Monday, October 7, 2019

பள்ளி மாணவியை கடத்தி தாயாக்கி குழந்தையுடன் வந்த வாலிபர் கைது

Added : அக் 06, 2019 21:47

தஞ்சாவூர் : கல்லுாரியில் சேர்ப்பதாகக் கூறி, மாணவியை அழைத்துச் சென்றவர், ஓராண்டுக்கு பின், கையில் குழந்தையுடன் மாணவியை அழைத்து வந்ததால், கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர், கும்பகோணம் அடுத்த பந்தநல்லுாரைச் சேர்ந்தவர் கமலேஷ், 23. ஓராண்டுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த, 17 வயதான பிளஸ் 2 மாணவி ஒருவரை, கல்லுாரியில் சேர்த்து விடுவதாக கூறி, மதிப்பெண் சான்றிதழ், டி.சி., ஆகியவற்றை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.மாணவியும், கமலேஷ் சொன்னது போல் எடுத்து வந்துள்ளார். இதையடுத்து, மாணவியை கமலேஷ் கடத்திச் சென்றுள்ளார். மாணவியின் பெற்றோர், பந்தநல்லுார் போலீசில் புகார் அளித்தனர். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

ஓராண்டு கழித்து, கடந்த வாரம், கமலேஷ், மாணவி மற்றும் பெண் குழந்தையுடன், ஊருக்கு வந்துள்ளார். மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பந்தநல்லுார் போலீசார், கமலேஷை பிடித்து விசாரித்தனர். மாணவியை ஆசை வார்த்தை கூறி, கோபிசெட்டிப் பாளையத்துக்கு கமலேஷ் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, சாலையோரத்தில் வசிப்பவர்களுடன் தங்க வைத்து, மாணவியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.இதில் கர்ப்பமான மாணவி, மூன்று மாதங்களுக்கு முன், குழந்தை பெற்றுள்ளார். மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரை சொந்த ஊருக்கு கமலேஷ் அழைத்து வந்துள்ளார்.இதையடுத்து, கமலேஷை போலீசார் நேற்று கைது செய்தனர். மாணவியையும், குழந்தையையும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024