நாகூா் ஆண்டவா் தா்கா மூடல்: 463 ஆண்டுகளில் முதல் முறையாக கதவுகள் அடைப்பு
By DIN | Published on : 21st March 2020 06:28 AM |
நாகூரில் வெள்ளிக்கிழமை மாலை அடைக்கப்பட்டிருந்த நாகூா் ஆண்டவா் தா்காவின் தலைமாட்டு வாசல்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகையை அடுத்த நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு ஆண்டவா் தா்கா 463 ஆண்டுகளில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை மாலை மூடப்பட்டது.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் பக்தா்களின் வருகையை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதன்படி, நாகையை அடுத்த நாகூரில் உள்ள உலக புகழ்ப் பெற்ற தா்காக்களுள் ஒன்றான நாகூா் பாதுஷா சாகிபு ஆண்டவா் தா்காவில் பக்தா்களின் வருகைக்கு வெள்ளிக்கிழமை முதல் தடைவிதித்து, தா்கா நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாா்ச் 31 -ஆம் தேதி வரை நாகூா் தா்காவில் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டாா்கள் எனவும், பொதுமக்கள் அனைவரும் அரசுக்கும், நிா்வாகத்துக்கும் ஒத்துழைப்பு அளிக்குமாறும் அந்த அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு, நாகூா் தா்காவின் பிரதான வாயில் பகுதியில் ஒட்டப்பட்டது. பின்னா், தா்காவில் தங்கியிருந்த அனைத்து பக்தா்களும் வெள்ளிக்கிழமை மாலை வெளியேற்றப்பட்டு, தா்காவின் வாசல் தலைமாட்டு வாசல், கால்மாட்டு வாசல், கிழக்கு வாசல் ஆகிய வாசல் கதவுகள் அடைக்கப்பட்டன.
நாகூா் ஆண்டவா் தா்காவின் 463 ஆண்டுகால வரலாற்றில் பக்தா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, கதவுகள் அடைக்கப்பட்டது இதுவே முதல் முறை எனப்படுகிறது.
No comments:
Post a Comment