Sunday, October 20, 2019

குண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற 1000 ஆண்டுகள் ஆகும்: நீதிபதிகள் கோபம்




சென்னை

குண்டுங்குழியுமான சாலைகள் குறித்து விமர்சித்துள்ள உயர் நீதிமன்றம், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டதுடன், சேதமடைந்த சாலைகள் செப்பனிட்டது குறித்த தகவல்களையும் சேர்த்து நவம்பர் 18-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


சென்னையில் மழைக்காலங்களில் சாலையில் தேங்கும் தண்ணீர் மழை நீர் வடிகால் வழியே செல்ல சாலையோரங்களில் மழை நீர் வடிகால் அமைக்கப்படுகிறது. ஆனால் இவை தூர்வாரப்படாமல், வருடம் முழுதும் மழை நீர் வடிகால் அமைக்கப்படுகிறது என பல கோடி செலவழிக்கப்படுகிறது. மழை நீர் வடிகால் சரிவர இல்லாததால் மழை நீர் சாலையில் தேங்குவது பெரிய பிரச்சினையாக உள்ளது.




இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 2015-ல் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு மீண்டும் ஏற்படாது, 80 சதவீத மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுவிட்டது என சென்னை மாநகராட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்தது. இது குறித்த தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே சாலையில் கேபிள் பதிக்கும் தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி பழையபடி சாலை அமைப்பதில்லை என ஜெபமணி ஜனதா கட்சியின் பொது செயலாளரும், ராஜிவ்காந்தி கொலை வழக்கின் சிபிஐ விசாரணையில் இடம்பெற்றிருந்த ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளருமான மோகன்ராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், “ரிலையன்ஸ், ஏர்டெல், வேல்ட்டெல் (worldtel) நிறுவனங்களால் 2001 முதல் சென்னையில் தோண்டப்பட்ட சாலைகள் முழுமையாக சீரமைத்து தராததால், பள்ளத்தில் விழுந்தும், அதில் தேங்கிய நீரில் சிக்கியும் பலர் காயமடைந்தும், சிலர் மரணமடைந்துள்ளனர். ஆனால் அது தொடர்பாக எஸ்பிளானேடு, மயிலாப்பூர் காவல் நிலையங்களில் அளித்த புகார்களில் இதுவரை போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.




தொலைப்பேசி இணைப்புகளுக்காக சாலையை தோண்டிவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவராதது குறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்க தமிழக உள்துறை செயலாளருக்கும், சென்னை காவல் ஆணையருக்கும் உத்தரவிட வேண்டும்”. எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், ஏற்கனவே மோசமான சாலைகளை கண்டறியவும், மழைநீர் வடிகால் கட்டமைப்பை ஆராயவும் இரண்டு வெவ்வேறு வழக்கறிஞர்களை ஆணையர்களாக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் மோசமான நிலையிலேயே பராமரிக்கப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், “தற்போதைய பருவமழை காலம் முடியும் வரை சாலைகள் செப்பனிடப்போவதில்லை. இதேநிலையில் போனால் தற்போதைய சிங்கப்பூரைப் போல சென்னை மாறுவதற்கு 1000 ஆண்டுகள் ஆகும், ஆனால் அப்போது சிங்கப்பூர் 10000 ஆண்டுகள் முன்னோக்கி சென்றுவிடும்.




மோசமான தரத்துடன் சாலைகள் அமைக்கப்படுவதும், அப்படிப்பட்ட ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காததுமே இப்படிப்பட்ட மோசமான சாலைகள் அமைவதற்கு காரணம். சென்னையில் கழிவுநீர் கால்வாய்களுக்கான வழிகள் சாலையின் ஓரத்தில் அமைக்கப்படாமல், ஏன் சாலையில் நடுவிலேயே அமைக்கப்படுகிறது.

நீதிமன்றம் கேள்வி கேட்காதவரை அரசு அதிகாரிகளுக்கு இதுகுறித்த கடமையுணர்ச்சியோ, பொறுப்புணர்வோ ஏற்படுவது இல்லை. சட்டவிரோத பேனர் காரணமாக சிலர் இறக்கின்றனர். சாலைகளின் நடுவில் உள்ள குழிகள் காரணமாக சிலர் இறக்கின்றனர். ஆனால் இதைப்பற்றியெல்லாம் அதிகாரிகள் கவலைப்படுவதாக தெரியவில்லை”. எனத்தெரிவித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வு, மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டதுடன், சேதமடைந்த சாலைகள் செப்பனிட்டது குறித்தும் நவம்பர் 18-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024