Wednesday, October 16, 2019

'மாஜி' அமைச்சரின் கல்லுாரி ரூ.110 கோடி கடனுக்காக ஏலம்

Added : அக் 16, 2019 03:57


திருச்சி:முன்னாள் அமைச்சர்நேரு குடும்பத்திற்கு சொந்தமான இன்ஜி., கல்லுாரி, பள்ளி உட்பட, 80 ஏக்கர் நிலம், 110 கோடி ரூபாய் கடனுக்காக, 14ல் ஏலத்துக்கு வர உள்ளது.

தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் நேருவின் தந்தை, நாராயணன் பெயரில், கல்வி அறக்கட்டளை உள்ளது. நேருவின் குடும்பத்தினர், அறக்கட்டளை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கல்வி அறக்கட்டளை சார்பில், திருச்சி, சோழன்நகரில், 80 ஏக்கர் பரப்பில், 'கேர்' இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் பள்ளி செயல்பட்டு வருகிறது.

மேற்கண்ட நிலம் மற்றும் கட்டடங்களை அடமானமாக வைத்து, நாராயணன் அறக்கட்டளை சார்பில், கண்டோன்மெண்ட் இந்தியன் வங்கியில், சில ஆண்டுகளுக்கு முன் கடன் வாங்கப் பட்டுள்ளது.ஆனால் நேரு குடும்பத்தினர், கடனை செலுத்தவில்லை என்பதால், கடந்த ஆண்டு, வங்கி நிர்வாகம், அடமானம் வைத்த இடத்தையும், கட்டடங்களையும், தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

அசலுடன், வட்டியுடன் சேர்த்து, தற்போது, 110 கோடி ரூபாயை, வங்கிக்கு செலுத்த வேண்டும். கடனை செலுத்தாததால், மேற்கண்ட சொத்தை ஏலம் விட, இந்தியன் வங்கி முடிவு செய்து உள்ளது. அதன்படி, நவம்பர், 14ல், கேர் கல்லுாரி, பள்ளி செயல்பட்டு வரும் கட்டடங்கள் மற்றும் இடம் ஏலம் விடப்படும் என, இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.நேரு குடும்பத்திற்கு சொந்தமான கல்லுாரி மற்றும் பள்ளி ஏலத்துக்கு வருவது, தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024