Sunday, October 20, 2019

மக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும் இல்லையேல் நான் மாவட்டத்தை விட்டுப் போக வேண்டும்: அதிகாரிகளை எச்சரித்த மாவட்ட ஆட்சியர் 




திருவண்ணாமலை

மக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்கு போகணும் அல்லது நான் இந்த மாவட்டத்தைவிட்டு போகணும்... என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வாட்ஸ் அப்பில் எச்சரித்துள்ளார்.


திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி பரபரப்பில்லாமல் இயங்கக்கூடிய நேர்மையான ஆட்சியர்களில் ஒருவர். தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகக் கந்தசாமி பொறுப்பேற்றது முதல் பல்வேறு துரித நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். குறிப்பாக பெண் குழந்தைகளின் நலனில், கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறார்.ஏழை மக்களுக்கான சேவை செய்யும் பணியாக அரசு அதிகாரத்தை பயன்படுத்துகிறார்.




முக்கியமாக காட்சிக்கு எளியவராக, சாமானிய மக்கள் எளிதில் அணுகி குறையைச் சொல்லும் வகையில் நடந்துக்கொள்கிறார். கடந்த ஆண்டு ஆரணி அருகேயுள்ள கணிக்கிழுப்பை கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற இளம் பெண்ணின் தாயார் இறந்து போக கல்லூரியில் முதலாண்டு படிப்புக்காக உதவி கேட்கும் நிலையில் உள்ள சகோதரி, 9-ம் வகுப்பு படிக்கும் சகோதரனுடன் பாட்டியின் தயவில் வாழ அவரும் இறந்துப்போனார்.

தனது நிலை குறித்து ஆட்சியரிடம் மனு அளித்த ஆனந்தி தனது பணிபுரிந்த சத்துணவு மையத்தில் வேலை கிடைக்க ஆவன செய்யக் கேட்க அவருக்கு 19 வயதே ஆன நிலையில் அரசு வேலைக்கு வாய்ப்பில்லாத நிலையிலும் அவருக்காக தலைமைச் செயலரிடம் பேசி அனுமதி வாங்கி அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்தார்.



அரசு ஆணையுடன் அவரது வீட்டுக்குச் சென்ற அவர் தனது செலவில் அவர்களுக்கு மதிய உணவு அளித்து அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். அவர்களுக்கு வீடு இல்லாததை அறிந்து தேசிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கிடைக்க உத்தரவிட்டார். தங்கையை கல்லூரியில் சேர்க்கவும், தம்பியின் படிப்பு இரண்டுக்கும் உதவுவதாக சொன்னவர் சிறுவனுக்கு சைக்கிள் ஒன்றை அளித்தார்.




பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும், சாதாரண மக்களுக்கு அரசாங்கத்தின் திட்டங்கள் சென்று சேரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். இதனால் தேசியப் பெண் குழந்தைகள் தினத்தன்று, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மாவட்டத்துக்கான விருதை கடந்த ஆண்டு திருவண்ணாமலை பெற்றது.

சமீபத்தில் ஒரு பள்ளியில் மாணவி ஒருவர் பிளஸ் 1-ல் நல்ல மதிப்பெண் எடுத்து ஆட்சியர் கையால் பரிசுப்பெற உன் லட்சியம் என்ன என்று கேட்டபோது உங்களைப்போல் ஆட்சியர் ஆகவேண்டும் என மாணவிச் சொல்ல அவரை அழைத்து தனது காரின் தனது சீட்டில் அமரவைத்து தான் கீழே நின்றபடி போட்டோ எடுத்து மாணவியிடம் அளித்து இதைப்பார்க்கும்போதெல்லாம் ஆட்சியர் ஆகும் உன் லட்சியம் வலுப்பெறணும் என்று வாழ்த்தினார்.




வாரந்தோறும் அரசுப்பள்ளிகளுக்கு சென்று பேசுவது, வாழ்த்துவது என சாமானிய மக்களின்மீது அக்கறைக்கொண்ட ஆட்சியருக்கு சாதாரண மக்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்க அதிகாரிகள் தடையாக இருப்பது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு பயனாளிகளை தேர்வு செய்யாமல் இருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தொடர்ச்சியாக அலட்சியமாக இருப்பது ஆட்சியரை கோபப்படுத்தியுள்ளது. அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ் அப் குழுவில் அவர் கடுமையாக எச்சரித்து பேசிய ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அவரது பேச்சு விபரம்:

“அனைவருக்கும் வணக்கம் நான் ஆட்சியர் பேசுகிறேன், ஏற்கெனவே கடந்த மீட்டிங்கில் பசுமை வீடு திட்டம் மற்ற திட்டங்கள் மிகவும் தொய்வாக இருக்கிறது என்று பேசினோம். அரசும் கேள்வி எழுப்புகிறார்கள். நாங்க பதில் சொல்கிறோம்.


வீடு பற்றி நாம் கடந்தமுறை விரிவாக பேசியபோது இதுகுறித்து அதிக முக்கியத்துவம் குறித்து விவாதித்தோம். நாம் வீடுகட்டும் திட்டம் குறித்து அதிக அக்கறைக்காட்டவேண்டும்.

நமது கையில் உள்ள டேட்டாக்கள் தகுதியுள்ள பயனாளிகள் எண்ணிக்கை, வீடு கையில் வைத்துள்ளோம். ஆனால் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. நிறைய புகார்கள் நமக்கு வந்துக்கொண்டிருக்கிறது. இன்றுகூட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அது சம்பந்தமான குறைகள் வந்தது.

திங்கட்கிழமை உங்களுக்கு உச்சக்கட்டம், ஒன்று நான் இந்த மாவட்டத்தில் இருக்கிறேனா? அல்லது நீங்கள் பணியில் இருக்கிறீர்களா? என்பதை நீங்களே முடிவு பண்ணிக்கங்க.

திங்கட்கிழமை எங்கேயாவது ஒரு பஞ்சாயத்து செயலரோ? அது சம்பந்தப்பட்ட பிடிஓ அல்லது டெபுடி பிடிஓ யாராக இருந்தாலும்சரி. திங்கட்கிழமைக்குள் அனைவருக்கும் வீடு ஒதுக்கப்படாவிட்டால் அன்று எத்தனைப்பேரை வேண்டுமானாலும் சஸ்பெண்ட் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், எப்படி செயல்படுத்துகிறீர்களோ செய்யுங்கள். திங்கட்கிழமை இந்த யுத்தத்தை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். நான் உறுதியாக இதைச் சொல்கிறேன். என்னுடைய பொறுமையை முற்றிலும் இழந்துவிட்டேன்.

நீங்கள் தவறு செய்வதை பார்த்துக்கொண்டிருக்க நான் இங்கு பணிக்கு வரவில்லை.தப்புசெய்வதை பார்த்துக்கொண்டு காவல்காப்பவன் நான் அல்ல. தப்பை சரி செய்ய வந்துள்ளேன். இது என்னுடைய உச்சக்கட்ட கோபம். அனைத்து பிடிஓவும், பஞ்சாயத்து செயலர்களும் இதை கவனத்துடன் அணுகி முடிக்கவேண்டும்.

திங்கட்கிழமை காலையில் வேலைக்கு வந்துவிட்டு பின்னர் மாலையில் நீங்கள் அனைவரும் வேலையுடன் செல்கிறீர்களா? இல்லை வேலை இல்லாமல் போகிறீ்ர்களா? என்பதை முடிவு செய்துக்கொள்ளுங்கள். இந்த சவாலை சந்திக்க நான் தயாராகிவிட்டேன்”.

இவ்வாறு திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி கோபமாக பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024