Sunday, February 17, 2019


ஆளுநராக கிரண் பேடி ஒரு நிமிடம்கூட நீடிக்கக் கூடாது: புதுவை முதல்வர் நாராயணசாமி

By DIN | Published on : 17th February 2019 12:55 AM




மக்களுக்கு எதிராகச் செயல்படும் கிரண் பேடி, புதுவை துணைநிலை ஆளுநராக ஒரு நிமிடம் கூட நீடிக்கக் கூடாது என முதல்வர் நாராயணசாமி கூறினார்.

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை எதிரே நடத்தி வரும் தர்னா 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

புதுவையில் மக்கள் நலத் திட்டங்களை ஆளுநர் கிரண் பேடி முடக்குகிறார். தொடர்ந்து, மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தில் தலையிடுகிறார். மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் உடனே கையெழுத்திட வேண்டும். கிரண் பேடியைத் திரும்பப் பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இதேபோல, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் கடிதம் எழுதியுள்ளேன். அவர், தனது அரசியல் ஆலோசகர் வேணுகோபால், கட்சியின் புதுவை மாநிலப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொருளாளர் அமல்பந்தல் ஆகியோரை அழைத்துப் பேசி, நான் கடிதத்தில் குறிப்பிட்டபடி மத்திய உள்துறை அமைச்சரை, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சந்தித்து, புதுவையின் நிலையை விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன்.
குறிப்பாக, மக்கள் நலத் திட்டங்களை கிரண் பேடி தடுக்கக் கூடாது. விரைந்து ஒப்புதல் அளிக்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துவர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில், புதுவை மாநிலத்தைப் புறக்கணித்து, மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்காமல் இங்கிருந்து ஆளுநர் வெளியேறிச் சென்றுள்ளார். ஆகவே, இடைக்கால ஆளுநரை நியமித்து கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் கடிதம் எழுதியுள்ளார். அதை முழுமையாக ஆதரிக்கிறேன்.

இது புதுவை மாநில மக்களின் போராட்டம். எனவே, என்னைக் கைது செய்தால் மகிழ்ச்சியாக வரவேற்பேன். பாஜகவுக்கு எங்களைக் கைது செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை.
மத்திய அரசிடமிருந்து யாரும் என்னிடம் பேசவில்லை. ஆளுநர் கிரண் பேடி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. போராட்டம் காரணமாக அரசுப் பணிகள் பாதிக்கப்படவில்லை.
இனியும் கிரண் பேடி ஒரு நிமிடம்கூட இங்கு பதவியில் நீடிக்கக் கூடாது என்பது புதுவை மக்களின் ஒட்டுமொத்த எண்ணமாக உள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024