Tuesday, March 19, 2019


ஆசிட் வீசுவோருக்கு கருணை காட்டக் கூடாது: சுப்ரீம் கோர்ட்

Updated : மார் 19, 2019 05:39 | Added : மார் 19, 2019 05:34

புதுடில்லி: 'ஆசிட் வீசி தாக்குவது என்பது, நாகரிகமற்றவர்கள் செய்யும் கொடூர குற்றம். இந்த குற்றம் செய்வோருக்கு கருணை காட்டக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த, 19 வயது இளம்பெண் மீது, ஆசிட் வீசியது தொடர்பான வழக்கில், கீழ் கோர்ட்டில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு, தலா, 10 ஆண்டுகள் சிறை, தலா, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது.

ரூ.25 ஆயிரம்:

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த, ஹிமாச்சல் உயர் நீதிமன்றம், தண்டனை காலத்தை ஐந்து ஆண்டுகளாக குறைத்து, அபராதத் தொகையை, தலா, 25 ஆயிரமாக உயர்த்தி, தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, ஹிமாச்சலப் பிரதேச அரசு தொடர்ந்த வழக்கை, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், அஜய் ரஸ்தோகி அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில், அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது: ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் அடையும் மனவேதனையை, இழப்பீடு மற்றும் தண்டனை வழங்குவதால், ஈடுசெய்ய முடியாது.அதே நேரத்தில், இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கருணை காட்டக் கூடாது; இது, நாகரிகமற்ற, இதயமல்லாதவர்கள் செய்யும் கொடூர குற்றமாகவே பார்க்கப்பட வேண்டும்.

இந்த வழக்கில், உயர் நீதிமன்றம் உறுதி செய்த, ஐந்து ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்ததால், குற்றவாளிகள் இருவரும், கடந்தாண்டு டிசம்பரில், சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதனால், அவர்களது தண்டனை குறித்து விவாதிக்க வேண்டியதில்லை.

ரூ.1.50 லட்சம்:

அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மனவேதனையை உணர வேண்டும். இந்த இருவரும், அந்த பெண்ணுக்கு, தலா, 1.50 லட்சம் ரூபாயை, கூடுதல் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீட்டு தொகையை, ஹிமாச்சலப் பிரதேச அரசும் வழங்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 01.10.2024