திருவள்ளுவர் பல்கலை பதிவாளர் சுற்றறிக்கைக்கு ஐகோர்ட் தடை
Added : மார் 15, 2020 23:16
சென்னை: ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், ௧௦ ஆயிரம் ரூபாய் செலுத்தி பதிவு செய்யும்படி, உறுப்பு கல்லுாரிகளுக்கு பிறப்பித்த, திருவள்ளுவர் பல்கலை பதிவாளரின் சுற்றறிக்கைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வேலுார் திருவள்ளுவர் பல்கலை ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், மரிய அந்தோணிராஜ் உள்ளிட்ட மூவர், தாக்கல் செய்த மனு:திருவள்ளுவர் பல்கலை பதிவாளர், ஜனவரி, ௨௪ல், அனைத்து கல்லுாரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், 'பல்கலை இணைப்பு பெற்ற கல்லுாரிகள், வருடாந்திர ஆய்வுக்கு பதிவு செய்ய வேண்டும்.'கட்டணமாக, ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், தலா, ௧௦ ஆயிரம் ரூபாய், ௧௮ சதவீத, ஜி.எஸ்.டி., வரியுடன் செலுத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருடாந்திர ஆய்வுக்கு பதிவு செய்யாத கல்லுாரிகளுக்கு, ௨௦௨௦ - ௨௧ம் ஆண்டுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆய்வு கட்டணம் வசூலிப்பதால், உறுப்பு கல்லுாரிகளும், கட்டணத்தை உயர்த்தும். இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.எனவே, இந்த சுற்றறிக்கையை, ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், வி.கார்த்திக்,வழக்கறிஞர், கே.ஏ.ரவீந்திரன் ஆஜராயினர். பல்கலை பதிவாளர் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு தடை விதித்து, மனுவுக்கு, ஆறு வாரங்களில் பதில் அளிக்கும்படி, திருவள்ளுவர் பல்கலைக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment