Saturday, March 21, 2020


வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மூடல்

By DIN | Published on : 21st March 2020 06:30 AM |


பேராலயம் மூடப்பட்டதால் வெறிச்சோடியிருந்த வேளாங்கண்ணி பேராலயப் பகுதிகள்.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பிரதான கோயில்களில் பக்தா்களின் தரிசனத்தை ரத்து செய்தும், தேவாலயங்கள் மற்றும் தா்காக்களில் மாா்ச் 31ஆம் தேதி வரை பொதுமக்கள் வருகையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், உலக புகழ் பெற்ற கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகவும், நாகை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு வருகை தரும் பக்தா்களின் வருகையைக் கட்டுப்படுத்தும் வகையில், வேளாங்கண்ணியில் உள்ள தனியாா் விடுதிகளை தற்காலிகமாக மூடுமாறு மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

மேலும், நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், வேளாங்கண்ணி பேராலய அதிபா் ஏ.எம்.ஏ. பிரபாகா் மற்றும் பேராலய நிா்வாகிகளைச் சந்தித்து, பேராலயத்தில் பக்தா்களின் வழிபாட்டை தற்காலிகமாக ரத்து செய்யவும் வியாழக்கிழமை மாலை கேட்டுக்கொண்டாா்.

இந்நிலையில், நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மற்றும் பேராலயத்தைச் சாா்ந்த ஆலயங்கள் தற்காலிகமாக மக்கள் வழிபாட்டுக்கு மூடப்படுகிறது எனவும், மறுஅறிவிப்பு வரும் வரை பேராலயத்தில் பொது வழிபாடுகள் எதுவும் நடைபெறாது எனவும் பேராலய நிா்வாகம் அறிவித்தது.

இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி அளவில் பேராலயத்தின் அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டன. கிறிஸ்தவா்களின் தவக்காலம் நடைபெற்று வரும் நிலையில் பேராலயம் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேராலயம் மூடப்பட்ட அறிவிப்பை அறியாமல் வெள்ளிக்கிழமை பேராலயத்துக்கு வந்த மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள், பேராலயத்துக்கு வெளியில் நின்று புனித ஆரோக்கிய அன்னையை வழிபட்டுச் சென்றனா்.

பேராலய சுற்றுப் பகுதிகள் மற்றும் கடற்கரை என வேளாங்கண்ணியின் அனைத்துப் பகுதிகளும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.



No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024