்புதல் அளிக்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துவர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில், புதுவை மாநிலத்தைப் புறக்கணித்து, மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்காமல் இங்கிருந்து ஆளுநர் வெளியேறிச் சென்றுள்ளார். ஆகவே, இடைக்கால ஆளுநரை நியமித்து கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் கடிதம் எழுதியுள்ளார். அதை முழுமையாக ஆதரிக்கிறேன்.

இது புதுவை மாநில மக்களின் போராட்டம். எனவே, என்னைக் கைது செய்தால் மகிழ்ச்சியாக வரவேற்பேன். பாஜகவுக்கு எங்களைக் கைது செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை.
மத்திய அரசிடமிருந்து யாரும் என்னிடம் பேசவில்லை. ஆளுநர் கிரண் பேடி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. போராட்டம் காரணமாக அரசுப் பணிகள் பாதிக்கப்படவில்லை.
இனியும் கிரண் பேடி ஒரு நிமிடம்கூட இங்கு பதவியில் நீடிக்கக் கூடாது என்பது புதுவை மக்களின் ஒட்டுமொத்த எண்ணமாக உள்ளது என்றார் அவர்.

40-க்கும் மேற்பட்ட நாடுகள் கண்டனம்

By DIN | Published on : 17th February 2019 02:27 AM

புல்வாமா தற்கொலைத் தாக்குதலுக்கு 40-க்கும் மேற்பட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு அந்த நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.
ஐ.நா., ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஐரோப்பிய யூனியன் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பூடான், நேபாளம், மாலத்தீவு, மோரீஷஸ், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதேபோல், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இஸ்ரேல், துருக்கி, சவூதி அரேபியா, ஜெர்மனி, ரஷியா, ஆஸ்திரேலியா, ஈரான், பஹ்ரைன், இந்தோனேசியா, சிங்கப்பூர், இத்தாலி, ஸ்பெயின், செக் குடியரசு, துருக்கி, பிரிட்டன், ருமேனியா, எஸ்டோனியா, லெபனான், போர்ச்சுகல், பெல்ஜியம், பின்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், தென் ஆப்பிரிக்கா, டோமினிக் குடியரசு, கனடா, மெக்ஸிகோ, செஷல்ஸ், கிரீஸ், தென்கொரியா, குரோஷியா, இஸ்ரேல், ஜப்பான், அண்டோரா, நெதர்லாந்து, தஜிகிஸ்தான், பல்கேரியா உள்ளிட்ட நட்பு நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
மதம் மாறினார் டி.ராஜேந்தர் மகன்

Added : பிப் 16, 2019 23:51 |

சென்னை, டி.ராஜேந்தரின் இளைய மகனும், இசை அமைப்பாளருமான குறளரசன், இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.சென்னையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், பெற்றோர் டி.ராஜேந்தர் - உஷா முன்னிலையில், குறளரசன், இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.குழந்தை நட்சத்திரமாக, சினிமாவில் அறிமுகமான குறளரசன், தன் அண்ணன் சிம்பு நடித்த, இது நம்மஆளு படத்தில், இசையமைப்பாளராக பணியாற்றினார். தற்போது, ஹிந்தி படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.மகன் மதம் மாறியது குறித்து, ராஜேந்தர் கூறுகையில், ''எம்மதமும் சம்மதம் என்ற, கொள்கையுடன் வாழ்பவன் நான். சிம்பு, சிவ பக்தர். மகள் இலக்கியா, கிறிஸ்தவ மதத்தையும், இளைய மகன் குறளரசன், இஸ்லாம் மதத்தையும் பின்பற்றுகின்றனர்,'' என்றார்.
தனியார் மருத்துவமனைகளுக்கு சிறப்பு மின் கட்டணம் கோரி மனு

Added : பிப் 16, 2019 23:16

சென்னை, தனியார் மருத்துவமனைகளுக்கு, மின் கட்டணத்தை குறைத்து, சிறப்பு கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.தனியார் மருத்துவமனைகள் சங்கம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு:வர்த்தக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் மின் கட்டணமே, தனியார் மருத்துவமனைகளுக்கும் விதிக்கப்படுகிறது. தரமான மருத்துவ சேவைக்காக, நவீன வகையிலான உபகரணங்களை பயன்படுத்துகிறோம். அதற்கு, அதிக அளவில் மின்சாரம் செலவாகிறது.தியேட்டர்கள், தொழிற்சாலைகள், ஓட்டல்களுக்கு விதிக்கப்படும் வர்த்தக கட்டணம் போல, மருத்துவமனைகளுக்கும் விதிக்கப்படுகிறது. இதனால், நோயாளிகளின் சிகிச்சை கட்டணம் அதிகரிக்கிறது.வர்த்தக நிறுவனங்களுக்கான கட்டணம் போல அல்லாமல், மருத்துவமனைகளுக்கான மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்.கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில், தனியார் மருத்துவமனைகளுக்கு, வர்த்தக கட்டணம் வசூலிக்காமல், சிறப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறப்பு கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி, டி.ராஜா முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...